October 27 2022 0Comment

சுகுமார்

சுகுமார்

27/10/2022
மொத்த உலகமே
ஒரு முறை என்னை
பார்த்து கேட்டது
உனக்கு எத்தனை
நண்பர்கள் என்று!!!
பாவம் அதற்கு
எப்படி தெரியும்
என் நண்பர்கள்
தான் என் உலகம் என்று…..
அந்த வகையில்
மாணவனாய் இருந்த என்னை மனிதனாக்கிய என் உயிர் அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரி நண்பர்களில்
ஐவரில் ஒருவரான
சுகுமாரை இன்று சந்தித்தபோது எடுத்த புகைப்படம் இது
கடந்த சில நாட்களாக
அப்போலோ ஹாஸ்பிடல் வாசத்தால்
உடல் சோர்ந்து போயிருந்தாலும்
மனம் தளர்ந்து போயிருந்தாலும்
சிந்திப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போயிருந்தாலும்
பல வருடங்கள் பிள்ளை
இல்லாமல் இருந்து
ஊர் பழிக்கு ஆளாகி
சுற்றமெல்லாம் ஒதுக்கிய
பிறகு ஓரமாய் வாழ்க்கையின்
விளிம்பிலே நிற்கும் ஒருத்திக்கு
முழுக்க முழுக்க இறை அருளால்
ஒரு குழந்தை தெய்வாம்சத்துடன் கிடைத்தால் எப்படி வலி மறந்து
வழி கிடைத்த மகிழ்ச்சியுடன்
அந்த ஒருத்தி மகிழ்ந்து அழுவாளோ
அதைவிட கோடி மடங்கு மகிழ்ச்சி எனக்கு இன்று இந்த சந்திப்பினால் கிடைக்கப் பெற்றது
அதற்குக் காரணம் எனக்கே எனக்கான ஐவரில் ஒருவர்
இப்போது இல்லை
இந்த பூமியில் இல்லையென்றாலும்
மீதம் இருக்கும் நால்வரில்
நான் நிலைகுலைந்து
1990களில்
நின்ற போது நான்
இருக்கின்றேன் உனக்கு
என்று என்னை நெக்குருக செய்தவன் தான் இந்த சுகுமார்
இன்று
பணம்
பதவி
அதிகாரம்
இப்படி ஆயிரம் விஷயங்கள்
எனக்கு பின்னால் இருக்கலாம்
அன்றைக்கு எனக்கு இவை
எதுவுமே இல்லாத போது
நான் உனக்கு பின்னால் இருக்கின்றேன் நீ முன்னேறு
என்று என்னை
தட்டிக் கொடுத்தவன்
இந்த சுகுமார்
குகனோடும் ஐவர் ஆனோம்
ராமருடைய வாக்கியம் கம்பராமாயணத்தில்…
எனக்கும் பொருந்தும் அண்ணாமலையில் இவர்களை நான் பார்ப்பதற்கு முன்..
பின் குன்று சூழும் இடத்தில் உள்ள சுக்ரீவனோடு அறுவர் ஆனோம்
அதே ராமருடைய வாக்கியம் கம்பராமாயணத்தில்…
எனக்கும் பொருந்தும்
குன்று சூழும் இடத்தில் உள்ள
அம்பாசமுத்திரத்தில் என்னை
இவர்கள் பார்த்த பிறகு…..
அன்று
அடுத்த வேளை
கேள்விக்குறியாக
தொக்கி நின்ற போது
இன்று
என்னை பார்த்து பலர் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக
அன்றே கேள்விக்குறியை
ஆச்சரியக்குறியாக
மாற்றியவன் சுகுமார்
என் திருச்செந்தூர் திருமணத்தை முருகர் நிச்சயித்து இருந்தாலும்
நிச்சயம் செய்தபடி திருமணம் நடந்ததற்கு காரணமானவன் சுகுமார்
அமெரிக்கா தான் இனி
எனக்கு என்று முடிவெடுத்து
வாழ்ந்து கொண்டிருப்பவன்
ஒரு வாரம் சென்னை வந்தது என்னை பொறுத்தவரை உலகத்தில் எட்டாவது அதிசயம் அல்ல முதல் அதிசயம்…
நானும் என்னை சார்ந்தவர்களும்
பிரமாதமாக சாப்பிடுவதற்கு
பிள்ளையார் சுழி இட்ட சுகுமாருக்கு
இன்று உடல் நிலையை ஓரமாக வைத்துவிட்டு ஒரு வாய் அவனுக்கு பிடித்த அசைவ உணவு வாங்கி கொடுத்ததை வரமாக நினைக்கின்றேன்
வரம் தந்த சாமிக்கு நன்றி
என்னை உயிரோடு அல்ல
உயிர்ப்போடு வைத்திருக்கக்கூடிய இந்த உறவுக்கும் நன்றி
தவமாய் தவமிருந்தாலும் கிடைக்காத நல்ல நண்பனை கொடுத்த என் குல சாமிக்கும் நன்றி
என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள்
P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

eleven − one =