January 20 2022 0Comment

சிறகுகள் 21 குரு

சிறகுகள் 21

குரு

இன்று நடந்து வந்து கொண்டிருந்த பொழுது என்னை சுற்றி 15க்கும் மேற்பட்ட நாய்கள் நான் ஒரு வருடத்துக்கு முன் அவற்றில் சிலவற்றிற்கு உணவு கொடுத்ததை ஞாபகம் வைத்துக்கொண்டு என்னை பின் தொடர்ந்து வந்தது.

நாளைக்கு வாங்கி தருகிறேன் என்று கூறினாலும் இந்த நாயின் மொழி என்னை பின் தொடர்ந்த எந்த தெரு நாய்களுக்கு புரியவில்லை.

நாய்களும் விடுவதாய் இல்லை
அதேசமயம் எனக்கும் வேறு வழி தெரியாத சூழ்நிலையில்

என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துப் போய் நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு அண்ணாச்சி கடை வந்தது

கையில் பணம் இல்லாததால் அண்ணாச்சியின் மனைவியிடம் கொஞ்சம் மூணு பாக்கெட் பிஸ்கெட் கொடுங்க நான் நாளைக்கு வந்து பணம் தருகிறேன் என்று கூறியவுடன் என்னை நிமிர்ந்து பார்த்து அந்த பெண் ஏங்க கொடுக்கலாமா என்றவாறு கணவரை பார்த்தார்கள்.

அடுத்த வினாடி கடைக்கார அண்ணாச்சி நீங்க எங்க இருக்கீங்க என்று கேட்டபோது வக்கீல் பாஸ்கர் வீட்டுக்கு பக்கத்து வீடு என்று சொல்லிவிட்டு 3 பிஸ்கட் பாக்கெட் மட்டும் கடனாக வாங்கி விட்டு திரும்புவதற்குள்
ஒட்டுமொத்த நாய்களும் கடையை அணைத்தவாறு நின்றதால் அங்கேயே பிஸ்கட் பாக்கெட்டை திறந்து நாய்களுக்கு போட்ட போது அந்த அண்ணாச்சி கொஞ்சம் தள்ளிப்போடுங்கள் கடைக்கு ஆள் வர வேண்டாமா? என்று கேட்ட பொழுது சுர்ரென்று கோபம் வந்தது
அதற்கு காரணம் நான் கடனாக வாங்கியதால்.

நமக்குதான் வாய் அதிகமே!!!!

ஆள் அரவம் இல்லாத இந்த இடத்தில் உள்ள கடைக்கு அதுவும் அஞ்சு நிமிஷத்துல மூடப்போற கடைக்கு இனி யாரு வரப்போறா???
அண்ணாச்சி தெரியாமல் கடன் வாங்கி விட்டேன். கொஞ்சம் பொறுங்கள்.

அஞ்சு நிமிஷத்தில் உங்கள் பணத்தை கொடுத்து விடுகின்றேன்
என்று கூறிவிட்டு சொன்னது போல பாஷா ரஜினி போல கெத்தாக சென்று ஒன்பது ரூபாய் கடனை உடனடியாக அடைத்து விட்டேன்

நாய்கள் இன்று எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள்

எனக்கு பத்து ரூபாய் சாதாரணம் என்றாலும் கொடுத்தவருக்கு
கடன் கொடுத்தவருக்கு அது பெரியதாக இருக்கலாம்
இருந்தாலும் கடன் வாங்கினாலே ஆட்டம் முடிந்து விடும் என்கின்ற உண்மை.
ஆகையால் இனி யாரிடமும் பணம் பொருள் கடன் கேட்க கூடாது

கொடுப்பவன் மேலே
வாங்குபவன் கீழே
எண்ணம் நிச்சயம் இரண்டு பக்கமும் வந்து விடும் ஆகையால் கடன் வாங்கினாலும்/எந்த உதவியை பெற்றாலும்
அவமானம் நிச்சயம்
செருப்படி சத்தியம்

நாய் மொழி கற்றுக்
கொள்ள வேண்டும்

நாவடக்கம் தேவை

எல்லா நாய்க்கும் ஒருநாள் உண்டு என்பதை முன்பே தெரிந்து வைத்திருந்த எனக்கு
எல்லா நாய்களும் ஒரு நாள் ஒன்று கூடி பாடம் நடத்தும் என்பதை இன்று தெரிந்து கொண்டேன்

தைப்பூசத்தில் தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து குருவாக மாறி
நடத்திய இந்த பாடம்

எனக்கு தேவையானது
மிகவும் அவசியமானது.

இனி கவனத்துடன் இருப்பேன் எல்லா நாய்களிடமும்……

என்றும் அன்புடன்
Dr.ஆண்டாள் P.சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

2 × four =