October 01 2018 0Comment

ஒத்தை செம்பருத்தி பூ

ஒத்தை செம்பருத்தி பூ

உச்சக்கட்ட சந்தோசங்களையும் 

துரோகங்களையும், துன்பங்களையும் 

அதன் எல்லையின் விளிம்பிற்கு சென்றே 

அனுபவித்திருக்கின்றேன்.

எனக்கு  உச்சக்கட்ட சந்தோஷத்தில் 

இருக்கும்போது கிடைக்ககூடிய 

ஆனந்தம் ஒட்டுமொத்தத்தையும் 

செடியில், என் நெல்லை மண்ணில் 

பூத்து நிற்கும் ஒத்தை செம்பருத்தியை

சற்று உற்று பார்த்தாலே பெற்றுவிடுவேன் 

அளப்பரிய மகிழ்ச்சியை 

எப்போதும் எனக்கு 

கொடுத்து வரும் 

ஒத்தை செம்பருத்தி பூ

இன்று ஏன் மொட்டானோம் 

என்று அர்த்தம் புரிவதற்கு 

முன்பே யாராலோ 

பறிக்கப்பட்டு, 

கேட்பாரற்று 

நம் மொழி தெரியா நேபாளத்தில் 

பத்தாயிரம் பேர் ஒரு நாளைக்கு

மிதித்து நடக்கும் படிக்கட்டில் 

யாராலும் மிதிக்கப்படாமல்

தனியாக,

ஒத்தையாக,

அனாதையாக

கிடந்ததை பார்த்தபோது 

மனம் 

மௌனமாக போனது.

நம்மை போலவே 

நிறைய உயிரினங்கள் 

இந்த பூமியில்

உண்டென்று…..

ஏதோ ஒரு ஊரில்  

ஒத்தை செம்பருத்தி பூ

கிடந்ததை பார்த்த

இன்றைய பொழுது  

விடியாமல் 

சற்று நீண்ட இரவாகவே

இருந்துவிட்டு போயிருக்கலாம்..

இதுவும் கடந்து போகட்டும்

 

 

 

Share this:

Write a Reply or Comment

three × two =