திருப்பாவை
பாடல் 02:
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
பொருள் :
பாவை நோன்பு மேற்கொள்பவர்களுக்கு ஆண்டாள் இப்பாடலில் சில கோட்பாடுகளை கூறுகின்றாள். நோன்பு மேற்கொள்ளும் பொழுது நாம் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள் பற்றியும், செய்ய வேண்டிய செயல்பாடுகள் பற்றியும் இப்பாடலில் தெரிவிக்கின்றாள். இந்த உலக மாயையில் இருந்து விடுபட்டு பரந்தாமனின் உலகத்தை அடைய நாம் மேற்கொள்ளும் இந்த பாவை நோன்புகளில் முதலில் அதிகாலையில் எழுந்து நீராடுவதும், பரமனின் நாமங்களை பாடுவதும், நெய் உண்ணாமல், பால் அருந்தாமல் விழிகளிலே மை இட்டு அழகுபடுத்தி கொள்ளாமல், கூந்தல்களில் மலர்களை சூடாமல் மற்றவர்களை பற்றி புறம் பேசுவதோ, குறை கூறுவதோ இன்றி இயன்ற அளவிற்கு ஏழை, எளிய மக்களுக்கு தான, தர்மம் செய்ய வேண்டும்.