October 30 2018 0Comment

சொக்கன் பக்கம் -கிறுக்கல் – 4

கிறுக்கல் – 4 
மனமும், மணமும்:
கனவை எப்படி காண்பது என்று தெரிந்து கொள்வதற்கு முன் நாம் நம் பிரச்சினைகளை எப்படி கையாள்கின்றோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிய வேண்டும் என்று ஆசைப்படுவதை புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு திருமணம் ஆகாத பெண் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவருக்கு ஏன் திருமணம் தள்ளிப் போகின்றது என்று ஆராய வேண்டும். அந்தப் பெண்ணின் திருமணம் தள்ளிப் போவதற்கு மிக முக்கியமான காரணங்களாக அந்த
பெண்ணின் உடல்வாகு
பெண்ணின் படிப்பு
பெண்ணின் பொருளாதார பின்புலம்
பெண்ணின் குடும்ப சூழ்நிலை
பெண்ணின் ஜாதக கட்டங்கள்
என்று சொல்வார்கள் பொதுவாகவும், மேலோட்டமாகவும் பார்க்கும் நிலையில்.
என்னை பொறுத்தவரை பொருந்தா ஜாதக அமைப்பு கொண்டவர்கள் மனம் ஒத்து, திருமணம் புரிந்து இன்றும் மகிழ்ச்சியாக வாழ்வதை நான் பார்த்திருக்கின்றேன்.
மோசமான புற உடல்வாகு கொண்டவர்கள், நல்ல அழகான புற உடல்வாகு கொண்டவர்களுடன் நல் வாழ்க்கை வாழ்வதை இன்றும் பார்த்து கொண்டிருக்கின்றேன்.
பெரிய பணக்கார மணமகன், படிப்பறிவில்லாத ஏழை பெண்ணுடன் அன்பான வாழ்க்கை நடத்துவதை பார்த்து கொண்டிருக்கின்றேன்.
யாருமற்ற அனாதை நிலையில் உள்ள பெண்ணிற்கு, அதி அற்புதமான, நிறைய குடும்ப உறவுகள் கொண்ட மணமகன் கிடைத்து சந்தோஷமாக வாழ்வதையும் பார்த்து இருக்கின்றேன்.
ஆக விதி என்றால் மாறாத ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். மாறக் கூடியது விதி அல்லவே. E = MC2 போல.
அப்படி என்றால் ஒரு பெண்ணிற்கு திருமணம் தள்ளிப் போவதற்கு காரணமாக பொதுவாக குறிப்பிடப்படும் மேற்சொன்ன 5 விஷயங்களையும் புறக்கணித்து திருமணங்கள் நடைபெறுகின்றது என்கின்ற போது, மேற்சொன்ன 5 விஷயங்களும் தான் ஒரு பெண்ணின் திருமணம் தள்ளிப் போவதற்கு காரணம் என்கின்ற விதி அடிப்பட்டு போய் விடுகின்றது.
அப்படி என்றால் இந்த இடத்தில் ஒரு புதிய விதி இருந்து ஆக வேண்டுமல்லவா? அந்த விதி தான் நாம் யாரும் புரிந்து கொள்ள மறுக்கின்ற, நம் எல்லோருக்கும் தெரிந்த,நன்கு தெரிந்த விதி. மனப்பாடம் செய்ய தேவையில்லை இந்த விதியை கையாள.
மனம் இருந்தால் போதும் மார்க்கத்தை அடைய.
அப்படி என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஏற்கனவே சொன்ன திருமணம் தள்ளிப் போக கூடிய பெண்களின் உதாரணத்தையே எடுத்து கொள்ளலாம்.
திருமணம் சற்று தள்ளிப் போனாலே பெற்றோருக்கு பயம் வந்து விடும். உறவினர்களும், தெரிந்தவர்களும் கூடுமானவரை திருமணம் இன்னும் ஆகவில்லையா என்ற கட்டாய கேள்வியை கேட்டு இன்னும் பயத்தை பயங்கரமாக ஆக்கி விடும் போது முதலில் மன பலத்தை இழப்பது திருமணத்திற்கு தயாராக இருக்கும் மணப்பெண் தான்.
அந்த பயத்தில் மொத்த குடும்பமும் கோவில், கோவிலாக ஏறி இறங்குவர். பரிகாரங்கள் எத்தனை சொல்லப்படுகின்றதோ அத்தனையும் செய்வர். காதல் கனவோடு இருக்க வேண்டிய பெண்ணை கிட்டத்தட்ட சாமியாராக்கி, அந்த பெண்ணிற்கு எப்படியாவது திருமணம் நடந்தால் போதும் என்கின்ற நிலைக்கு அந்த பெண்ணை தள்ளி விட்டு விடுகின்றோம்.
இந்த நிலைக்கு வந்த பின் மேலும் திருமணம் தள்ளி போனால் அந்த பெண் தன்னையே அநாவசியம் என்று கருதி வீட்டில் இருக்கும் போது அழுக்கு உடைகளுடன், அலங்காரமற்று தன்னையே மாற்றி கொள்ளும் நிலைக்கு வந்து விடுகின்றாள்.
இந்த கட்டம் வந்த பிறகு கண்டிப்பாக அவளுடைய திருமணம் அவளாலேயே தள்ளிப் போடப்பட்டுவிடுகின்றது.மரணத்தை உயிர் வாழ்ந்து கொண்டே அனுபவிக்கும் நிலை தான் இந்த நிலை. இந்த நிலையில் தனக்கு எதுவமே நடக்காது. எந்த நல்லதுமே தன் வாழ்வில் இருக்காது என்ற எண்ணம் அப் பெண்ணின் உடல் முழுவதும் வியாபித்து விடும்.
வாழும் வாழ்க்கை வெற்று சடங்காக மாறி போய் விடும். சடலத்திற்கு உயிருள்ள நிலை என்று இந்நிலையை சொல்லலாம். கண்டிப்பாக இந்த நிலையில் உள்ள எந்தப் பெண்ணிற்கும் திருமணம் சாத்தியமில்லை.
இந்த நிலையில் உள்ள எந்த பட்டதாரிக்கும் வேலை சாத்தியமில்லை.
இந்த நிலையில் உள்ள எந்த பெண்ணிற்கும் குழந்தை சாத்தியமில்லை.
இந்த நிலையில் உள்ள எந்த மனிதனுக்கும் பணம் சேர்ப்பது சாத்தியமில்லை.
அப்படி என்றால் எப்படி நம் பிரச்சினைகளை கையாள்வது என்று முதலில் தெரிந்து கொண்டு, காணும் கனவை எப்படி காண்பது என்பதை அடுத்த கடிதத்தில் பார்ப்போமா?  ABCD தத்துவத்தின் மூலமாக.
 
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
Dr.ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

4 × four =