திருப்பாவை பாடல் 12:
(எழுக எனல்) கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம் :
இளம் கன்றுகளின் கனைத்தலை கேட்டதும், அவற்றின் கனைத்தலின் பொருள் உணர்ந்து அதாவது, அவற்றின் பசியை எண்ணிய எருமைகள் தங்கள் மடி வழியே தொடர்ந்து பால் வழிய அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பாலினால் வீட்டின் வாசலானாது சேறாகின்றது. அத்தகைய எருமைகளுக்கு உரியவரான நற்செல்வனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசல் முன் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை அழிக்க ராமாவதாரம் எடுத்த மனதிற்கு பிடித்த பெருமானின் புகழை பாடிக் கொண்டு இருக்கின்றோம். நீ இன்னும் வாய் திறவாமல் இருக்கின்றாயே. ஆயர்பாடியில் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன் பேருறக்கம்? என்று கேட்கின்றாள் ஆண்டாள்.