ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்:
சகல திருஷ்டிகளையும் நீக்கி பக்தர்களை காத்தருளும் ஜலகண்டேஸ்வரர் கோவில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் பார்வதி,லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் தலம்.
மூலவர் : ஜலகண்டேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர், சந்திரசேகரர்
அம்மன்ஃதாயார் : அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் : வன்னி
தீர்த்தம் : கங்காபாலாறு, தாமரை புஷ்கரிணி
ஆகமம்ஃபூஜை : சிவாகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வேலங்காடு
மாவட்டம் : வேலூர்
தல வரலாறு :
அக்காலத்தில் சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி இத்தலத்தில் லிங்கம் ஒன்றை வைத்து வழிபட்டார். காலப்போக்கில் லிங்கம் இருந்த பகுதியானது வேலமரக் காடாக மாறியது.
லிங்கத்தையும் புற்று மூடிவிட்டது. அதன்பிறகு பொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டு வந்தார் அவரது கனவில் சிவன் தோன்றி தான் புற்றால் மூடப்பட்டுள்ள லிங்கமாக உள்ளதை சுட்டிக்காட்டி கோவில் எழுப்பும்படி கூறினார்.
பொம்மியும் பயபக்தியுடன் சிவனின் கட்டளைக்கு உட்பட்டு கோவில் எழுப்பினார். இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாகச் கூறப்படுகிறது. எனவே இங்குள்ள சிவனுக்கு ‘ஜலகண்டேஸ்வரர்” என்று பெயர் ஏற்பட்டது.
தல சிறப்பு :
பிரம்மா, திருமால் இருவரின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவன் ஜோதி சொரூபனாக காட்சி தந்த நாள் கார்த்திகை.
இந்நாளில் மும்மூர்த்திகளும் ஒன்றாக காட்சி தந்ததன் அடிப்படையில் இங்கு மும்மூர்த்திகளும் ஒரே பல்லக்கில் அருள்பாலிக்கின்றனர்.
மும்மூர்த்திகளைப் போல முப்பெரும் தேவியரையும் இங்கு தரிசிக்கலாம். இங்குள்ள நந்தியின் முன்பு பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற தீபம் ஏற்றாத அகல்விளக்கை வைப்பது #வித்தியாசமான பிரார்த்தனை.
அம்பாள் அகிலாண்டேஸ்வரி சன்னதி எதிரில் அணையா நவசக்தி ஜோதி தீபம் இருக்கிறது. அம்பிகை தீபத்தின் வடிவில் நவசக்திகளாக அருளுகிறாள்.
இத்தலத்து சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதியின் பின்புறம் திருப்பதி அமைப்பில் வேங்கடேசப்பெருமாள் காட்சி தருகிறார்.
மன்னர் பொம்மி சிவனுக்கு கோவில் எழுப்பியபோது சுற்றிலும் ஒரு பிரம்மாண்டமான கோட்டையைக் கட்டினார். கோட்டையைச் சுற்றி தண்ணீர் நிறைந்த பெரிய அகழி இருக்கிறது. பிரகாரத்தில் கலை அழகு மிளிரும் கல்யாண மண்டபம் இருக்கிறது.
அமைவிடம் :
வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும்.
இதன் எழிலார்ந்த அமைப்பு கண்ணையும் கருத்தையும் கவர்வதாம். இதில் கிழக்குப் பக்கத்தில் மட்டுமே நுழைவாயில் உள்ளது. தற்போது கோட்டை அகழியின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது.
தெற்குப் பக்கத்தில் தண்ணீர் இல்லை. கோட்டையின் உள்ளே மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமான அலுவலகங்கள் உள்ளன. இதன் வடக்குப் பக்கத்தில் கோயில் அமைந்துள்ளது. இக்கோட்டை 136 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது.
நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்ட இதன் ஒரு பாணி விஜயநகர கட்டிடப்பாணியின் இறுதி நிலையைக் கொண்டுள்ளது.