கடிதம் – 17 – வாழ்க்கை – கதையல்ல நிஜம் – II

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

பிறப்பின் நோக்கம் இறப்பு அல்ல என்பது புரியாமல் பயணப்பட்ட நான், நினைவு தெரிந்து முதல் முதலாக திருச்செந்தூர் மண்ணை மிதித்தேன். என் வீட்டிலிருந்து நேராக திருச்செந்தூர் போனால் கையில் வைத்திருந்த பணம் பத்தாது போய்விட்டால் என்னாகும் என்ற சந்தேகம் வலுத்ததால் என் பாட்டி வீட்டிற்கு பிரயாணப்பட்ட என்னை அங்கு நான் மிகவும் மதித்த, நேசித்தவர்களே அந்நியனாக்கி விட்டார்களே என்ற மன வேதனையோடு பணத்தை பற்றிய சிந்தனை இல்லாமல் ஏதோ ஒரு உந்துதல் காரணமாக, ஈர்ப்பின் காரணமாக பிரயாணப்பட்டு விட்டேன் திருசெந்தூருக்கு. பேருந்தில் ஏறும் வரை எந்தவித முன்னேற்பாடு பற்றியும் சிந்திக்கவில்லை. இனிமேல் வாழ்க்கை வாழமுடியாது; வாழ்க்கை அர்த்தமற்றது; வாழ்க்கையே கேள்விகுறி; வாழ்க்கை என்னை வேடிக்கை பொருளாக்கிவிட்டதே என்ற வேதனையுடன் அழுதுகொண்டே வெளிப்பிராகரத்தில் உட்கார்ந்து இருந்தேன் திருச்செந்தூர் முருகன் இருக்கும் திசையை நோக்கி.

நான் உட்காந்திருந்த இடத்தில் இருந்து 20 அடி தொலைவில் 4 – 5 அடியார்கள் உட்கார்ந்து இருந்ததாக நினைவு. கடலில் விழுந்து என் வாழ்க்கையை முடித்து கொள்ளலாம் என்கின்ற எண்ணம் என் உடல் முழுவதும் வியாபித்து இருந்தாலும் எனக்காகவும், என் படிப்பிற்காகவும், என் ஊதாரித்தனமான செலவிற்காகவும் தங்கள் சொத்து அனைத்தையும் இழந்து நிற்கின்ற என் அப்பா / அம்மா – நான் உலகில் இல்லை என்றால் அவர்கள் சாப்பாட்டிற்கு என்ன பண்ணுவார்கள்? நான் இறந்த உடன் எந்த தவறும் செய்யாத அவர்களும் இறந்து போய் விடுவார்களே? – என்பதை நினைத்து மட்டும் தான் அழுது கொண்டே இருந்தேன். அப்போது என் அருகில் உருவத்தில் மிக மிக சாதாரணமான, சராசரிக்கும் குறைவாக மதிப்பீடக்கூடிய அடியார் ஒருவர் வந்து அமர்ந்தார் திருவோட்டுடன். மெல்ல அவர் என்னிடம் பேச ஆரம்பித்தார் எனக்கென்னவோ அவரிடம் பேசியபோது உள்ளம் அறியா ஆனந்தம். நானும் கொஞ்சம், கொஞ்சமாக பேச ஆரம்பித்தேன். அவர் பேசிய அனைத்துமே கேட்பதற்கு ஆனந்தமாக இருந்தது. அதில் 2 விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கின்றது அதில் முக்கியமானது முருகனைத் தேடி வந்து விட்டாய். முருகன் தமிழ் கடவுள். தமிழரின் முதல் கடவுள் “முருகனுக்கு மிஞ்சியதோர் தெய்வமில்லை” – (மு – முகுந்தன்; ரு – ருத்ரன்; க – கமலாசனன் – இப்படி மும்மூர்த்திகளும் ஒன்றாக இணைந்த ஒரு தெய்வம் தான் முருகன்) – எனவே கவலை வேண்டாம். “இதுவும் கடந்து போகும்” என்று என்னிடம் அவர் பேசிக் கொண்டு இருந்த போது நடந்த என்னை மெய்சிலிர்க்க வைத்த சம்பவம் ஒன்று பற்றி நான் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும் – முதல்முறையாக அந்த சம்பவத்தை நான் வெளி உலக பார்வைக்கு சொல்கின்றேன்.

– நான் பேசிக்கொண்டிருந்த அடியாருக்கு பக்கத்தில் 4 – 5 அடியார்கள் வரிசையாக உட்கார்ந்து இருந்தார்கள் அல்லவா? யாரோ ஒரு பணக்கார மனிதர் மார்பு நிறைய சந்தனத்துடன் அங்கிருந்த அடியார்கள் எல்லோருக்கும் ரூ.10 மற்றும் சாப்பாடு பொட்டலம் கொடுத்து விட்டு எனக்கும், என் பக்கத்தில் பேசிக் கொண்டு இருந்த அடியார்க்கும் கொடுத்து விட்டு போய் விட்டார். அந்த மனிதர் எனக்கு தர்மம் இட்ட போது என்னை அறியாமல் நான் அந்த தர்மத்தை பெற்று கொண்டேன். என்னுடைய சப்தநாடியும் அடங்கி, ஒடுங்கி போக வைத்த சம்பவம் அது. உலகத்திலே பெரிய ஆள் நான் தான் என்றிருந்த என் அகம்பாவத்தை சுக்கு நூறாக்கியது போன்ற நிகழ்வு அது.

ஏற்கனவே நொறுங்கி போய் இருந்து மேலும் நொறுங்கி போன அந்த நேரத்தில், என்னிடம் பேசிக் கொண்டிருந்த அந்த அடியார் நான் சதுரகிரி போகணும். பத்திரமாக வீடு போய் சேருங்கள். இதுவும் கடந்து போகும் என்று சொல்லியவாறு கிளம்பி போன சில மணித்துளிகளில் இரண்டு பேர் என்னை தாண்டி போனார்கள். அவர்கள் முகம், உடை, எதுவும் ஞாபகம் இன்றளவும் என்னிடம் இல்லை. ஆனால் அவர்கள் பேசி சென்ற 2 வார்த்தைகளில் எனக்கு அதிகம் ஈர்ப்பை கொடுத்த வார்த்தை “ஆண்டாள்”.

பிறந்த பிள்ளை தாயின் மார்பில் இருந்து தன் வாழ்வாதாரத்திற்குண்டான பாலை குடிக்க எத்தனை ஆர்வத்துடன் இருக்குமோ அத்தகைய ஆர்வம் எனக்கும் ஏற்பட்டது ஆண்டாள் பெயர் கேட்டவுடன். உடனடியாக ஆண்டாள் யாரென்று விசாரித்தேன். முதல் நாள் இரவு சாப்பிட்டது. அடுத்தநாள் காலை பல் துவக்கிய பின் Eltroxin மாத்திரை போட இரண்டு மடக்கு தண்ணீர் குடித்ததோடு சரி. ஆனால் உடம்பிற்கு பசி தெரியவில்லை. அசதி தெரியவில்லை. கஷ்டம் மறந்து போனது. உயிரை விடுவதென்று முடிவு எடுத்தாகிவிட்டது, அந்த உயிரை ஆண்டாளை பார்த்த பின் விடுவது என்று சடாரென்று முடிவெடுத்து ஆண்டாளை தரிசிக்க பிரயாணப்பட்டேன். மிகவும் கடினமாக இருந்தது பிரயாணம். ஆனாலும் அலுப்பு தெரியாத பயணமாக இருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் மண்ணில் கால்பதித்து கோவில் நோக்கி போனேன் – பஞ்சபராரியாய்.

ஆண்டாள் கோவில் எங்கே என்று விசாரித்தவாறு சரியாக சாயங்காலம் 6 மணிக்கு கோவில் உள் நுழைந்தேன். எந்த மகாலக்ஷ்மியை, பூமித்தாயை கிண்டலடித்து அடையாறு திராவிடக் கழக கூட்டத்திலேயும், தெருமுனை கூட்டங்களிலேயும் பேசினேனோ அந்த ஆண்டாளை அவருடைய கர்ப்பகிரகத்திலேயே பார்க்க எத்தனித்த போது திடிரென்று மின்சாரம் இல்லாமல் போனது. கற்பூர தீப ஆராதனையை மின்சார உதவியின்றி பார்த்தேன். கற்பூர ஒளியில் ஆண்டாள் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்தது போல் உணர்வு. எனக்காகவே காத்திருந்தவள் போல் அந்த சிலையின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். ஏன் இவ்வளவு நாள் வரவில்லை என்பது போல் முகபாவனை. அடிக்கடி வந்து போ என்று சொன்னது போல் ஒரு சமிக்ஞை. ஆனந்த ஆண்டாள் தரிசனத்தில் மெய்மறந்து என்னை அறியாமலேயே என்னிடம் இருந்த ரூ.242 – ல் இருந்து ரூ.100 – ஐ அந்த கோயில் உண்டியலில் சேர்த்துவிட்டு, வெளிப்படிகட்டில் ( xxxx ) உட்கார்ந்து என்னை நானே தேற்றிக் கொண்டு என் நிலையை (காலையில் அவமானம், மதியம் பிச்சைக்காரன்) நினைத்து மெதுவாக அமுது கொண்டு இருந்த போது(சற்று தைரியத்துடன்), ஒரு மனிதர் பக்கத்தில் வந்து ஏன் அழுகிறாய் என்று கேட்ட ஒரே ஒரு வார்த்தைக்கு அதுவரை என் மனதில் இருந்த எல்லா குமுறல்களையும் அவரிடம் கொட்டி தீர்த்து விட்டேன். பொறுமையாக அத்தனையும் கேட்ட அவர் “சரிப்பா தம்பியை பார்த்துட்ட; அத்தையை பார்த்துட்ட; அப்படியே பிள்ளையார்பட்டி போய் அண்ணனை பார்த்துட்டு போ எல்லாம் சரியாக இருக்கும் என கூறிவிட்டு கிளம்பி போய்விட்டார். இதில் புரியாத புதிர் ஒன்று உண்டு. நான் போன கோயிலோ வைணவக் கோயில். என்னிடம் வந்து பேசியவர் நெற்றியிலோ முழுவதுமாக விபூதி இருந்தது. எது எப்படியோ அவரிடம் பேசிய பிறகு மனம் இலேசாகி இருந்தது. ஏதோ ஒரு இனம்புரியா மாற்றம் என்னுள். தற்கொலை எண்ணம் கொஞ்சம் மனதை விட்டு அகன்றது போல் ஒரு உணர்வு. பின் அந்த பெரியவர் சொன்னதற்காக பிள்ளையார்பட்டி நோக்கி பிரயாணப்பட ஏதுவாக, மதுரையில் உள்ள என் அத்தை வீட்டிற்க்கு சென்றேன். என் அத்தையின் கணவர் குடும்பம் மதுரையில் மிக பெரிய பணக்கார குடும்பம். என் அத்தையின் மாமனார் அழகப்பபிள்ளை. அவர் அரசாங்கத்திற்கு இனாமாக கொடுத்த 101 ஏக்கர் இடம் தான் மதுரையில் உள்ள கப்பலூர் Industrial Estate. அன்று இரவும் சாப்பிடாமல் என் அத்தை வீட்டில் தங்கி விட்டு, அவர்களிடம் என் பிரச்சினைகளை சொல்லி ரூ.500 வாங்கி கொண்டு அடுத்த நாள் பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை வணங்கிவிட்டு இனம்புரியா உத்வேகத்துடன் சென்னை திரும்பிய போது நான் சென்ற பேருந்து இராமநத்தம் அருகில் மிக பெரிய விபத்துக்குள்ளானது.

அந்த விபத்து பற்றியும், உங்களுக்கு நான் சொல்ல விரும்பும் அற்புத விஷயங்களையும் அடுத்த கடிதங்களில் விரிவாக கூறுகின்றேன்.
வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. SIR U ARE BLESSED THE ORACLE OF GOD SPOKEN THROUGH THESE TWO SIVANADIYARS.

    Reply

Write a Reply or Comment

twenty − one =