October 11 2018 0Comment

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில்:

#திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில்:

108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமையான வைணவத்திருத்தலம். இத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

#கோயில் தகவல்கள்:

மூலவர்: நின்ற நாராயணன்

உற்சவர்: திருத்தண்காலப்பன்

தாயார்: செங்கமலத்தாயார். அன்னநாயகி (ஸ்ரீதேவி) அனந்தநாயகி (நீளாதேவி)

அம்ருதநாயகி (பூமாதேவி)

தீர்த்தம்: பாபவிநாச தீர்த்தம், பாஸ்கர சங்க, பத்ம அர்ஜூன தீர்த்தங்கள்

பிரத்யட்சம்:சல்ய பாண்டியன், ஸ்ரீ வல்லபன், சந்திர கேது (புலி) ஸ்ரீதேவி

#மங்களாசாசனம்

பாடல் வகை:

நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

கட்டிடக்கலையும் பண்பாடும்

விமானம்:

தேவசந்ர விமானம்

கல்வெட்டுகள்:

செப்பேடுகள் (6000 பழைமை)

#தலவரலாறு :

பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டியெழ தமது உயர்வை நிரூபிக்க ஸ்ரீதேவி பூமியில் தவம் புரிந்தார். பெருமாள் ஸ்ரீதேவியை மணம்புரிந்தருளிய திருத்தலம். 

மகாலட்சுமித் தாயார் தவம் புரிந்த தலம் அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் தலம்.

பொங்கார் மெல்லிளங் கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே 

தண்காலும் தண்குடந்தை நகரும்பாடித் தண்கோவலூர் பாடியாடக் கேட்டு 

நங்காய் நங்குடிக்கிதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே.

-திருமங்கையாழ்வார்!

ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க ‘தங்காலமலை’ என்னும் இத்தலத்திற்கு வந்து “செங்கமல நாச்சியார்” என்ற பெயரில் கடும் தவம் புரிந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், இவளுக்கு காட்சி கொடுத்து இவளே சிறந்தவள் என்று ஏற்றுக் கொண்டார். திருமகள் தங்கியதால் இத்தலம் “திருத்தங்கல்’ என்ற பெயர் ஏற்பட்டது.

திருத்தங்கல் பெருமாள் கோயில் “தங்காலமலை’ மீது அமைந்துள்ளது.சுவேத தீவில் இருந்த ஆலமரத்திற்கு தந்த வரத்தின்படி பெருமாள் இங்கு மலையாக நிற்கும் ஆலமரத்தின் மேல் தங்கி இருப்பதால் ‘தங்காலமலை” என்றும் “தங்காலப்பன்” என்று மூலவருக்கும் திருநாமம்! மலைக்கோயிலான இதில் இரண்டு நிலைகள் உள்ளன. 

மூலவரான “நின்ற நாராயணப்பெருமாள்’ மேல் நிலையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது நிலையில் செங்கமலத்தாயார் தனி சன்னதியில் அருளுகிறாள். 

இவளுக்கு கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என்ற திருநாமங்கள் உண்டு. இத்தலத்தை பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமங்கையாழ்வார் நான்கு பாசுரங்களாலும் மங்களாசாசனம் 

செய்துள்ளனர்.

விரும்பும் வாழ்க்கைத்துணையை அடைய விரும்புபவர்கள் இத்தலத்து பெருமாளை வணங்கலாம்!

மூலஸ்தானத்தில் நான்கு தாயார்கள் உள்ளனர். அன்னநாயகி(ஸ்ரீதேவி), அம்ருதநாயகி(பூமாதேவி), அனந்தநாயகி(நீளாதேவி), ஜாம்பவதி. இவர்களில் ஜாம்பவதியை இத்தலத்தில் தான் பெருமாள் திருமணம் செய்து கொண்டாராம். 

இத்தலத்தில், தாயார் நின்ற கோலத்தில் மிக உயரமாக காட்சி தருகிறார். ஆழ்வார்கள் இத்தல பெருமாளை திருத்தங்காலப்பன் என்ற பெயரில் தான் மங்களாசாசனம் செய்துள்ளார்கள். 

இத்தலம் குறித்து சிலப்பதிகாரத்தில் வாத்திகன் கதையில் செய்தி இருக்கிறது. 

1300 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில், வைகானஸ ஆகமப்படி பூஜை நடக்கிறது.

கருடாழ்வார் இங்கு நான்கு திருக்கரங்களுடன் உள்ளார்.

 முன்னிரு கரங்கள் வணங்கிய நிலையிலும், பின் கரங்களில் அமிர்த கலசம், வாசுகி நாகத்துடனும் நின்ற கோலத்தில் உள்ளார். தனக்கு எதிரியான வாசுகி பாம்பை நண்பனாக ஏற்று, தன் கையில் ஏந்தியிருப்பது இத்தலத்தில் மட்டுமே. நாகதோஷம் நீக்கும் தலமுமாம்!

இத்தலம் அமைந்துள்ள மலையிலேயே சிவ பெருமான் , முருக பெருமானுக்கும் கோயில்கள் உள்ளன.

#திருத்தங்கல் #நின்ற_நாராயணப்_பெருமாள்_கோவில்

Share this:

Write a Reply or Comment

six + 5 =