February 09 2018 0Comment

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்:


தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்:

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது. இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை.

வரலாறு :

இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர்.

பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

ஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது.

சிறப்புகள் :

மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது. இதைக்காண அன்றைய தேதிகளில் அடியவர்கள் ஏராளமானோர் வருகின்றனர்.

இரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் இரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் கோயிலின் நுழைவாயிலில் படிக்கல்லாக உள்ளது.

பாதாள லிங்கம் :

இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்த பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை தோறும் வழிபாடு செய்தால்  தொழில் மேம்பாடு ஆகியவை கைகூடுவதாக நம்பப்படுகிறது.

சுரகேசுவரர் :

இத்தலத்தில் உள்ள சுரகேசுவரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு.

Share this:

Write a Reply or Comment

nineteen + 6 =