திருப்பாவை பாடல் 03:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
பொருள் :
சிறுவனாக சென்று மகாபலி மன்னனிடம் மூன்றடி மண்ணை பெற்று பின்பு விஸ்வரூபமெடுத்து மூன்று உலகங்களையும் தன்னுடைய திருப்பாதங்களால் அளந்த ஓங்கி உலகளந்த உத்தமனான வாமன அவதாரத்தை பற்றி இப்பாசுரத்தில் எடுத்துரைக்கின்றாள் ஆண்டாள். பரமனை பற்றி போற்றி பாடி அதிகாலையில் எழுந்து நீராடி இவ்விரதத்தை இருப்பதினால் வையகத்தில் தீமைகள் எதுவும் நேராமல், மாதம் மும்முறை மழை பெய்து, நீர் இல்லாத இன்னல்களை குறைக்கும் என்றும், அதனால் வயல்வெளிகளில் நெல்மணிகள் நன்முறையில் வளரும் என்றும், மீன்கள் வயலுக்குள் ஊடுருவி துள்ளிக்குதித்து மகிழும் என்றும், குவளை மலர்களில் தேன் குடிக்க வந்த வண்டுகள் அளவுக்கு அதிகமான தேனை பருகி தன்னிலை மறந்து கிறங்கி கிடக்கும் என்றும், இல்லை என்று கூறாமல் பால் சுரக்கும் பசுக்கள் வற்றாத பாலையும், செல்வத்தையும் அளிக்கும் என்று கூறுகின்றாள் ஆண்டாள்.