July 01 2018 0Comment

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்:

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்

 

சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது #இருக்கன்குடி கிராமம். 

இந்த ஊரிலிருக்கும் #மாரியம்மன் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. 

இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது.

தல வரலாறு :

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சானம் பெருக்க வந்த பெண் ஒரு இடத்தில் கூடையை வைத்துச் சானம் பொறுக்கிச் சேர்த்திருக்கிறாள். ஓரளவு சானம் சேர்ந்த பின்பு அந்த இடத்தில் இருந்து கூடையை எடுக்க முயன்று இருக்கிறாள். அந்தக் கூடையை எடுக்க முடியவில்லை. 

அப்பொழுது அவள் சாமி வந்து ஆடியிருக்கிறாள். (கிராமப்பகுதிகளில் பக்தியுடன் இருப்பவர்களிடம் சாமியே அவர்களுக்குள் இறங்கி அவர்கள் மூலம் ஆடும் நிலைக்கு சாமியாடுதல் என்று பெயர். இந்த நிலையில் அவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு அருள் வாக்குகள் என்று பெயர்). 

சாமியாடிய அந்த பெண் அந்த கூடை இருக்கும் இடத்தில் சிலையாகப் புதைந்து கிடக்கும் தன்னை வெளியில் எடுத்து கோயில் அமைத்து வணங்கினால் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதாகத் தெரிவித்திருக்கிறார். 

அதன் பிறகு அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையை எடுத்துக் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர். இந்த கோயிலின் தல வரலாறு இதுதான்.

இருக்கன்குடி பெயர்க் காரணம்:

கோயிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுணன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால் இருக்கங்கை குடி என்று இருந்து பின்னால் அது இருக்கன்குடி என்றாகி விட்டது. 

இந்த அர்ச்சுணன் நதி புராணப் பெருமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த அர்ச்சுணன் நதி வத்திராயிருப்பு என்கிற மலைப் பகுதியிலிருந்து உற்பத்தியாகி இங்கு வருகிறது. 

முன்பொரு காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காடுகளில் திரிந்து இந்தப் பகுதிக்கு வந்திருக்கின்றனர். இங்கு நீராடுவதற்கு தண்ணீர் இல்லாததால் பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுணன் கங்கையை வேண்டி தனது அம்பால் பூமியைப் பிளந்து தண்ணீரை வெளியில் கொண்டு வந்தார் என்றும் இந்த ஆற்றை உருவாக்கியது அர்ச்சுணன் என்பதால் இதற்கு அர்ச்சுணன் ஆறு என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

சிறப்பு விழாக்கள் :

ஆடி, தை, பங்குனி மாதங்களில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் தென் மாவட்டங்களின் பல ஊர்களிலிருந்தும் அதிகமான மக்கள் வருவதால் இந்த நாட்களில் மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. 

இந்த மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் கோயிலுக்கு பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

Share this:

Write a Reply or Comment

twelve + twelve =