கடிதம் – 22 – அதிசயமும், பீனிக்ஸ் பறவையும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

புகை பிடிப்பவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை அது தவறு என்று கருதி விட்டு விட்டாலும் ஏற்கனவே இருந்த புகை பழக்கத்தின் தீய விளைவுகள் குறிப்பிட்ட காலம் வரை அல்லது ஆயுள் முழுவதும் புகை பிடித்து அதனை கைவிட்டவரின் உடம்பிற்கு ஏற்படுத்துவது போல் தான் நம் தீய எண்ணங்களும் / தீய குணங்களும் நமக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை அல்லது ஆயுள் முழுவதும் தீயதை கொடுக்க / ஏற்படுத்த வல்லது என்பதை சேதமும், பூதமும் கடிதத்தில் பார்த்தோம். கடிதத்தின் முடிவில் காற்று தத்துவத்தை விளக்கி கூறி என் வெற்றிப் பயணத்தின் முதல் படிக்கட்டை எப்படி வெற்றிகரமாக கடந்தேன் என்பதை கூறுவதாக கூறி இருந்தேன்.

பஞ்ச பூதங்களில் காற்றுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. பஞ்ச பூதங்களிலேயே எப்படி காற்று மட்டும் மற்றவைகளுடன் தன் இருப்பையும் உணர்த்தியவாறே, தன் நிலை மாறாமல் சேர்ந்து இருந்து கொள்கின்றதோ, அது போல் தான் நாமும் இருக்க வேண்டும். இருந்தால், இருந்து இருந்தால், இருப்பின் நம் இருப்பின் உண்மை உள்ளம் உள்ளவர்களால் உணரப்படும். உணரப்பட்டால் நம் உள்ளம் உலர்ந்து போகாது. எண்ணிய எண்ணம் எண்ணமாக மட்டும் இல்லாமல் நல்லவைகளாக நாளும் மாறி நமக்கும் கிடைத்திடும். இது அனுபவ உண்மை.

வாழ்க்கையில் விடியலைப் பார்க்க, அனுபவிக்க நினைக்கும் அனைவருக்கும் நம் வாழ்க்கை விளையாட்டில் தாயம் விழும் என்பது வெறும் நம்பிக்கையாக இருக்க கூடாது. ஆழமான எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும். அடுத்தவர்கள் மாற வேண்டும் என நினைக்காமல் நம்மை “காற்று” போல் மாற்றி வைத்து கொண்டாலே, காற்று போல் கரைந்து போனாலே நமக்கு அதிசயம் கண்டிப்பாக நடக்கும். அதிசயம் என்கின்ற வார்த்தையை அது + செய்யும் என பிரித்து பார்த்தால் அது என்பது பரம் பொருள், இறைநிலை, ஆண்டாள், பெருமாள், சிவன், சக்தி, முருகர், புத்தர், இயேசுநாதர், அல்லா, etc., – ஐ குறிக்கும். அது என்பது உங்கள் இஷ்டப்படி மேற்சொன்ன எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். ஆனாலும் அதை மட்டும் முழுவதுமாக நம்பினால் அதுவே எல்லாவற்றையும் செய்து கொடுக்கும் நமக்கு.

கஷ்ட ஜீவனத்தின் உச்சகட்டத்தில் இருந்தபோது, “எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலையில் நான் என்னை அறியாமலேயே ஆண்டாளை நம்பினேன். பார்த்த முதல் நொடியே என்னுள் இருந்த மரண பயத்தை நீக்கி

நீ சாகப் பிறந்தவன் அல்ல….

நீ சாதிக்கப் பிறந்தவன்!!…

என்கின்ற விதையை என் அனுமதியில்லாமலேயே என்னுள் விதைத்தவள் ஆண்டாள். நான் அந்த நொடிக்காக இந்த பிறப்பில் பெரிதாக மெனக்கிட்டதில்லை என்கின்ற உண்மை ஒருபக்கம் இருந்தாலும் வேதத்தின் வித்தையே தனதாக்கியவளான என் பூரண தாய் ஆண்டாள் எனக்குள் என்னை உணர்த்தி தன்னையே வித்திட்டாள் என்பது தான் பெரிய அதிசயம் மற்றும் உண்மை.

இதில் பொதிந்துள்ள உண்மை என்ன தெரியுமா?

என்னைப் போன்ற தவறுகளும், தப்புகளும் செய்து குவித்து வாழத் தகுதியற்ற மானிடப் பிறவிகளுக்கே இந்த விஷயம் எளிதில் கிடைக்கின்றது என்றால் அதே உண்மை உங்களைப் போன்றவர்களுக்கு புரிந்து கிடைக்காமல் போய் விடுமா என்ன?

கிடைக்கும். கண்டிப்பாக கிடைக்கும். கண்டிப்பாக கிடைக்க  நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் நம்ப வேண்டும். கண்டிப்பாக நம்மை படைத்தவனை மட்டும் நம்ப வேண்டும்.

தன்மேல் நம்பிக்கை இல்லாத என் சகோதர, சகோதரிகளே!!!

நம்புங்கள் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க, உங்களை எப்போதும் வெற்றி பெற வைக்க, உங்களை சந்தோஷப்படுத்த, உங்களை ஆனந்தப்படுத்த, உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற, உங்கள் கோரிக்கைகளை ஏற்று கொள்ள, உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்ய, பூரணத்துவத்தை உணர்த்த உங்களுக்காக ஒருத்தி காத்து கொண்டிருக்கின்றாள். என் குழந்தைகள் என்னிடம் கொஞ்ச வரமாட்டார்களே? என்னை ஆரத் தழுவி கொள்ளமாட்டார்களா, நானும், என் கணவரும் குடும்பம் நடத்தும் அழகையும், எங்கள் அன்னியோனியத்தையும் நீங்கள் எல்லாம் பார்த்து எத்தனை நாளாகி விட்டது என்று உங்களுக்காக உங்கள் வருகைக்காக வழிமேல் விழி வைத்து உங்களுடைய அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்ற ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஏங்கி காத்து கொண்டிருக்கிறாள் நம் பெரியாழ்வார் பெற்றெடுத்த பேதை பெண்.

இந்த உண்மையை நான் பரிபூரணமாக புரிந்து கொண்டேன். புரிந்து கொண்ட நொடியே நெருப்பில் விழுந்து உயிர்விட்டு பின் அந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையாக மாறிவிட்டேன். மனிதனாக இருந்து பீனிக்ஸ் பறவையாக நான் மாறிய உடனே செய்த ஒரே ஒரு விஷயம் தான் என்னை இந்தளவிற்கு பிரயாணப்பட வைத்திருக்கின்றது. ஆள்பலம், அரசியல் பலம், பண பலம், பொருளாதார பலம், உறவுகள் பலம் என என்னை எனக்கே தெரியாத அளவிற்கும் மற்றும் இது எப்படி நடந்தது என்று புரியாத அளவிற்கும் மிக பெரிய உயரத்திற்கு கொண்டு போய்விட்டது.

நீங்கள் என்னைப் போல் பீனிக்ஸ் பறவையாக மாறி இவ்வுலகை கட்டி ஆள வேண்டுமா? உங்கள் உழைப்பு கொண்டு இவ்வுலகையே நீங்கள் கட்டி போட வேண்டுமா? வேண்டும் என்பது விடையாக இருப்பின் அடுத்த கடிதத்தில் அந்த ஆச்சரிய உண்மையின் திரை விலக்கப்படும்.

அந்த உண்மையை கண்டபின் இந்த 4 எழுத்தை மட்டும் மறந்து விடாதீர்கள். அந்த எழுத்துக்கள்

“A   B   C   D”

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

2 + 2 =