November 11 2018 0Comment

சொக்கன் பக்கம்  -13- 86/4

சொக்கன் பக்கம்
கிறுக்கல் – 13
86/4
என் அப்பா மறைந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு,
நீர் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த மீன் போல இருந்த என்னை,
என் நண்பன் ஒருவன் பார்க்க வந்தான் ஒரு செய்தியோடு….
என் காதலி சொன்னதாக அவன்
என்னிடம் சொன்ன செய்தி இது தான்.
என் சொக்கு எந்த முடிவெடுத்தாலும்
அது சரியாக தான் இருக்கும்.
அவனைப்பற்றி எனக்கு நன்கு தெரியும்
எல்லோரையும் விட
அவன் எந்தளவிற்கு என்னை நேசித்தான் என்று.
அவன் நிச்சயமாக
பணத்திற்காகவோ,
ஊர் ஜனத்திற்காகவோ,
என்னை விட அழகான
பெண் கிடைத்து
இருப்பாள் என்பதற்காகவோ,
படிப்பிற்காகவோ,
நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவோ,
நான் ஏழை என்பதற்காகவோ,
இல்லை வேறு எதற்கோ ஆசைப்பட்டோ
என்னை நிராகரித்து அந்த பெண்ணை
தேர்ந்து எடுத்திருக்க மாட்டான்.
அவன் அப்பாவின் மனம் புண்படக் கூடாது
என்கின்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தான்
இந்த திருமணத்திற்கு அவன் சம்மதித்து இருப்பான்…
அவன் செய்தது மிக சரியான விஷயம்.
காரணம் அவன் அப்பா அவனுக்கு
என்னவெல்லாம் செய்தார்;
எப்படி அவனை வளர்த்தார்;
அவனுக்காக அவன் அப்பா செய்த தியாகங்கள்,
எந்தளவிற்கு அவனை
அவன் அப்பா நம்பினார்
என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.
அவனுக்கு கிடைத்தாற்போல் அப்பா
எனக்கும் கிடைக்கவில்லை….
யாருக்கும் கிடைக்காது என்பதும் எனக்கு தெரியும்.
அந்த வகையில் அவன் அப்பா
தன் செல்ல மகனை
நினைத்து கஷ்டப்படாமல்,
சிறந்த மகன் தன் மகன் என்கின்ற
சந்தோஷத்துடன் இறந்து போயிருக்கிறார்.
சொக்கு என் ஒருத்திக்கு வேண்டுமானால்
மிகப்பெரிய கஷ்டத்தை கொடுத்திருக்கலாம்…
ஆனால் அவன் வேறு ஒரு பெண்ணை
திருமணம் செய்ய எடுத்த முடிவானது
என்னைத் தவிர
என் குடும்பத்தினருக்கும்,
அவன் குடும்பத்தினருக்கும்
குறிப்பாக அவன் தந்தைக்கும்
அவன் எடுத்த முடிவால் சந்தோஷம்
மட்டுமே கிடைத்துள்ளது என்பதே
மறுக்க முடியாத உண்மை….
சொக்கு என் பிரிவையும்,
அவங்க அப்பா பிரிவையும்
தாங்கும் அளவிற்கு வலிமையானவன் அல்ல….
எனக்கு அவனை திருமணம் புரியாமல் போனதற்கு
எந்த அளவிற்கு வலி உள்ளதோ அதே வலி
அவனுக்கும் இருக்கும் என என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
இது தான் Life….
அவனை தைரியமாக இருக்க சொல்லு…
திருமணம் ஆகி வந்த பெண்ணால்
அவன் அப்பா இறந்து விட்டார் என அவன்
வீட்டு ஜனங்கள் சொல்லக்கூடும்…
தயவு செய்து
என் சொக்குவிடம்
என் சொக்குவின் மனைவியை
நன்கு பார்த்துக்க சொல்லு
இந்த இடத்தில் அவன் செய்த ஒரே தவறு
என்று நான் சொல்ல விரும்புவது
என்னிடம் அவன் திருமணம் சம்பந்தமாக
பேசாமல் முடிவெடுத்த விஷயத்தை தான்.
அவன் எடுத்த முடிவை
நேரடியாக அவன்
என்னிடம் சொல்ல கஷ்டப்பட்டு சொல்லாமல்
இருந்து இருக்கலாம்…
It’s ok… நேரிலோ / போனிலோ நான்
ஆறுதல் கூறினால் அவன் மனைவி
கஷ்டப்படுவாள்.
என் சொக்குவின் மனைவி வாழ்க்கை
என்னால் கெட்டுப் போக நானே காரணமாகி
விடக்கூடாது –  எனவே என்னை தொடர்பு கொள்ள
எந்த காலத்திலும் அவன் முயற்சிக்க கூடாது.
நான் யாரையாவது திருமணம்
செய்து கொள்கின்றேன்.
அவனை அவளை நன்றாக வைத்துக்க சொல்லு….
காதல் தோல்வி கூட அனுபவித்து பார்த்தால்
ஒரு வகையான சுகம் தான் என்பதை
மெய்ப்பிப்பது போல் இருந்தது அவளுடைய வார்த்தைகள்.
கடைசி பந்தில் 5 ரன் தேவை என்கின்ற நிலையில்
ஒரு சிக்ஸர் அடித்து ஒரு அணி வெற்றி
பெற்றது போல இருந்தது என் காதலியின்
வார்த்தைகள் எங்கள் காதலுக்கு எழுதிய முடிவுரையானது.
கடைசி அத்தியாத்திற்கு பின் முடிவுரை
எழுதுவார்கள்… எனக்கோ என் வாழ்க்கையின்
முதல் அத்தியாயமே ஒரு சிறப்பான முடிவுரைக்கு பின் தான்…
வழுக்கு பாறைகளை நம்பி நின்ற
வானம்பாடிக்கு வழி
கிடைத்த கதை
உண்மையாகி
இன்று அதுவே என்னுடைய கதையாகியும் போனது…
கரை இல்லாத கடற்கரை கிடையாது
என்கின்ற உண்மை புரிந்தது….
எத்தனையோ முறை குழந்தை
பருவத்திலிருந்து விளையாடியிருக்கிறோம்
குழந்தைகளாகவும் இருந்திருக்கிறோம்.
விளையாடிய போதும், இருந்த போதும் நான்
வட துருவமாகவும், அவள் தென் துருவமாகவும்
தான் இருந்துள்ளோம்…
கால ஓட்டம், இயற்கை,
தத்துவம்,
விஞ்ஞானம்
வட / தென் துருவத்தை ஒன்றிணைத்தது….
விஞ்ஞானத்தை முறியடித்தது மெய்ஞானம்.
வட துருவம் / தென் துருவம் மீண்டும் பிரிந்தது.
எப்பொழுதும் துவங்கிய இடத்தில் தானே
வாழ்க்கை துவங்கும் என்பதற்கு என் கதையும்
விதிவிலக்காக இல்லாமல் போய்விட்டது.
விதி வலியது….
சாதாரண இரும்புதுண்டாக மக்கிபோய் இருந்த
எனக்கு என் காதலியின் உறுதியான வார்த்தைகள்
என்னை விசையூட்டப்பட்ட காந்த துண்டாக மாற்றி விட்டது.
என் தந்தையின் ஒரே ஆசை அவர் பார்த்த
பெண்ணை திருமணம் செய்து கொள்ள
வேண்டும் என்பதால் என் காதலை அவரிடம்
எப்போதும் சொல்ல முடியவில்லை.
சொல்லி இருந்தால் அதற்கு அவர் ஒத்தும்
கொண்டிருந்திருப்பார்
அல்லது
விஷயம் கேள்விப்பட்ட அன்றே மனதளவில்
இறந்தும் போயிருந்திருப்பார்.
மான் இறந்தால்தான் சிங்கம் வாழ முடியும்….
 என்கின்ற இயற்கை சமன்பாட்டு கோட்பாடுக்கு
ஏற்ப ஏன் தந்தை வாழ என் காதலை
கொலை செய்தேன்…
மானை கொன்ற சிங்கத்திற்கு என்ன
தண்டனையோ அதைவிட 100 மடங்கு
தண்டனை  எனக்கு கிடைத்தாலும்
அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன்.
காதல் தோல்விக்கு பிறகு நான்
காதலித்தவளை முன்பு இருந்ததை விட இன்னும்
அதிகமாக இன்று வரை
நேசிக்கிறேன்; காதலிக்கிறேன்; காதலிப்பேன்.
நல்ல காதலை தோற்கடித்தவன் நான்
என்பதால் நரகம் என்று ஒன்று இருந்தால்
கண்டிப்பாக எனக்கு அங்கு ஒரு இடமுண்டு
என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்…
நான் எதிர்பார்க்கவில்லை என்னை காதலித்தவளுக்கு
இவ்வளவு தீர்க்கமான பார்வை இருக்குமென!!…
நான் யோசிக்கவில்லை என்
காதலி யோசித்த அளவிற்கு!!…
இந்த இரண்டும் புரிந்த பிறகு
காதல் தோல்விக்கு பின் என்
காதலியின் வார்த்தைகள்
என்னை சகஜ நிலைக்கு கொண்டு வந்தது…
என் கண்ணீரும் நின்றது…
காதல் தோற்றாகி விட்டது…
கல்யாணம் நடந்து விட்டது…
இப்போ தான் நல்லா இருக்கிறேனே?…
ஏன் இந்த காதல் கதை கடிதங்கள்
என்கின்ற கேள்விக்கு என் பதில்…
நான் என் காதலைப் பற்றி விவரிக்க
இந்த கடிதம் எழுதவில்லை….
என் காதல் கற்று கொடுத்த பாடங்களை
நீங்களும் படிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது…
படித்து முடிப்போம்___காதலை  –  அடுத்த கடிதத்தில்
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

1 × 5 =