தங்கமகளுடன் ஒரு இரவு

 ஸ்ரீ

krama

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமானத் திருப்பணியின் கடைசி கட்ட தங்கத் தேவையை என்னால் முடிந்த அளவிற்கு நிறைவேற்றும் நோக்கத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நோக்கி செப்டம்பர் 8 – ம் தேதி பயணப்பட்டேன்.

செல்லும் வழியில் நான் அதுவரை சந்தித்திராத சகோதரி ஒருவரை விழுப்புரம் பொன்னுசாமி ஹோட்டல் முன் வைத்து சந்தித்தேன். அவருக்கோ நான் பரிச்சயம் TV – யின் மூலமாக. அவர் ஒரு அரசு பள்ளி ஆசிரியை. கண்ணீர் மல்க, பேசமறந்து மிகுந்த தயக்கத்துடன் என்னிடம் அவர்  சொன்னது

“சார் எனக்கு சொந்த ஊர் திருக்கோவிலூர். இப்போ விழுப்புரத்தில் இருக்கின்றேன். 2011 – ல் உங்கள் Jaya TV நிகழ்ச்சி பார்க்கும் போது ஒரு முறை நீங்கள் பறவையினத்தில் ஒரு குறிப்பிட்ட பறவை எப்படி தன் வாழ்வு முடியும் தருவாயில் இருந்து மீண்டு அது அதன் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றது என்பதை கூறிவிட்டு ஒரு பறவையால் முடிகின்றது என்றால் மனிதனால் முடியாதா? என்று அன்று நீங்கள் கேட்ட கேள்விதான் நான் 2012 – ல் அரசு ஆசிரியராக தேர்வு பெற்றதற்கு மிக முக்கிய காரணமாகி போனது. ஆண்டாளும், உங்கள் கேள்வியும் தான் நான் அடுத்த தளத்திற்கு பயணப்பட்டதற்கான காரணம் என்று கண்ணீர் மல்க அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு தங்கத்தை கொடுத்தார் ஆண்டாளுக்கு கொடுக்க சொல்லி”.

பொதுவாக ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் பேசி விட்டு பிரியும் போது அந்தப் பெண் கையை நீட்டி ஆணுடன் கையை குலுக்க முற்பட்டால் ஒழிய ஆண் கையை நீட்டக் கூடாது என்பது விதி. என்னைப்பொருத்தவரை நான் சில இடங்களில் என்னையும் மீறி அபரித சந்தோஷத்தில் சில பெண்களுடன் நான் முதலில் கையை கொடுத்து கை குலுக்கியது உண்டு. அந்த வகையில் இந்த சகோதரியுடன் நானே முதலில் கையை எடுத்து ஆனந்தமாக அவரிடம் கைகுலுக்கி விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பிரயாணப்பட எத்தனித்தேன் – ஆண்டாளை விழுப்புரத்தில் பார்த்த சந்தோஷத்தில்.

விழுப்புரத்தில் முன் பின் தெரியா அந்தப் பெண்ணின் உரையாடல் எனக்கு  ஏதோ ஒரு வகையில் இனம்புரியா ஆனந்தத்தை கொடுத்ததால் மிகுந்த சந்தோஷத்துடன் எங்கள் பிரயாணம் தொடர்ந்தது.

ஒரு சந்தோஷம் தான் மற்றொரு சந்தோஷத்தை கொண்டு வரும் என்பதில் என்றுமே எனக்கு அதீத நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை மீண்டும் ஊர்ஜிதமாகும் வகையில் கோயம்பத்தூரில் இருந்து ஒரு அழைப்பு. அந்த அழைப்பு மிக பெரிய மட்டற்ற சந்தோஷத்தை அள்ளி தெளித்து விட்டது என்னுள். அது என்ன அழைப்பு என்ற விபரத்தை அடுத்த கடிதத்தில் சொல்கின்றேன்.

நடுவில் தஞ்சாவூர் ஆண்டாள் ராஜாவை பார்த்துவிட்டு பின் அங்கிருந்து திருநெல்வேலி; பின் அம்பாசமுத்திரம் வழியாக ஆலங்குளத்தில் நடந்து வரும் ஒரு கட்டிட வேலையை இரவு 10:30 மணிக்கு பார்த்துவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சுரண்டை வழியாக பிரயாணம் செய்தோம். ஏறத்தாழ காலை 6 மணியில் இருந்து இரவு 12:30 மணி வரை 970 km பிராயணப்பட்டிருந்தோம். ஆனால் எனக்கு துளி கூட அசதி இல்லை. எண்ணம் முழுவதும் ஆண்டாளுக்குண்டான வேலையை எப்படி செய்து முடிப்பது என்பது பற்றியதாகவே இருந்தது. 9-9-2015 முகூர்த்த நாள் ஆதலால் எங்களுக்கு தங்க ஹோட்டலில் அறை கிடைக்கவில்லை. எனவே கட்டி முடித்து காலியாக இருந்த ஒரு வீட்டிற்கு தங்க சென்றோம். போன பின் பார்த்தால் அந்த வீட்டில் Fan கூட கிடையாது. அறையில் வெட்கை அளவுக்கு அதிகமாக இருந்தது; எண்ணவே முடியாத அளவிற்கு கொசுக்களும் இருந்தது; வீட்டிற்கான எந்த லட்சணமும் அந்த வீட்டில் இல்லை. தூங்க என்ன செய்வது என்று யோசித்துவிட்டு சடாரென்று முடிவெடுத்து ஆண்டாள் சன்னதியின் வடகிழக்கு மூலையில் உள்ள அலுவலகத்தில் தூங்க முடிவெடுத்து அங்கு தூங்க சென்றோம். அன்றைய மொத்த சந்தோஷத்திற்கும் காரணமான விழுப்புரம் சகோதரிக்கும், கோயம்பத்தூரில் இருந்து தொலைபேசியில் பேசியவருக்கும் நன்றி சொன்னவாறே தூங்கினோம்.

சொல்லி மாளாது… சொன்னாலும் புரியாது. ஆண்டாளே தலையை தடவி கொடுத்து தூங்க வைத்தது போல் என்றுமே நான் அனுபவித்திராத ஒரு பரிசுத்தமான உணர்வுடன் தூங்க சென்றேன். வரலாறு காணாத தூக்கம். நிம்மதியான தூக்கம். நினைவுக்கு வாரா கனவுகளுடன் இனிமையான தூக்கம் 1:30 மணிக்கு தூங்கியவன் யாரும் எழுப்பாமல் சொல்லி வைத்து எழுந்தாற்போல் சரியாக 4:30 மணிக்கு எழுந்து என்னை தயார்படுத்தி கொண்டு கோவிலுக்குள் 6 மணிக்கு வந்து சேர்ந்து எடுத்து வந்த தங்கத்தை கொடுத்தோம் அலுவலகத்தில்.

என் வாழ்க்கையில் கிடைத்த பெறும் பேறாக ஆண்டாள் கோவில் வாசலில் தூங்கியதை நினைக்கின்றேன். ஆண்டாளுடனே சேர்ந்து படுத்து உறங்கியதாகவே உணர்கின்றேன். என் உழைப்பிற்கான அங்கீகாரமாக ஆண்டாள் கோவிலில் தூங்க நேரிட்டதை நினைக்கின்றேன்.

இருக்கும் போதே இல்லாத நிலை இரண்டு தருணங்களில் ஏற்படும்.

ஒன்று அங்கீகாரம் இழந்து அனாதையாக ஒருவன் ஆக்கப்படும் போதும், மற்றொன்று அனாதையாக இருந்த ஒருவன் அங்கீகரிக்கபடும் போதும் அந்த நிலை ஏற்படும். முதல் நிலையை நான் உணர்ந்து ஆண்டுகள் 20  முடிந்து விட்டது. இரண்டாம் நிலையை நான் ஆண்டாள் கோவிலில் தூங்கிய போது அடைந்ததாக நினைக்கின்றேன்.

அதன் பலனோ என்னவோ அடுத்த நாள் ஆண்டாள் கோவில் தக்கார் என்னை தொலைபேசியில் அழைக்கின்றார். செப்டம்பர் 19 – ம் தேதி திருப்பதி கருட சேவைக்கு இந்த முறையாவது வாருங்கள். ஆண்டாள் மாலை, கிளியுடன் மஹா துவாரம் வழியாக சென்று பெருமாளை தரிசிப்போம் என்று.

நான் அவருக்கு சொன்ன பதில்:

ஐயா! எனக்கு ஆண்டாள் போதும். நீங்கள் சென்று வாருங்கள். அழைப்புக்கு நன்றி! வணக்கம்!

எதுவுமே மனிதனால் திட்டமிடப்பட்ட செயல் அல்ல. ஆண்டாளுடைய திட்டம் அது. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்கப்பெறாத சுகம் அது. வார்த்தைகள் இல்லை நடந்ததை வர்ணிப்பதற்கு…

விவரிப்பேன் இதன் விளைவுகளை விரைவில் உங்களுடன்.

1 kg தங்கம் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பில் செப்டம்பர் 8 காரில் ஸ்ரீவில்லிபுத்தூர் புறப்பட்ட நான் தங்கமகளுடன் ஓர் இரவு தங்க நேரிட்டதன் பலனாக நான் கொடுத்த தங்கத்தின் அளவு என்ன? – விரிவான, அதிசய தகவல்களுடன் அடுத்த கடிதத்தில்.

     ஆண்டாள் மிகப் பெரியவள் – எல்லா புகழும் ஆண்டாளுக்கே

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

three × 3 =