கடிதம் – 40 – அதுவின்றி எதுவும் இல்லை

என் பெண்ணிற்கு B.E., படிக்க PSG Tech – கோவை & Sairam – சென்னை என இரண்டு கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு இருந்தது.

என் பெண் தேர்ந்தெடுத்தது Sairam Engineering College – சென்னை…

10/8/2017 அன்று அங்கு அவளை சேர்க்க போனபோது தான் எனக்கும் வயதாகின்றது என்பதை நான் முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

கூட்டத்தில் ஒருவனாக, உருவத்தில் சிறுவனாக என்னை நான் அறிந்த நாள்.

ஒரு வேலை சாப்பாடுக்காக வரிசையில் நின்று ஒரு சாதாரண அப்பாவாக அந்த கல்லூரி அன்று கொடுத்த காலை உணவை வாங்கி சாப்பிட்ட பின் கிடைத்த நேரத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் என்னை நானே சுய பரிசோதனை செய்து கொண்ட நாள்.

நான் படித்த சாந்தோம் பள்ளி நினைவுகள், நான் படித்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தை பற்றிய சிந்தனைகள் நீண்ட நாளுக்கு பிறகு வந்து போன நாள்.

என் மகளை கல்லூரியில் சேர்க்க சென்ற போது ஒரு வித பதட்டம் – ஏனோ இது வரை அப்படி ஒரு பதட்டத்தை நான் உணர்ந்தது இல்லை.
சற்று பின்னோக்கி யோசித்து பார்க்கின்றேன்.

303 ம் எண் திருவள்ளுவர் போக்குவரத்து கழக பேருந்தில் சென்னை to சிதம்பரம் பிரயாணம் என் அப்பா மற்றும் ஒரு நெருங்கிய உறவினருடன்.. இப்போது எனக்கு எப்படியோ அப்படியே என் அப்பாவிற்கும் அப்போது இருந்து இருக்கும் என முழுமையாக உணர்கின்றேன்.

மாணவனாக சென்றேன் – சூது, வாது இல்லாமல்….
ஒரு வானம்பாடி வழி தெரியாமல் வழுக்கு பாறையில் நின்றது போல்…

கல்லூரி என்னை புரட்டி போட்டது.

அரசியல், ஜாதி, இனம், பொய், புரட்டு என நிறைய பார்த்தேன்.

சிலரை சிரிக்க வைக்க நிறைய பேரை அழ வைத்தேன்.

சிலரை திருப்திப்படுத்த நிறைய நண்பர்களை இழந்தேன்.

முதல் முன்று வருடங்கள் நல்ல மனிதர்களை இழக்கவும், என்னை தொலைக் கவுமே சரியாக இருந்தது.

சரியான நண்பர்களை அடையாளம் காணவே ஏறத்தாழ முன்று வருடங்கள் எனக்கு தேவைப்பட்டது.
கடைசி வருடம் நல்ல ஆறு நண்பர்கள் எனக்கே எனக்காக….

எப்படி அந்த ஆறு பேர் எனக்கு கிடைத்தார்கள் என்பது என்னை பொறுத்தவரை இன்று வரை கேள்வி இல்லா விடை.

அவர்களுக்கு என்னை விட பிறரை கூட பிடித்து இருக்கலாம். ஆனால் ஏனோ அவர்களை தவிர வேறு யாரிடமும் எனக்கு பெரிய பிடித்தம் இல்லாமல் போனது.

25 வருட ஓட்டம் …..

ஆறு ஐந்தாகி போன போது மரணத்தின் மேல் பயம் வந்தது.

ஐந்தில் ஒன்று இருக்கும் இடம் தெரியாமல் போனது.

மீதம் உள்ள நால்வரும் நான்கு மூலையில் நெருக்கமான உறவு அவர்களுடன் தொடர்ந்தாலும் ஏனோ இப்போதெல்லாம் அவர்களுடன் கூட ஒரு ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேச முடிவதில்லை…..

வாழ்க்கை அவ்வளவு தான் என ஒரு வட்டம் போட்டு அதற்குள் வாழ நினைத்தேன். ஒரு கட்டத்தில் அந்த வட்டம் தான் வாழ்க்கை என்று வாழ்க்கையை முடிப்பது தவறு என்று புரிந்து, அறிந்து கொண்டேன்.

எனக்கு வாய்த்த / கிடைத்த / அமைந்த இந்த அதி அற்புதமான வாழ்க்கைக்கு எனக்கு வாய்த்த / கிடைத்த / அமைந்த உண்மையான ஆறு நண்பர்கள் தான் காரணம்.

நான் முதல் மூன்று வருடங்கள் ஒழுங்காக இருந்து இருந்தால் ஒரு வேலை எனக்கு என்னுடன் படித்த அத்தனை பேரும் சிறந்த நண்பர்களாக ஆகி இருக்க கூடும்.

காரணமின்றி காரியம் இல்லை….

இதுவும் கடந்து போகும்….

ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்…..

என் மகளுக்கு நான் என் அனுபவத்தில் நான் கற்ற பாடமான இந்த மூன்றையும் தான் நான் புரிய வைக்க வேண்டும்……

அதுவின்றி எதுவும் இல்லை என்பது நான் சொல்லி வருவதல்லவே!!!!!!!………

கனத்த இதயத்துடன் கிளம்பினேன் கல்லூரியை விட்டு.

கற்று கொள்வாள் அவளாகவே என்கின்ற ஒத்தை நம்பிக்கையுடன்….

என்றும் அன்புடன்
ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

twenty − 13 =