சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில்:
இங்குள்ள பைரவர் எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, கபால மாலை அணிந்திருக்கிறார். அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர்.
உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி, பாலதேவர் இருக்கிறார். பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
இவரது சன்னதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார். காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இதன் மருத்துவ தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில், பைரவருக்கு அணிவிக்கப்படும் வடைமாலை மற்றும் தீர்த்தம் ஆகியவற்றை பிரசாதமாகக் கொடுப்பதில்லை.
வடை மாலையை சன்னதிக்கு மேலே போட்டு விடுகிறார்கள். கலியுக அதிசயமாக இதை பறவைகளும் சாப்பிடுவதில்லை.
அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் தொட முடியாதபடி, கோயிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.
இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். இவர் பைரவர் சன்னதியின் பின்புறம் வன்னி மரத்தின் அடியில் காட்சி தருகிறார்.
இவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். பக்தர்கள் பின்புற முகத்தை பார்க்க முடியாது.
#வன்னி, கிணறு, லிங்கம்:
அம்பாள் சமீபவல்லிக்கு தனிச்சன்னதி இருக்கிறது. தன்னை வேண்டுவோர் அருகில் இருந்து காப்பவள் என்பதால் இவளுக்கு இப்பெயர்.
இத்தலத்தின் விருட்சம் வன்னி. கிணற்று நீர் பிரதான தீர்த்தம். அபலைப்பெண் ஒருத்திக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து மணம் முடித்து வைத்த சிவன், அவளை அவளது கணவன் கைவிட்ட போது, வன்னிமரம், கிணறு மற்றும் லிங்கமாக இருந்து சாட்சி சொன்னார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ளது போலவே, இந்த தலத்திலும் கிணறையும், வன்னியையும் காணலாம். பிரகாரத்தில் அருகருகே நான்கு விநாயகர்கள் காட்சி தருகின்றனர். தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியருக்கும் சன்னதி உள்ளது.
#சிறப்பம்சங்கள்:
இக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், காசிபைரவர் இருக்கிறார். இவர் #நவபாஷாண சிலை வடிவில் காட்சி தருவது #விசேஷம். இச்சிலையை போகர் பிரதிஷ்டை செய்ததாக சொல்கிறார்கள்.
மதுரையில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள திருப்புத்தூருக்கு சென்று அங்கிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள கண்டரமாணிக்கம் செல்ல வேண்டும்.
இவ்வூரிலிருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். இவ்வூருக்கு பஸ் வசதி அதிகமில்லை என்பதால் ஆட்டோவில் சென்று வரலாம்.
Share this: