April 20 2019 0Comment

உத்தமர் கோவில்: 

உத்தமர் கோவில்:
பிரம்மன் சன்னதி :
படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார்.
பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார்.
அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும் என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற்காலத்தில் இவருக்கும் சன்னதி கட்டப்பட்டது.
பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெபமாலையுடன் காட்சி தருவது சிறப்பு.
பிரம்மாவிற்கு தயிர்சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப்பெயர்ச்சியின்போது பிரம்மாவிற்கு விசேஹ பூஜைகள் நடக்கிறது.
 விஷ்ணு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள்.
இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஹ பலன்களைத் தரக்கூடியது. பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார்.
இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம்.
கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது.
சிவகுரு தெட்சிணாமூர்த்தி, விஹ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர்.
குரு பெயர்ச்சியின் போது ஏழு குருக்களும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே இத்தலம் சப்த குரு தலம் எனப்படுகிறது.
திருச்சி – சேலம் செல்லும் வழியில் 5கி.மீ தூரத்தில் இக்கோயில் இருக்கிறது. #பிச்சாண்டார் கோயில் ஸ்டாப்பில் இறங்கி நடந்து செல்லலாம்.
Share this:

Write a Reply or Comment

20 − seventeen =