June 10 2018 0Comment

கங்கையம்மன் கோயில்

கங்கையம்மன் கோயில்:

தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், சந்தவாசல் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.

#திருத்தலவரலாறு:

சிவபெருமானை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக பூலோகத்தில் தட்சன் யாகம்செய்தான்.

தன் தந்தையான தட்சனுக்கு அறிவுரை கூறி யாகத்தை நிறுத்த பூலோகம் செல்ல தன் கணவன் ஈசனின் அனுமதி கேட்டாள்.

பார்வதி தேவியாகிய தாட்சாயணி தன்னைப்போல் தன் மனைவியும் அவமானப்படக் கூடாது என்பதற்காக அனுமதி மறுத்தான் சிவன். 

சிவன் வாக்கை மீறி பூலோகம் சென்றாள் தாட்சாயணி, தன் மனைவி தன்னை மதிக்கவில்லையே என்ற ஆதங்கம், தனிமைத்துயர், பிரிவுத்துயர், தட்சனால் தன் மனைவி அவமானப்பட நேருமே என்ற கோப உணர்வு ஆகியவற்றால் குழம்பிப் போன சிவன் பூலோகம் வர எண்ணி தனது வலது பாதத்தை பூமியிலுள்ள இராஜகம்பீர மலையில் வைத்தார். (இது நம் திருக்கோயில் ஊரில் உள்ள மலை).

ஈசனின் வெப்பம் தாளாது மலை எரிந்தது; பாரம் தாங்காது மலை பூமியில் அழுந்தியது. எனவே அடுத்த அடியை மலைமீது வைக்காமல் தரையில் வைக்க எண்ணிய சிவன், வலது பாதத்தை திருவண்ணாமலை அருகே உள்ள அடிஅண்ணாமலையில் தரையில் வைத்தார். 

அப்பாத சுவடு அடியண்ணாமலையில் உள்ள குளத்தில் காணப்படுகிறது.

ஈசனின் வலது பாதசுவடு உள்ள மலை ‘மிதி மலை’ என்று வழங்கி வருகிறது. இன்றும் பாத சுவடு மிதிமலையில் அழியாமல் உள்ளது. 

சந்தவாசல் அருகில் உள்ள கல்வாசல் ஊரின் மக்கள் இவ்வழியே படவேடுக்கு செல்லும்போது அப்பாத சுவடுக்கு தீப ஆராதனை செய்கின்றனர்.

வலது பாதம் பட்ட ஊர் அடி அண்ணாமலை இன்றும் வழிபாட்டுத் தலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஈசன் தலையில் இருந்த கங்கை தீயை அணைத்து பிரளயத்தைத் தடுக்க தன் தமயன் மகாவிஷ்ணுவிடம் வேண்டினாள்.

அவ்வேண்டுதலுக்கு இணங்க இராஜகம்பீர மலையை சுற்றி ஏழு நீர்நிலைகளை ஏற்படுத்திய விஷ்ணு அந்நீரால் தீயை அணைத்தார்.

இன்றளவும் இம்மலையைச் சுற்றி விஷ்ணுவின் பெயரில் (1. பெருமாள் குளம், 2. ஊற்றுபெருமாள் குளம், 3. காட்டு பெருமாள் குளம், 4. வாணிய பெருமாள் குளம், 5. கோமுட்டி பெருமாள் குளம், 6. குட்டக்கரை குளம், 7. வெறும் குளம்) என ஏழு குளங்களும் தற்போதும் இருந்து வருகின்றன. 

இதனால் மகிழ்ந்த கங்கை தன் தமயனை நன்றியுடன் வழிபட்டாள். கங்கை வழிபட்ட இடத்தில் தான், பெருமாள் கோயிலும், கங்கையம்மன் கோயிலும் இருந்தன என்றும் காலப் போக்கில் பெருமாள் கோயில் அழிந்துவிட, அம்மன் கோயில் சிதிலமடைந்து நின்றது எனவும் பேச்சு நிலவுகின்றது. 

அதற்கு சான்றாக நம் திருக்கோயிலில் சங்கு, சக்கரம், கருடன், ஆஞ்சநேயன் உருவங்கள் பொறிக்கப்பெற்ற கல் தூண் ஒன்றும், கல்வெட்டுகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை தீபம் போல நாட்டுக் கார்த்திகை (விஷ்ணு கார்த்திகை) அன்று இராஜகம்பீர மலையில் இன்றளவும் விஷ்ணு தீபம் ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

#திருவிழாக்களும் வழிபாடுகளும்:

கருவறையில் கையில் குவளையுடன் சாந்த சொரூபியாக அமர்ந்த நிலையில் முழுஉருவத்துடன் அருளாட்சி செய்யும் கங்கையம்மனுக்கு ஆண்டு முழுவதும்,

சித்திரை (ஏப்ரல்) முதல் நாள் தமிழ் புத்தாண்டு அன்று அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களுடன், தங்கள் கையினால் அம்மனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பம்சம் ஆகும்.

வைகாசி (மே) முதல் வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு வசந்த உற்சவம் அம்மனின் சிரசு ஊர்வலம், பூங்கரக ஊர்வலம், கூழ்வார்த்தல், வானவேடிக்கை, வண்ண மின்விளக்கு அலங்காரங்களுடன் அம்மனின் திருவீதி உலா நடைபெறும்.

ஆடி (ஆகஸ்டு) ஆடிப்பூர நாளன்று சுமங்கலி பூஜையும், சிறப்பு யாகமும் நடைபெறும் அச்சமயம் சுமங்கலிகள் அனைவருக்கும் 9 மங்கலப் பொருட்கள் வழங்கப்படும்.

ஐப்பசி (அக்டோபர்-நவம்பர்) நவராத்திரி, விஜயதசமி நாளன்று அம்மனுக்கு ஏகதினஇலட்சார்ச்சனைப் பெருவிழா நடைபெறுகிறது.

கார்த்திகை (நவம்பர்-டிசம்பர்) பரணி தீபத்திருநாள் அன்று கருவறையில் பரணி தீபமும் மறுநாள் திருக்கோயிலைச்சுற்றி 1008 தீபங்களும் அதே நாளில் மலை உச்சியில் விஷ்ணு தீபமும் ஏற்றப்படுகிறது.

மார்கழி (டிசம்பர்-ஜனவரி) மாதம் முழுவதும் அம்மனுக்கு தனூர் மாத சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் பக்தர்களின் பங்களிப்போடு நடைபெற்றுவருகிறது.

தை (ஜனவரி) ஆஙகிலப் புத்தாண்டு தினத்தன்று சிறப்பு யாகம் செய்யப்படுகிறது. தைபூச திருநாளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றுவருகிறது.

பங்குனி (மார்ச்-ஏப்ரல்) பங்குனி உத்திர திருநாளில் அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது.

#கோயில் அமைவிடம்:

திருவண்ணாமலை – வேலூர் சாலையில், திருவண்ணாமலையில் இருந்து சுமார் 50கி.மிதொலைவில் உள்ளது சந்தவாசல்.வேலூரில் இருந்து 32கி.மீ., ஆரணியில் இருந்து 15கி.மீ., தொலைவில் அமைந்தள்ளது

.

Share this:

Write a Reply or Comment

4 × one =