திருப்பாவை பாடல் 07…
கதவை திறக்க…!! கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
பொருள் :
கீச்… கீச் என்று தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வலியான் கருங்குருவிகளின் பேசும் ஒலி உமக்கு கேட்கவில்லையா? ஆயர்பாடியில் வாழும் ஆய்ச்சிகள் கண்ணன் உறக்கத்தில் இருந்து எழுந்துவிட்டால் தம்மை எந்த வேலையும் செய்யவிடாமல், தம் மீது சாய்ந்து சாய்ந்து கையை பிடித்து, தயிர்கடைவதை தடுத்து விடுவானே என்று எண்ணி, அவன் எழுவதற்கு முன்பாக தயிரை கடைந்து விடுவோம் என்று எப்படி தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலை வேகமாகவும், விரைவாகவும் கடைந்தார்களோ, அவ்விதத்தில் வேகமாக கைவலிக்க மறுபடியும் மறுபடியும் சோராமல் கடைவதால் அவர்கள் அணிந்திருக்கும் அச்சு தாலி, ஆமைத்தாலி போன்ற ஆபரணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி எழுப்பும் ஓசையும் உமக்கு கேட்கவில்லையா? இவ்வளவு ஒலிகள் கேட்டும் எவ்விதத்தில் நீ உறக்கம் கொள்கிறாயோ? பேய்த்தனம் ஏதோ உன்னை பிடித்துக் கொண்டதோ? நீ நாயக பெண் பிள்ளையாயிற்றே! நாங்கள் கேசவனைப் பாட பாட நீ கேட்டுக்கொண்டே சுகமாக படுத்திருக்கலாமா? ஒளிபொருந்திய முகத்தை உடைய பெண்ணே!! உடனே எழுந்து கதவு திறந்து பாவை நோன்பு நோக்க வாராய்…!! என ஆண்டாள் தன் தோழியரை மட்டுமின்றி எல்லாப் பெண்களையும் அழைக்கிறாள்.
Source: web