குலசேகர விநாயகர் திருக்கோவில்:
அகத்திய முனிவரை ‘குறுமுனி என்பார்கள். ‘#வாமன’ என்றால் ‘குள்ளமான’ என்று பொருள். ஆம்! விநாயகரும் அகத்தியரும் குள்ள வடிவம் தான். ஆனால் அன்பர்களுக்கு அருளுவதில் முதன்மையானவர்கள்.
தம் மீது ‘#விநாயகர் அகவல்’ பாடியதற்காக அவ்வை பாட்டியை இமைக்கும் நொடியில், விஸ்வரூபமெடுத்து தமது துதிக்கையாலேயே தூக்கி திருக்கயிலாயம் சேர்ப்பித்தவர் விநாயகப்பெருமான்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலாயம் செல்ல ஈசனை வேண்டினார். அவரது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், அயிராவணம் (ஐராவதம் அல்ல) எனும் #வெள்ளை யானையை சிவபெருமான் அனுப்பினார்.
அதில் ஏறி திருக்கயிலாயம் புறப்பட்டார் சுந்தரர். இதை அறிந்த சுந்தரரின் தோழரான சேரமான் பெருமான், தனது குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி, சுந்தரர் ஏறிச் சென்ற யானையைச் சுற்றி வந்து அவரும் திருக்கயிலாயம் புறப்பட்டார்.
சுந்தரரும், சேரமான் பெருமானும் சேர்ந்து வானில் கயிலாயம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருக்கோவிலூர் #பெரியநாயகி சமேத வீரட்டேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள தல விநாயகரான பெரிய யானை கணபதியை, #அவ்வையார் வழிபட்டுக் கொண்டிருந்தார். மேல் இருந்து கீழே பார்த்த சுந்தரரும், சேரமானும், ‘அவ்வையே! நாங்கள் திருக்கயிலாயம் சென்று கொண்டிருக்கிறோம். நீயும் வருகிறாயா?’ எனக் கேட்டனர்.
கயிலாயம் சென்று பரமேஸ்வரனை தரிசிக்க, யாருக்குத் தான் ஆசை இருக்காது. அவ்வைப் பாட்டி ‘நானும் வருகிறேன்’ என்று கூறிவிட்டு, விநாயகர் பூஜையை விரைவாக முடிக்க எண்ணி பதற்றத்துடன் செயல்பட்டார்.
அப்போது அங்கு ஒரு அசரீரி கேட்டது. அந்தக் குரல் பெரிய யானைக் கணபதிக்குரியது. ‘அவ்வையே! நீ எனது பூஜையை வழக்கம் போல் நிதானமாகவே செய்! ‘திருக்கயிலாயம் செல்ல முடியாதோ’ என்ற கவலை வேண்டாம். சுந்தரரும், சேரமானும் கயிலை மலையை அடைவதற்கு முன்னதாகவே, உன்னை அங்கு சேர்த்து விடுகிறேன்’ என்றது அந்த அசரீரி.
தன்பால் விநாயகப்பெருமான் கொண்ட அன்பை எண்ணி மகிழ்ந்த அவ்வை, ‘#சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பல இசைபாட…’ எனத் தொடங்கி பாடினார். அந்த பாடல் தான் ‘விநாயகர் அகவல்’ என்று அழைக்கப்படுகிறது.
உலகை சமன் செய்ய அகத்தியர் தென்திசை வந்தபோது, தென்குமரியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அகத்தியர் பிரதிஷ்டை செய்து பூஜித்த அந்த சிவலிங்கம் ‘அகஸ்தீஸ்வரர்’ எனப் பெயர் பெற்றது. அகத்தியர் பூஜித்த திருத்தலம் ‘அகஸ்தீஸ்வரம்’ எனப்படுகிறது.
இப்படி குறுமுனி அகத்தியர் பூஜித்த அகஸ்தீஸ்வரத்தில் ‘வாமன ரூபன்-மகேஸ்வர புத்திரன்’ என அழைக்கப்படும் விநாயகர் விரும்பிக் கோவில் கொண்டார். அவரே குலசேகர விநாயகர் ஆவார்.
ஓர் இரவில் கட்டப்பட்ட ஆலயம்
அகஸ்தீஸ்வரத்தில் குலசேகர விநாயகருக்கு ஆலயம் எழுப்பியபோது, அப்போதைய திருவிதாங்கூர் மன்னன் தடை விதித்தானாம். இதனால் ஆலயம் எழுப்பிய அடியவர்கள், ஒரேநாள் இரவில் குலசேகர விநாயகர் ஆலயத்தைக் கட்டிமுடித்தனர்.
இதனை அறிந்த மன்னன் இரவோடு இரவாக தம் படைவீரர்களை அனுப்பி ஆலயத்தை இடித்துவிட உத்தரவிட்டான்.
உடனே புறப்பட்டு வந்த படைவீரர்கள், இத்தலத்தை நெருங்கும் போது ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பூஜைகள் ஆரம்பமாகியதால், படைவீரர்கள் கோவிலை இடிக்காமல் சென்று விட்டதாக ஒரு செய்தி உள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து வடமேற்கில் 4 கிலோமீட்டர் தூரத்திலும், சுசீந்திரம் அடுத்துள்ள கொட்டாரத்தில் இருந்து தெற்கில் 2 கிலோமீட்டர் தூரத்திலும் அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் திருக்கோவில் அமைந்து உள்ளது.
Share this: