திருப்பாவை
பாடல் 04:
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள் :
மேகத்திற்கு அதிபதியாக இருக்கின்ற பர்ஜன்ய தேவனே, கடலில் இருந்து உற்பத்தியாகும் எங்கள் மழையாகிய தெய்வமே, நீ சிறிதும் எங்கள் விருப்பங்களை மறுக்காது நிறைவேற்றுவாயாக… கடலில் புகுந்து அனைத்து நீரையும் முகந்து எடுத்துக்கொண்டு மேலே சென்று ஊழிக் காலத்தில் முதற்பொருள் இருக்கும் எங்கள் நாரணன் உருவத்தை போல் உருவம் கறுத்து வலிமைமிக்க தோள்களை உடையவரும், நாபிக் கமலத்திற்கு உரியவரின் கரங்களில் இருக்கும் பிரகாசமான ஒளியை கொண்ட சக்கரத்தை போல் மின்னலை உருவாக்கியும், அவரிடம் இருக்கும் வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியினை எழுப்பியும்… தோல்வியை தழுவுவதா? இன்றளவும் வெற்றியை மட்டும் நிலைநாட்டிக் கொண்டிருக்கும் சார்ங்கம் உலகளந்த பெருமானின் கரங்களில் வெளிப்படும் அம்புகளின் தொகுதியைப்போல உலகத்தவர் செழிப்புடன் வாழ நீ மழை பெய்ய செய்வாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம் என்று எண்ணி நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராட போகிறோம் என்கிறாள் ஆண்டாள்.
Source:web