November 11 2018 0Comment

கிறுக்கல் – 5 – தள்ளுதலும், கொள்ளுதலும்

சொக்கன் பக்கம்
கிறுக்கல் – 5 – தள்ளுதலும், கொள்ளுதலும்
வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் நல்ல காதலர்களிடம் சொல்ல சொன்னால் நான், நீ என்று சொல்லி முடித்துவிடுவர்……
வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் நல்ல கவிஞரிடம் சொல்ல சொன்னால் இரவு, பகல் என்று சொல்லி முடித்துவிடுவார்……
என்னிடம் வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் சொல்ல சொன்னால் தள்ளுதலும், கொள்ளுதலும் தான் வாழ்க்கை என்று சொல்லி முடித்துவிடுவேன்…….
இந்த இரண்டு வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து போனால், அதன் பிறகு நமக்கே நமக்கு என்று நாமே நமக்கு வரவழைத்து கொள்ளும் பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்கின்ற சூட்சுமம் தெரிந்து விடும் மிக எளிதாக…
இந்த விஷயத்தை எளிமையாக புரிந்து கொள்ள, ஒரு சிறிய உதாரணம்:
வேலை இல்லாமல், வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களையே இதற்கு எடுத்துகாட்டாக எடுத்துக் கொள்ளலாம். வேலை இல்லாமல் இருப்பவர்களின் மனநிலை கீழ் சொன்னபடி தான் இருக்கும். ஒரு சிலருக்கு கீழ் சொல்லப்படும் அத்தனை காரணங்களும் பொருந்தலாம். ஒரு சிலருக்கு கீழ் சொல்லப்படும் ஒரு காரணம் மட்டுமே பொருந்தலாம். ஆனால் காரணம் பொருந்தாமல் வேலை இல்லாமல் இருப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த காரணங்களின் பட்டியல் கீழே:
Ø   வேலைக்கு போவதற்கான முயற்சியே எடுக்காது இருப்பார்கள்.
Ø   நல்ல சம்பளத்திற்கு தான் போவேன் என்று தகுதியான வேலைகளை கூட தட்டி கழிப்பார்கள்
Ø   நல்ல வேலைக்கு போகிறவர்கள் எல்லாம் சிபாரிசு மூலம் தான் போகிறார்கள் என்று கருதுவார்கள்.
Ø   நமக்கு சுத்தமாக பேச தெரியவில்லை மற்றும்   வேலைக்குண்டான தகுதி நமக்கு இல்லை என்று கருதுவார்கள்.
Ø   தாழ்வு மனப்பான்மையோடு இருப்பார்கள்.
Ø   வேலைக்குண்டான தகுதியை மேம்படுத்த முயற்சி எடுக்க மாட்டார்கள்.
Ø   குறைந்த சம்பளம் என்று கிடைக்கின்ற வேலையை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
Ø   ஒரே நாளில் அண்ணாமலை ரஜினியாகவும், சூரியவம்சம் சரத்குமாராவும் மாறும் வகையில் அதிர்ஷ்ட வேலையை எதிர்பார்த்து இருப்பார்கள்.(ஒருகால் விக்கிரமன் படம் எடுத்து அதில் கதாநாயகன் வாய்ப்பு கிடைத்தால் வேண்டுமானால் அது சாத்தியமாக ஆகலாம்)
Ø   உழைப்பு குறைவான / அலைச்சல் இல்லா வேலையை எதிர்பார்ப்பார்கள்.
Ø   வேலை தேடுவதை விட்டு, விட்டு வேலை கிடைப்பதற்காக கோவில், குளம், பரிகாரம் என்று தெரு தெருவாக சுற்றி வருவதை முழு நேர வேலையாக ஆக்கி கொள்வார்கள்.
Ø   வேலைக்கு போவதற்கான அவசியம் இல்லாமல் இருப்பார்கள்.
Ø   வேலைக்கு போவதற்கான அவசியம் இருந்தாலும் நீர் நிறைந்த கிணற்றில் போட்ட கல் போல வயிற்றில் பசி இல்லாமல் இருப்பார்கள்.
Ø   தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற அதீத நம்பிக்கையோடு இருப்பார்கள்.
Ø   நமக்கு வேலை கிடைப்பது மிக கடினம் என்கின்ற மனநிலையில் இருப்பார்கள்.
இந்த விஷயங்களில் ஏதோ ஒன்றோ அல்லது பலதோ வேலை தேடும் குறிப்பிட்ட நபரை ஆட்கொள்ளும் போது அவருக்கு அஜாக்கிரதை உணர்வு அதிகரித்து விடும். அஜாக்கிரதை உணர்வு ஒருவருக்கு அதிகரிக்கும் போது அவருக்கு வெட்டி பேச்சும், வீண் அரட்டையும், புறம் பேசுதலும், உழைக்காமல் சொத்து வேண்டும் என்கின்ற மனப்பாங்கும் அதிகரித்துவிடும். இந்த நிலைக்கு வந்து விட்டால் முழுக்கை சட்டையை மடக்கி விட்டுக் கொண்டு, கரடுமுரடான சட்டையை அணிந்து கொண்டு, துணிக்கடையில் கொடுத்த பிளாஸ்டிக் பையுடன் தவறும், தப்புமாக பய-டேட்டா-வை அடித்து கொண்டு, Shoe அணியாமல், இன்டர்வியூ – விற்கு போகும் புத்தி வந்து விடும். வீட்டில் இருக்கும் போது லுங்கி மட்டுமே அணிந்து இருப்பார்கள். நிறைய TV பார்ப்பார்கள். நிறைய வலைதளங்களை பார்த்து பொழுதை கழிப்பார்கள்.
இந்த நிலைக்கு வந்துவிட்ட ஒருவனுக்கு வேலை கிடைக்கணும் என்றால் அது மறைந்த தமிழக சபாநாயகர் திரு.காளிமுத்து அவர்கள் சொன்னது போல்
“கருவாடு மீனாக மாறினால் தான் நடக்கும்
கறந்த பால் தானாக மடி புகுந்தால் தான் நடக்கும்
சூரியன் மேற்கில் உதித்தால் தான் நடக்கும்.”
இந்நிலையில் இப்பிரச்சினையை எப்படி கையாள வேண்டும்:-
Ø  முதலில் வேலை தேடுபவனுக்கு தன் நிறை, குறை தெரிந்து (SWOT- Strength, Weakness, Threat, Opportunity) தன் தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும்.
Ø  தான் படித்த படிப்பிற்கு ஏற்ற நிறுவனம் எது என்று தேடி அந்த நிறுவனத்தில் சேர முயற்சிக்க வேண்டும்.
Ø  ஆங்கில அறிவையையும், ஹிந்தி அறிவையையும் வளர்த்து கொண்டு இந்தியாவில் எந்த மூலையில் தான் படித்த படிப்பிற்கு வேலை கிடைத்தாலும் போக தயாராக இருக்க வேண்டும்.
Ø  நல்ல தகுதியான வேலை நாம் எதிர்பார்க்கும் சம்பளத்திற்கு கிடைக்காமல் போனாலும், அதிக பணம் கிடைக்ககூடிய நம் படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலைக்கு போக கூடாது. (உதாரணமாக, B.E., M.B.A., படித்து விட்டு Call center Agent வேலைக்கு போக கூடாது. அப்படி போகும் பட்சத்தில் நன்கு படித்தவர்களின் கதை செக்குமாடு கதையாக மாறி, அவர்கள் உடல் நிலையும் பாதிக்கப்பட்டு விடும். பின் நாட்களின் வேலை மாறுவதற்கான சூழ்நிலையேயே அவர்களுக்கு அமையாது).
Ø  உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் சாதனை புரிய துடிக்க வேண்டும். துடித்து கொண்டே இருக்க வேண்டும்.அப்படி துடித்தால் தான்  நாம் பிறப்பு சாதாரணமாக சாவதற்கான பிறப்பல்ல சாதித்து பின் சாகவேண்டும்  என்கின்ற மனப்பான்மை வரும்.வந்தே ஆக வேண்டும்.
Ø  அடிவயிறு எரிய வேண்டும் – எப்போதும்
Ø  இன்டர்வியூ – விற்கு போகும் போது எப்படி தயார் நிலையில் இருப்போமோ 24 மணி நேரமும் அப்படி தயார் நிலையில் இருக்க வேண்டும்.
Ø  நம் கனவு முழுவதும் வேலை கிடைத்து விட்டதாக இருக்க வேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்களையும் நமக்கு வேலை கிடைத்து விட்டதாக கனவு காண வைக்க வேண்டும்.
Ø  கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் தினமும் கடவுளுக்கு நல்ல வேலை கிடைத்து, (நிறுவனத்தின் பெயர்)- நிறுவனத்தில் சந்தோஷமாக பணியாற்றி கொண்டு இருப்பதாக சொல்லி நன்றி கூற வேண்டும்.
ஆக மொத்தத்தில் தேவையானதை உள் வைத்துக் கொண்டு, தேவை இல்லாததை வெளி தள்ளி விட்டாலே பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்பது சுலபமாக தெரிந்து வாழ்க்கை மிக இயல்பாக மாறிவிடும். இந்த விஷயம் அனைவருக்கும் பொருந்தும்.
குறிக்கோளை அடைய முற்படும் போது நமக்கு வரும் பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று தெரிந்து கொண்டாகி விட்டது.
பிரச்சினைகளை சமாளித்து கொண்டே வெற்றி கோட்டை தொடுவதற்கு  மிக முக்கிய மூல காரணியான கனவை, காணும் கனவை நாம் எப்படி காண்பது என்பதை அடுத்த கடிதத்தில் பார்ப்போமா?  ABCD தத்துவத்தின் மூலமாக.
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
Dr.ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

sixteen + 5 =