திருப்பாவை பாடல் 13:
(தோழி எழுக)
புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். #விளக்கம் : கொக்கின் வடிவத்தில் வந்த பகாசுரன் என்னும் அரக்கனை, அவனது வாய் அலகுகளை தனது கைகளால் பற்றி இரண்டாக கிழித்து எறிந்து அவனை வதம் செய்தார். கொடிய அரக்கனான ராவணனை வதம் செய்தவர். இத்தகைய சிறப்புகளையும், பெருமைகளையும் உடைய நாராயணனின் புகழைப் பாடியபடியே நம் தோழியர் அனைவரும் பாவை விரதம் இருக்கும் களத்திற்கு சென்று விட்டனர். வானத்தில் விடிவெள்ளி தோன்ற, வியாழன் மறைய, பறவைகள் கீச்சிட்டு பாடிக்கொண்டு இருக்கின்றன. தாமரை மலர் போன்ற சிவந்த எழில்மிகு விழிகளை உடைய அழகியே! இவைகளை அறிந்தும் உடல் நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் இன்னும் படுக்கையில் இருக்கின்றாயா? பாவையே இந்த நல்ல நாளில் தனித்து இருப்பதை விடுத்து எங்களுடன் நீராட வா… என்று எழுப்புகின்றனர் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.
Source:web