கண்ணுடைய நாயகி திருக்கோவில்
கண்ணாத்தாள் கோவில் அல்லது கண்ணுடையநாயகி அம்மன் எனும் கோவில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் வட்டத்தில் சோழநாட்டில் பிறந்த கம்பன் தனது இறுதிக் காலத்தைக் கழித்த நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ளது.
மூலவர் : கண்ணுடைய நாயகி அம்மன்.
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்.
ஊர் : நாட்டரசன்கோட்டை.
மாவட்டம் : சிவகங்கை.
தல புராணம் :
நாட்டரசன் கோட்டையின் தென்புறம் 2 கி.மீ. தொலைவில் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டு பகுதியில் அமைந்த கிராமங்களான பிரண்டகுளம் அல்லூர் பனங்காடியிலிருந்து தினமும் பால் மோர், தயிர் விற்க பலர் நாட்டரசன்கோட்டை வருவர்.
இதன் வழியாக ஒரு யாதவன் பால் எடுத்து வரும் போது நாட்டரசன் கோட்டைக்கு அருகில் வருகையில் ஒரு கல் இடறியதால் பால் குடம் தவறி பால் முழுவதும் கழனியில் கலந்தது.
பிரண்டகுளம் கிராம எல்லையில் வரும் போது விற்பனைக்கு கொண்டு வரும் பால், மோர் குறிப்பிட்ட இடத்தில் தட்டி தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது.
ஒரு நாள் இரு நாள் அல்ல, பல நாட்கள் இது தொடர்ந்தது. அவனுக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் இது நடந்தது.
இது பற்றி சிந்தித்த யாதவர்கள் ஒரு நாள், பால் குடம் கொண்டு வரும் போது நினைவாக அந்தக் குறிப்பிட்ட கல் இடறும் முன்பே மண்வெட்டி கொண்டு அந்த இடத்தை வெட்டினர். பீறிட்டடித்தது குருதி வெள்ளம்!..
அந்த இடம் முழுவதும் செந்நிறக் காடாகியது!.. யாதவர்கள் இது தெய்வ சக்தியின் இருப்பிடம் என்பதை உணர்ந்தனர். அம்பலக்காரரான மலையரசன் என்பவர் செய்தியறிந்து அந்த இடத்திலிருந்து கல்லை முழுவதுமாக வெளியே எடுக்க வைத்தார்.
வெளிப்பட்டது கல்லல்ல.. கல் உருவில் கருணை உருவான அம்மன் கண்ணுடையாளாக வெளிப்பட்டாள். இவ்வாறு கல் இடறும்படி செய்து தன்னைக் கண்ணுற வைத்ததாலும் அம்மன் ‘#கண்ணுடையாள்” ஆனாள் என்றும் ஒரு பெயர்க்காரணம் கூறுகின்றார்கள்.
அந்த நேரத்தில் ஒருவருக்கு அருளாவேசம் வந்து அவர் மூலமாக ‘நான் கண் கொடுக்கும் தெய்வமாக இருப்பேன்!” என்று அம்மன் வாக்களித்தாள். இன்றளவும் அவ்வண்ணமே பக்தர்களின் விழிமலர்களைக் காத்து வருகிறாள் கண்ணாத்தாள்.
அங்கிருந்து எடுத்து வரப்பட்டு அன்னை முதலில் சிவன் கோயிலிலேயே வைக்கப்பட்டாள். மறு நாள் அன்னை வடக்கு நோக்கித் திரும்பியிருக்கக் கண்டு இதுவே அவள் திருவுளம் என்று தனிக் கோயிலில் வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார்கள்.
தலபெருமை :
கோயில் துவக்கத்தில் மூலஸ்தானம் அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவைகள் மன்னர் பரம்பரையினரால் கட்டப்பட்டிருந்தன.
அதையடுத்து நாட்டரசன் கோட்டை நகரத்தார் அம்மனுக்கு அலங்கார மண்டபம் அபூர்வ சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய வெகு உயரமான ராஜகோபுரத்தை அடுத்து சொக்காட்டாஞ்சாரி என்ற கர்ணக்கால் மண்டபம் அபூர்வ வேலைபாடுகளுடன் பொறியியல் நுணுக்கத்துடன் நகரத்தார்களால் எழுப்பப்பட்டது.
கோயிலுக்கு எதிரே அழகிய தெப்பக்குளம் அமைந்துள்ளது. அம்மனுக்கு மர வாகனங்களும் வெள்ளிக்கேடயம்,வெள்ளிக்குதிரை, வெள்ளி ரதம் ஆகியவை இருக்கின்றன.
கண் தெரியாதவர்கள் நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து இக்கோயிலில் தங்கியிருந்து தினமும் அம்மனை வழிபட்டு அம்பாளுக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தத்தைக் கண்களில் விட்டால் கண்பார்வை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கண்ணாத்தாளின் அருளால் பிறக்கும் குழந்தைகளுக்கு கண்ணன், கண்ணப்பன், கண்ணகி, கண்ணாத்தாள் என்றும் பெயர் சூட்டுகிறார்கள்.
Share this: