ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்…
நான் இதற்கு எழுதிய கடிதங்களில் (கடிதம் 16, 17, 18, 19, 20) நான் பட்ட கஷ்டம், கஷ்டத்தில் இருந்து மீண்டது, பின் வாஸ்து என்கின்ற விஷயத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி அடுத்த கட்டம் நகர்ந்து, அப்படி நகர்ந்த பிறகும் என்னிடம் வாஸ்து பார்த்தவர்கள் யாரும் அவர்கள் வீட்டு பூமி பூஜைக்கு என்னை அழைத்ததே இல்லை என்றும் நான் செய்யும் உதவிகளை கூட கொச்சைப்படுத்தினார்கள் என்றும் வருத்தப்பட்டு கூறி இருந்தேன். மேலும் இது போன்று நூற்றுக்கணக்கான கஷ்டங்கள் எனக்கும் இருக்கின்றது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதே போல இருக்கும் என்றும் எழுதி இருந்தேன்.
இதை படித்து விட்டு நிறைய பேர் தொலைபேசியிலும் / மின்னஞ்சல் மூலமாகவும் என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். நிறைய நண்பர்கள் நீ எப்போதுமே சந்தோஷமாக இருக்க கூடியவன். இது போன்ற விஷயங்களை எழுதியதால் மற்றவர்கள் முன்னிலையில் அது உன்னை மிக சாதாரணமானவனாக காண்பித்தது மட்டும் அல்லாமல் அடுத்தவர்களையும் புண்படுத்தியது போன்ற ஓர் உணர்வை நீ எழுதிய கடிதங்கள் ஏற்படுத்தி விட்டதாக சொல்லி இதை தவிர்த்து, இனிமேல் தன்னம்பிக்கை சார்ந்த சந்தோஷ விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அன்பான அறிவுரைகளையும் சொன்னார்கள். தீயை தொடாத மனிதர்களே இருக்க முடியாது – பிறந்ததற்கு பின். தொட்டதால் தான் தீயின் மேல் அனைவருக்கும் பயம். ஒரு முறை தொட்ட பின் கிடைக்கும் அனுபவம் வாழ்நாள் முழுவதும் போதனையாக இருப்பதை போல் தான் என் கடிதங்களும். வலியை உணராமல், வலி இல்லாமல் வலிக்கு மருந்து சாப்பிடுபவர்கள் யாரும் உண்டா இவ்வுலகில்? காய்ச்சல் என்று வந்த பின் தானே மருத்துவம் நம்மை சந்திக்கின்றது. அதே போல் நான் இது வரை எழுதிய விஷயங்களும், உண்மை எப்போதும் சுடும் அளவிற்கு வலியை தரக் கூடியது. முன் – வலி கிடைத்தால் தான் பின் – வலிமை கிடைக்கும் என்பதை உணர்த்தவே இந்தக் கடிதங்கள்.
இருந்தாலும் இந்த இடத்தில் நான் பணிவன்போடு கூறிக் கொள்ள விரும்புவது எதையும் முழுவதுமாக படித்து முடிப்பதற்கு முன் முன்னுரை எழுத கூடாது / எழுதவும் முடியாது. காரணம் நான் என்னுடைய / நம்முடைய பிரச்சினைகளை மட்டுமே சொன்னேன். பிரச்சினைகளுக்கு காரணம் யார்? என்ற கேள்விக்கான விடையை இப்போது சொல்கின்றேன் நான் இவ்வுலகில் காணும் அத்தனை பிரச்சினைகளுக்கும் நான் மட்டுமே காரணம். நான் மட்டுமே ஒரே காரணமாகவும் இருக்க முடியும். எனக்குள் எழும் என்னுடைய அத்தனை கேள்விகளுக்கும் முழுமையான பதில் என்னை தவிர வேறு யாரிடம் இருக்க முடியும்? எனக்கு இவ்வாறு என்றால் உங்களுக்கும் அவ்வாறே.
ஆங்கிலத்திலேயே எனக்கு பிடித்த இரண்டு பழமொழிகள்
- One will not; Two cannot Quarrel (ஒருத்தருக்கு இஷ்டம் இல்லையென்றால் அவர் இன்னொருவருடன் சண்டை போட முடியாது).
- Peace is so hard to find because it is under your nose (அமைதியை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் காரணம் அது உன் மூக்கிற்கு கீழ் உள்ளது) – அதாவது வாய் தான் எல்லோருடைய எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் காரணம்.
மனித வாழ்கையை “தத்துவம்சி” என்கின்ற ஒரே வார்த்தையில் நம் உபநிபதங்கள் 2500 வருடத்திற்கு முன்னே சொல்லி விட்டது.
“தத்துவம்சி” என்ற வார்த்தையை தத் + துவம் + அசி என்று பிரிக்கலாம்.
துவம் என்றால் நீ
தத் என்றால் அது
அசி என்றால் ஆகிறாய்
நீ அது ஆகிறாய்.
நீ என்னவாக ஆக நினைக்கிறாயோ அதுவாக ஆகின்றாய் என்பது தான் இதன் சுருக்கமான விளக்க உரை.
மேற் சொன்ன மூன்று கோட்பாடுகளும் சொல்லும் விஷயங்களை சுருக்கமாக சொல்கின்றேன்
- சண்டை மற்றும் கோபம் – இதனை தவிர் அன்பு கொண்டு.
- எந்த நேரத்திலும் காலுக்கு கீழே பூமி பிளந்து தன்னை இழுத்து கொள்ளக்கூடும் என்று அச்சப்பட்டு, எல்லோரையும் சந்தேகிக்கிறோம் புரட்சி செய்வதற்கு அல்ல – பிழைத்து வாழ்வதற்கு!! – இதனை தவிர் அமைதி கொண்டு.
- எது வேண்டுமோ அதை நினை. எது ஆக மாற நினைக்கிறாயோ அதை மட்டும் தயவு செய்து நினைத்திரு.
ஒரு காலத்தில் என்னுடைய வாய் என் மனம் நினைக்காததை எல்லாம் பேசியது. உறவுகள் இல்லாமல் போனார்கள். நேற்றைய எண்ணமே இன்றைய வாழ்க்கை என்பதற்கேற்ப என்னுடைய மோசமான பழைய எண்ணங்களின் பாதிப்பு தான் இன்றைய என்னுடைய வாழ்க்கை…
நான் எல்லோரையும் அன்று வெறுத்தது. வெறுக்க வைத்த செயல் தான் இன்றளவும் சில, பல இடங்களில் என்னை தெரிந்தோ, தெரியாமலோ ஒதுக்கி வைக்கின்றது. உதாரணமாக என்னை யாரும் புது வீடு கட்டும் போது வாஸ்து பூஜைக்கு கூப்பிடவில்லை என்றால் அதற்கு உண்மையான முக்கிய காரணம்
ஆண்டாள் பி.சொக்கலிங்கம் மிகுந்த வேலை பளு மிக்கவர். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதை எண்ணி கூப்பிடாமல் இருந்தவர்கள் அனேகம் என்பது தான் எனக்கு நன்கு தெரிந்த உண்மை. ஆனால் இந்த நிகழ்வுக்கு மூல காரணமாக நான் சொல்ல வரும் விஷயம் என்னுடைய கடந்த கால மோசமான வாழ்க்கையின் பிரதிபலிப்பு இன்றளவும் தொடர்கின்றது என்பது தான் கலப்படமில்லா உண்மை.
என்னுடைய மிக நெருங்கிய உறவு எப்போதுமே தனிமை தான். அதனால் தான் இன்று வரை தனித்து விடப்படுகின்றேன். தனித்து நிற்கின்றேன். ஆக ஒரு இடத்தில் நான் ஒதுக்கப்படுகின்றேன் ஏதோ ஒரு சுடு சொல். சொல்லப்பட்டு என்றால் அதற்கு காரணம் நான் எப்போதும் விரும்பும், விரும்பிய தனிமை தான்.
இந்த விஷயத்தை எளிதில் விளக்க தமிழில் ஒரு பழமொழியை ஞாபகபடுத்துகின்றேன்
‘சேதம் நினைத்தால்
பூதம் சிரிக்கும்”
சேதம் – அடுத்தவர்களை கஷ்டப்படுத்தினால், கஷ்டப்படுத்த நினைத்தால் பஞ்ச பூதங்களும் நம்மை பார்த்து சிரித்து உன்னுடைய தவறான போக்கிற்கு பின் ஒரு நாள் அசலுடன் வட்டியையும் சேர்த்து வசூலித்து கொள்கின்றேன் என்பது போல் சிரிக்கும் என்று சொல்வார்கள்.
உங்களுக்கு நான் சொல்கின்றேன் நான் அன்று செய்த தவறுகளுக்கு / தப்புகளுக்கு இன்று வரை கஷ்டங்களை அனுபவிக்கின்றேன். தயவு செய்து நீங்கள் சிந்திக்க வேண்டும். இந்த நொடியில் இருந்து தவறை தவற விட்டு விடுங்கள். பூதங்கள் உங்களை பார்த்து சிரிக்காமல் வாழ்த்த அது வகை செய்யும். உங்கள் வாழ்வு உங்கள் கையில் என்பதை நினைவில் நிறுத்தி அடுத்த கடிதத்தில் என்னுடைய வெற்றி பயணத்தின் முதல் படிக்கட்டை வெற்றிகரமாக கடந்த இரகசியத்தை காற்று தத்துவத்தின் மூலமாக பார்ப்போமோ!!!
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்