கடிதம் – 32 – மார்டினும், இராமரும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

10-11-1483 – ல் பிறந்து 18-2-1546 – ல் மறைந்த மார்டின் லூதர் கிங் புராடஸ்டன்ட் இயக்கத்தின் தலைவராக இருந்து கொண்டு, போப்பாண்டவருக்கு எதிராக பிராசாரம் மேற்கொண்டதால் பல்வேறு வகையான துன்பங்களையும், கஷ்டங்களையும் அனுபவித்து கஷ்டப்பட்டார். அது போன்ற ஒரு தருணத்தில் மிகுந்த மன இறுக்கத்துடன் ஒரு முறை அவர் காணப்பட்டதை கண்டு அவருடையை மனைவி, கருப்பு வண்ணம் கொண்ட உடையை அணிந்து கொண்டு அவர் முன் வந்து நின்றார். அதை கண்டு மார்டின் திகைத்து போய் “ஏன் எப்போதும் இல்லாமல் இன்று புதியதாக கருப்பு வண்ண உடையை அணிந்து இருக்கின்றாய்?” என வருத்தம் கலந்த ஆச்சரியத்துடன் கேள்வியை தன் மனைவியிடம் கேட்டார்.

அதற்கு மார்டினின் மனைவி,

“கடவுள் இறந்துவிட்டார். கடவுள் இறந்து போனதற்காக துக்கம் அனுச்டிக்கிறேன்” என்று பதில் சொன்னார். மார்டினுக்கு பயங்கர கோபம் வந்து தன் மனைவியிடம் பைத்தியம் மாதிரி பேசாதே. அதெப்படி கடவுள் இறக்க முடியும் என்று மார்டின் கேட்க, உடனே மார்டினின் மனைவி ஆம் நான் பைத்தியம் தான். புத்தி பேதலித்து தான் போய் விட்டேன். நான் சொல்வது தவறு என்றால், கடவுள் இறக்கவில்லை என்றால், கடவுள் உயிரோடு தான் இருக்கின்றார் என்றால் நீங்கள் ஏன் எப்போதும் இல்லாத வகையில்

மன இறுக்கத்தோடு இருக்க வேண்டும்?

நம்பிக்கையற்று இருக்க வேண்டும்?

துயரத்தோடு இருக்க வேண்டும்?

மனக் கஷ்டப்பட்டு இருக்க வேண்டும்?

பயப்பட்டு வாழ்க்கை நடத்த வேண்டும்?

அவர் உயிரோடு இருந்ததால் இவ்வளவு நாள் காப்பாற்றபட்ட நாம், அவர் உயிரோடு இருப்பதால் இனிமேலும் காப்பாற்றபட்டே ஆக வேண்டும் என்பது தானே அர்த்தம். மனைவி சொன்னதை கேட்டு மார்டின் தன் தவறை உணர்ந்து தன்னை அன்று முதல் முழுவதுமாக திருத்தி கொண்டார். இந்த சம்பவத்திற்கு பின்பு அவர், அவர் வாழ்க்கையில் சரித்திரம் படைத்தார் என்பது தானே உலகம் கண்ட உண்மை.

ஆக வாழ்க்கையில் வெற்றி பெற, முதல் விதி கொடுக்க வேண்டும் என்றால் இரண்டாம் விதி நம்பிக்கை நம்மேலும் இருக்க வேண்டும். நம்பிக்கை என்பது நம்மேல் இருக்கும் அளவை விட சற்று அதிகம் கடவுள் மேலும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மேற் சொன்ன எடுத்துகாட்டு. தன்மேல் நம்பிக்கை என்றால் எல்லோரும் அந்த கருத்துக்கு உடன்பட்டு விடுவர். ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்களே என்று நீங்கள் என்னிடம் கேட்டால் அதற்கு என்னுடைய பதில்

  1. கடவுள் நம்பிக்கை உள்ள சராசரி மனிதர்களை விட கடவுளை பற்றி அதிகம் பேசுபவர்கள், கடவுள் பெயரை அதிகம் உச்சரிப்பவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களே.
  2. ஏதோ ஒரு காலகட்டத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் வாதம், விவாதமாக மாறும் போது கடவுளின் பெயர் வழக்கத்திற்கு மாறாக அதிகம் உச்சரிக்கப்படும் வகையில் அமைந்து போய் விடுகின்றது. அப்படி நடந்தது என்றால் அதன் பலாபலன் யாருக்கு போய் சேரும் என்பதை நான் கீழே சொல்ல போகும் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படித்தபின் நீங்களே முடிவு எடுத்து கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு தலைவர், ஒரு கூட்டத்தில் பெரும்பான்மையான இந்துக்கள் வணங்கும் இராமரை குடிகாரர், எந்த கல்லூரியில் படித்தவர் என்று கேட்கிறார். அவர் கேட்ட மாதம் புரட்டாசி மாதம்.

பொதுவாக புரட்டாசி மாதம் 50 கோடி இராமநாமம் உச்சரிக்கப்படும் என்றால், இந்த தலைவர் இராமரை திட்டிய உடன் இராமரை வணங்கும் அத்தனை பேரும், உலகம் முழுவதும் இருந்து அந்த தலைவருக்கு மறுப்பு வெளியிடுகின்றார்கள். இராமர் நல்லவர். இராமர் எங்கள் கடவுள். இராமர் சுத்தமானவர்…. etc., என்று அந்த மாதம் முழுவதும் எல்லோரும் இராமர், இராமர் என்று சொன்னார்கள் என்பதை விட சொல்ல வைத்து விட்டார் அந்த தலைவர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆதிசங்கரரும், இராமானுஜரும் செய்ய முடியாத விஷயத்தை படிப்பறிவில்லாத, கடவுள் நம்பிக்கையற்ற அந்த தலைவர் செய்து விடுகின்றார். 50 கோடி இராமநாமம் சொல்லப்பட வேண்டிய இடத்தில் 5000 கோடி இராமநாமத்தை சொல்ல வைத்து விடுகின்றார்.

–    நிந்தனை ஸ்துதி பற்றி தெரிந்தவர்களுக்கு இந்த விஷயம் நன்கு புரியும்.

–    இது நடந்த விஷயம் மற்றும் உண்மையான உதாரணம் என்பதால் பலாபலன் யாருக்கு போய் சேரும் என்கின்ற முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் என்னைப் பொறுத்த வரை வாழ்க்கையில் வெற்றி பெற தன் மேல் நம்பிக்கையும், கடவுள் மேல் நம்பிக்கையும் அதி அவசியமான இரண்டாம் விதி என்பதால் நம்பிக்கை பற்றியும் கடவுளிடம் இருந்தும் நாம் என்ன கற்று கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் அடுத்த கடிதத்தில் A. B. C. D., தத்துவம் மூலம் பார்ப்போமா?!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

10 + 1 =