October 15 2018 0Comment

கல் கருட பகவான் திருக்கோயில் – நாச்சியார்கோவில்

கல் கருட பகவான் திருக்கோயில் – நாச்சியார்கோவில்

நாச்சியார் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ நிவாஸ பெருமாள் கிழக்கு முகமாய் நின்ற திருக்கோலம்.பெருமானின் வலப்பக்கத்தில் நம்பிக்கை நாச்சியார், #வஞ்சுளவல்லி என்ற திருநாமத்துடன் தமது வலது திருக்கையில் வரத முத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்கவிட்டுக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

இவ்வாறு நாச்சியார் மூலவர் பெருமாளுடன் மூலஸ்தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் மற்ற எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத வகையில் இத்திருக்கோவிலில் தரிசனம் தருகிறார்.ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கு வலப்பக்கத்தில் நான்முகப்பிரமன் சங்கர்ஷணன் என்ற பெருமாளும் இடது பக்கத்தில் வரிசையாக அநிருநத்தன் ப்ரத்யும்னன் (இவர் மட்டும் சற்றுக் குட்டையான திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார்).
#சாம்பன் என்ற புருஷோத்தமன் என்பவர் மிடுக்காக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவது கூடுதல் சிறப்பாகும்.இது நாச்சியாருக்கு சிறப்புள்ள தலமாகும். ஆஸ்தானத்திலும், திருவிழாக் காலங்களிலும் பெருமாளுக்குச் சற்று முன்னிட்டிருப்பர்.தேரோடும் தெரு முதல் கருவறை முடிய சேர்த்து ஏழு சுற்றுகள் எல்லாத் தலங்களிலும் வடக்கில்தான் பரமபதவாசல் இருக்கும்.
ஆனால் இத்தலத்தில் #திருவுண்ணாழி தெற்கு சுற்றில் தெற்கு நோக்கி பரமபதவாசல் உள்ளது. இத்தனை சிறப்புகள் பெற்றிருக்கும் இத்தலத்தில் மேலும் மெருகூட்டும் விதமாக இறைவன் அருளோடு அனைவருக்கும் அருளாசி வழங்கி வரும் கல் கருட பகவானை வழிபடுவது மிகவும் சிறந்தது.
#கல்கருடன்நாச்சியார்கோயில் ஸ்ரீநிவாஸ பெருமாள் திருக்கோயில் கருவறைக்குக் கீழே மகாமண்டபத்தில் வடபால் தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் பக்ஷிராஜன், பெரிய திருவடி, வைநதேயன், புள்ளரசர் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார்.
மற்றைய திருப்பதிகளில் இல்லாத தனிச்சிறப்பு இவ்விடத்தில் இவருக்கு உண்டு. இவர் சிலை வடிவானவர். சாளக்கிராம வடிவானவர் என்றும் கூறுவார்கள். இத்தலத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கல்கருடன் தரிசனம் மிகவும் புகழ் பெற்றது.பெருமாளுக்கும் திருவாராதனம் கண்டருளப் பண்ணியவுடன் அவர் செய்த அமுதுபடியை இவருக்கும் சமர்ப்பிக்கும் ஆராதனம் நடைபெறும். இவர் மிகவும் வரப்பிரசாதி.
இவருக்கு ஆடி மாதம் சுக்கில பஞ்சமியில் ‘#அமுதகலசம்” என்ற கொழுக்கட்டைப் பணியாரம் செய்து சமர்ப்பித்தால் நினைத்த காரியம் உடனே கைகூடும்.பக்ஷிராஜன் கருடனுக்குத் தனிச்சிறப்பு இத்தலத்தில் உள்ளதுபோல் எங்கும் காண இயலாது. இத்தலத்தில் கருடனின் தனிக் கோயில் மூலஸ்தானத்திற்கு கீழே மகா மண்டபத்தில் தெற்கு நோக்கியுள்ளது.
உள்ளே பக்ஷிராஜன், கருடன் வைநதேயன், பெரிய திருவடி, புள்ளரசு, மங்களாலயன் என்றெல்லாம் புனிதப்பெயர் கொண்டு அழைக்கப்படும்.கருடன் சாளக்கிராமச் சிலைவடிவில் வாகன அமைப்பில், நீள் சிறகும், நீள் முடியும் நீண்டு வளர்ந்த திருமேனியும் கொண்டு பெருந்தோளுடனும், மிகவும் மிடுக்குடனும், வீரத்துடனும், எடுப்புடன் கூடிய தோற்றத்துடன் எழுந்தருளியுள்ளார்.
இவர் எழுந்தருளி உள்ள இடம் 10½ அடி சதுரம் உள்ளது. இவர் வாகன மண்டபத்துக்குப் புறப்பாடு கண்டருளும் காலத்து, ஸ்ரீபாதம் தாங்குவோர் மொத்தம் நால்வராகவும், வாரைகள் சேர்த்தபின் மூலை ஒன்றுக்கு நால்வராகவும், (16 பேர்கள்) பின் எண்மர், பதின்மார்களாகவும் படிகளில் இறங்கியருளும் போது கணக்கற்றவர்களும் ஸ்ரீ பாதம் தாங்கிச் செல்வது காண கண்கோடி வேண்டும்.
இத்தலத்தில் கருடன் எழுந்தருளியது பற்றி மற்றோர் வாய்வழிக் கதையும் கூறப்படுகிறது.ஒரு சிற்பி ஆகம முறைப்படி கருட வடிவம் ஒன்றைச் செதுக்கி வந்தார். முடிவில் இரு பக்கங்களிலும் சிறகுகளைச் செதுக்கிப் பிராணப் பிரதிஷ்டை செய்தார்.அப்பொழுது திடீரென்று உயிர்பெற்ற கருடன் வானத்தில் எழும்பி பறந்ததைக் கண்டு அச்சமுற்ற சிற்பி உடனே தன் கையில் இருந்த கல் உளியை எடுத்துக் கருடன் மேல் வீசி எறிந்தார்.
அதனால் அக்கருடன் மூக்கில் அடிப்பட்டு அதன் பின்பு கலியுக வரதராய் அவர் இறங்கி வந்து அமர்ந்தது நாச்சியார்கோயில் எனும் இத்தலமே ஆகும் என்பது புராண வரலாறு.இவர் கச்யபருக்கும் விநதைக்கும் இரண்டாவது குமாரராக அவதரித்தார். ‘தானாகவே முட்டையிலிருந்து வெளி வந்தார்” எனச் சிலரும், அவசரப்பட்டு தாய் முட்டையைக் குத்தியதால் மூக்கில் சிறிது காயத்துடன் வெளிவந்தார் எனவும் கூறப்படுகிறது.
அதனால் தான் இன்றும் பெருமாள் ஆலயங்களில் உள்ள வாகன ‘கருடன்கள் மூக்கின் அடியில் சிறுபுள்ளி அமைந்திருக்கும்” என்றும் சிலர் கூறுவார்கள்.சூரியனுடைய தேரோட்டியான அருணன் இவரது தமையன் ஆவார். இவருக்கு இரு மனைவிகள் ஒருவர் ருத்ரா மற்றொருவர் ஸுகீர்த்தி. இவர் ஐந்து பிராணன்களின் அதிஷ்டான தேவதை.
இவரது பலத்தையும், பக்தியையும் கண்டு திருமால் இவர் வேண்டுகோளின்படியே இவரை வாகனமாகவும் கொடியின் சின்னமாகவும் ஏற்றுக் கொண்டார். இவரைப் பற்றிய ‘#கருட பஞ்சாஷரீ” மந்திரம் மிகவும் சிறந்தது. இவரது தரிசனமும் குரலும் என்றும் சிறப்புடையது.வியாழன் மாலையிலும், சனி காலையிலும் ஸ்ரீ கருட வழிபாடு மிகவும் சிறப்புள்ளன என்பார்கள்.
ஸ்ரீகருட வழிபாட்டுச் சிறப்பு:
இவரை நினைத்தால் விஷ ஜந்துக்கள் குறிப்பாக பாம்பு இவைகளின் துன்பம் ஏற்படாது. இவரது பெயர் கொண்ட ‘கருடோத்காரம்” என்ற பச்சை மரகதம் மிகவும் சிறப்புடையது.அமுதம் கொண்டு வந்து தாயின் அடிமைத்தனத்தை நீக்கியவர். பாம்புகளில் ஆதிசேஷனுடன் நட்பு கொண்டவர். வைகுந்தத்தில் உள்ள அணுக்கத் தொண்டர்களான நித்திய சூரிகளில் இரண்டாமவர்.முற்காலத்தில் நகர அமைப்பில் மக்களுக்கு விஷ பீடை உண்டாகாமல் இருக்க கருடன் பறப்பது போல் நகர் அமைப்பதுண்டு.
அதற்கு எடுத்துக்காட்டாக முற்காலத்திய தஞ்சை நகரம் அமைக்கப்பட்டு ‘கருடபுரி” என்று அழைக்கப்பட்டது.இவரது திருமேனியில் உள்ள சர்ப்பங்களில், பட்டு முதலிய சித்திர வஸ்திரங்களை சமர்ப்பிப்போர்களுக்கு எண்ணிய நலன்கள் கைகூடும்.கல் கருடன் வருடம் இருமுறை ஸ்ரீநிவாஸ பெருமானுடன் எழுந்தருள்வது காணத் தக்கதொரு காட்சியாகும்.
ஒன்று மார்கழிப் பெருந்திருவிழாவில் நான்காம் திருநாளும், மற்றொன்று பங்குனிப் பெருந்திருவிழாவில் நான்காம் திருநாளுமாகும்.இத்தலத்தில் உறைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமானையும் கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் போக்கும் கல் கருட பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது திண்ணமாகும்.

 

Share this:

Write a Reply or Comment

3 × two =