May 30 2018 0Comment

கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில்:

கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில்:

சுவாமி : அருள்மிகு கம்பகரேஸ்வரர்.

அம்பாள் : அருள்மிகு தர்மசம்வர்த்தினி.

மூர்த்தி : கம்பகரேஸ்வரர், சரபேஸ்வரர்.

தீர்த்தம் : சரபர் தீர்த்தம்.தலவிருட்சம் : வில்வம் மரம்.

தலச்சிறப்பு :

இது சரபேஸ்வரருக்குரிய சிறப்பு வாய்ந்த தலமாகும். கலைச் சிறப்புடைய சிற்பங்கள் இங்கு உள்ளன. சோழர்கள் ஆட்சி காலத்தில் தான் சரபேஸ்வரர் வழிபாடு அறிமுகமாகியது. சரப மூர்த்தி வடிவத்தினைக் கோயில்களில் அமைப்பதாலும் வழிபடுவதாலும் எதிரிகள் அழிக்கப்படுவார்கள், போர்களில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சோழர்கள் சரபேஸ்வரர் வழிபாட்டினைத் துவங்கினார்கள். 

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் இரணியன் என்ற அசுரன் தேவர், மனிதர், விலங்கு முதலிய யாவராலும், எத்தகைய ஆயுதத்தாலும், பகல், இரவு என்ற இரு வேளைகளிலும் சாகாத வரத்தைத் தவமியற்றிப் பெறுகிறான்.

 மமதையின் உச்சத்தில் தானே கடவுள் என்று அறிவித்து மீறுவோரைக் கொல்கிறான். இவனது மைந்தன் ப்ரகலாதன் தீவிரத் திருமால் பக்தன்!அகந்தையின் உச்சத்தில் தன்னைக் கடவுளாக ஏற்க மறுத்த மகனையே கொல்லப் பல்வேறு முயற்சிகள் செய்கிறான். 

பலிக்கவில்லை! ஆத்திரத்தின் உச்சத்தில் மகனிடம் “நீ வணங்கும் நாராயணன் எங்கிருக்கிறான்? அவனைக் காட்டு. உன் கண்முன் அவனைக் கொன்று நானே கடவுள் என்று உனக்கு நிரூபிக்கிறேன்” என்கிறான்.

 ப்ரகலாதன் நிதானமாக “நாராயணன் எங்கும் இருக்கிறான், தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்” என்றான்.

ஆத்திரத்தோடு அரக்கன் அருகிலிருந்த தூணைக் காட்டி “அவன் எங்கும் இருக்கும் தெய்வம் என்றால் இந்தத் தூணில் இருந்து வெளிவரட்டும்” என எட்டி உதைக்க, சிங்கத்தின் தலையும், மனித உடலும் கொண்ட உருவமாய் நரசிம்மர் தோன்றி இரணியன் குடலைக் கீறி அவனை அழிக்கிறார். 

அழித்த பின்பும் ஆத்திரம் தீரவில்லை. அனைவரும் சிவனிடம் காப்பாற்றும்படி முறையிடுகின்றனர்.எட்டுக் கால்கள், நான்கு கைகள், இரண்டு இறக்கைகள், கூர்மையான நகங்கள், பற்கள், யாளிமுகம் ஒருங்கிணைந்த தோற்றமாய் சரபேஸ்வரர் தோன்றுகிறார். 

பாதி உருவம் அகோரப் பறவை, மீதி உருவம் அகோர விலங்கு! சரபேஸ்வரரைக் கண்ட நரசிம்மருக்குக் கோபம் நீங்கிப் பயம் வந்தது. சிவனைத் தாக்க விழைகிறார்.அப்போது சிவனின் தீண்டலில் சினம் தணிந்து இயல்பு நிலைக்குத் திரும்புகிறார் திருமால். 

அனைவருக்கும் ஏற்பட்ட கம்பத்தினை (நடுக்கத்தினை) தீர்த்ததால் சிவன் கம்பகரேஸ்வரர் (நடுக்கம் தவிர்த்த பெருமான்) என்ற திருப்பெயர் பெறுகிறார். 

சரபப் பறவையாய்த் தோன்றியதால் சரபேஸ்வரர்! என பெயர் உருவானதாக கூறுகிறது புராணக் கதைகள்.

வழிபட்டோர் : இந்திராதி தேவர்களுக்கு காட்சி கொடுத்த இடம்.

Share this:

Write a Reply or Comment

6 + two =