இந்தியா vs பாகிஸ்தான்

ஸ்ரீ

மாமியார் மருமகள் சண்டை

நம்ம ஊரில் மாமியார், மருமகள் சண்டை இல்லாத வீடுகள் 8 – வது அதிசயமாக இன்று பார்க்கப்படுகின்றது.

இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி போல் 99 % வீடுகளில் இன்று சூழல் இருக்கின்றது / நிலவுகின்றது.

மாமியார் மருமகள் சண்டைக்கு யார் காரணம்? இதை சரி செய்ய உங்களால் முடியுமா?

பதில்: –

ஒரு நாட்டின் ராஜா தன் மக்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பதை அறிய மாறுவேடத்தில் அந்த நாட்டின் அனைத்து பகுதிக்கும் செல்கின்றான். ராஜாவிற்கு மிகுந்த சந்தோஷம் தன் மக்களின் நல்வாழ்வை கண்டு. இருந்தாலும் ராஜாவிற்கு தன் மாறுவேட சுற்றுப் பயணம் முடிந்த பிறகு ஒரு பெரிய நெருடல் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. சில நாளில் அந்த நெருடல் ராஜாவின் முகத்தில் வாட்டமாக மாற, அதை சரியாக கவனித்த அவரின் தலைமை அமைச்சர் அதற்கான காரணத்தை ராஜாவிடம் வினவுகின்றார். அதற்கு ராஜா, “அமைச்சரே! எனக்கு என்னுடைய சுற்றுப் பயணம் அனைத்து விதத்திலும் சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும் ஏனோ ஒரு கடையின் முன் நின்ற போது மட்டும் அந்தக் கடைக்காரரை கொல்ல மனம் துடித்தது. இப்போதும் அந்த கடைக்காரரை எப்படியாவது கொல்ல வேண்டும் என என் மனம் துடிக்கின்றது. அது ஏன் என்று புரியவில்லை இன்று வரை. அது தான் என் முக வாட்டத்திற்கு காரணம் என அமைச்சருக்கு பதில் சொன்னார்.

ராஜாவின் பதிலை கேட்ட அமைச்சர் ராஜாவிடம் அதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதாக உறுதி அளித்து பின் மாறு வேடத்தில் ராஜா சொன்ன கடைக்கு சென்றார். அந்தக் கடை சந்தன கட்டைகள் வியாபாரம் செய்யும் கடை. பின் மெதுவாக அந்த கடை உரிமையாளரிடம் பேச்சு கொடுத்தார். அவரும் பேச்சின் நடுவே தனக்கு வியாபாரம் சுத்தமாக நடப்பதில்லை என்றும் அந்தப் பகுதி மக்கள் ஏனோ சந்தன கட்டைகளை உபயோகப்படுத்துவதே இல்லை என்றும் வருத்தப்பட்டு கூறினார். மேலும் அவரே அமைச்சரிடம் இந்த நாட்டின் ராஜா ஒருகால் இறந்தால் அவர் சடலத்தை எரிக்க தன் கடையில் உள்ள மொத்த  சந்தன கட்டைகளும் தேவைப்படும் / பயன்படும் என்பதால் ராஜாவின் மரணத்தை எதிர்நோக்கி தான் காத்திருப்பதாக கூறினார்.

அமைச்சருக்கோ பெரிய அதிர்ச்சி கடைகாரர் சொன்னதை கேட்டு. பின் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளாமலேயே அந்த கடைகாரரிடம் சில சந்தன கட்டைகளை மட்டும் வாங்கி கொண்டு ராஜாவை சந்திக்க சென்றார்.

பின் ராஜாவிடம் ராஜாவே, நீங்கள் சொன்ன கடைக்கு சென்றேன். அந்தக் கடைக்காரரை சந்தித்தேன். சந்தித்து நீண்ட நேரம் உரையாடினேன். அப்போது உரையாடலுக்கு நடுவே அவரிடம் நான் ராஜா வீட்டில் வேலை செய்வதாக கூறியதை கேட்ட உடன் அந்தக் கடைகாரர் மிக மகிழ்ந்து நம் நாட்டின் ராஜா மிகச் சிறந்த ராஜா என்றும், அவருக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என்பதாலும் என்னிடம் தங்களுக்கு கொடுக்க சொல்லி அவரிடம் இருந்த விலை மதிப்பு வாய்ந்த இந்த சந்தன கட்டைகளை அன்பளிப்பாக கொடுத்தார் என தான் வாங்கி வந்திருந்த சந்தன கட்டைகளை ராஜாவிடம் கொடுத்தார்.

ராஜாவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. உடனே பதிலுக்கு அவரும் அமைச்சரிடம் அவ்வளவு நல்லவரா அந்தக் கடைக்காரர்!!! எவ்வளவு பெரிய தவறான எண்ணம் கொண்டேன் அந்த மாமனிதர் மேல் எனக் கூறி 10000 பொற்காசுகளை அந்தக் கடைக்காரருக்கு அன்பளிப்பாக கொடுத்துவருமாறு அமைச்சருக்கு உத்தரவுப் பிறப்பித்தார்.

அமைச்சரும் ராஜா உத்தரவிற்கிணங்க அந்தக் கடைக்காரரை மீண்டும் சந்தித்து தான் அந்த நாட்டு ராஜாவின் தலைமை அமைச்சர் என தன்னை அவரிடம் அறிமுகப்படுத்தி கொண்டு பின் ராஜா அவருக்கு கொடுத்த 10000 பொற்காசுகளையும் கடைக்காரரிடம் சமர்ப்பித்தார். கடைகாரருக்கோ மிகுந்த, அளப்பரிய சந்தோஷம். எவ்வளவு நல்ல ராஜா நம் நாட்டின் ராஜா!!! அவரை போய் சீக்கிரம் சாக வேண்டும் என நினைத்து விட்டேனே!!! என வருத்தப்பட்டு பின் அமைச்சரிடம் ராஜா நலமுடன் வாழ தான் நித்தமும் இனி பிராத்தித்து கொள்ள போவதாகவும், ராஜாவிற்கு நன்றியும் தெரிவித்து கொள்வதாகவும் அமைச்சரிடம் கூறி அவரை வழி அனுப்பினார்.

நல்ல அமைச்சரின் சமயோசிதத்தால்

  • ஒரு கடைகாரரின் தலை தப்பித்தது
  • அரசர் தேவையில்லாமல் இழைக்க இருந்த தவறு சரி செய்யப்பட்டது
  • கடைகாரரின் எண்ண மாற்றத்தால் அவர் நிறைய புதிய வியாபாரம் செய்து பெரும் செல்வந்தராக ஆனார்.
  • ராஜாவும் ஒரு சிறிய குறை கூட தான் நாட்டின் ஒரு குடிமகனுக்கும் கூட இல்லை என்கின்ற சந்தோஷத்தில் மேலும் மிகச் சிறந்த முறையில் அரசை ஆண்டார்.

கடைக்காரர் அரசன் சீக்கிரம் இறக்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்ததால் அவரின் அந்த எண்ணமே ஒரு கட்டத்தில் அதற்காக அவர் உயிரையே அவர் இழக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியது..

கடைகாரரின் எண்ணத்தால் அரசருக்கு அவரையும் அறியாமல்  அவரை கொல்ல வேண்டும் என்கின்ற அளவிற்கு கோபம் ஏற்பட்டது. அவரின் எண்ண மாற்றத்தினால் அவர் செய்ய இருந்த தவறு களையப்பட்டது. அதனால் அந்த அரசர் மேலும் நன்றாக வாழ்ந்தார்.

இந்த இடத்தில் நல்லவைகள் நடந்ததற்கும் / நடப்பதற்கும் எப்படி ஒரு அமைச்சர் பாலமாக இருந்தாரோ, அப்படி ஒவ்வொரு வீட்டிலும் அந்த வீட்டின் மகன் இருக்க வேண்டும்;

தாயிற்கு சிறந்த மகனாகவும், மனைவிக்கு சிறந்த கணவனாகவும் ஒருவனால் இருக்க முடிகின்றது என்றால் இருக்க முடியும் என்றால் 10000% அந்த வீடுகளில் மாமியார் / மருமகள் சண்டை வரவே வராது ஏன் என்னால் உறுதியாக கூற முடியும்.

அந்த வீட்டின் மகன் உண்மையான ஆண்மகனாக இருந்தால் 10000% அந்த வீடுகளில் மாமியார் / மருமகள் சண்டை வராது என்னால் உறுதியாக கூற முடியும்.

மாமியார் மருமகள் பிரச்சினை இருக்கும் வீடுகளில் இருக்கும் அம்மாவின் மகனுக்கும், மனைவியின் கணவனுக்கும் என் அன்பான வேண்டுகோள்: –

இனிமேல் அம்மாவையோ, மனைவியையோ குறை கூறாமல் உங்களை முதலில் பகுத்தாய்வு செய்து கொள்ளுங்கள். பிரச்சினை உங்களிடம் தான் இருக்கின்றது என்பதை நினைவில் நிறுத்தும் அதே சமயத்தில் அந்த பிரச்சினைக்கான தீர்வும் உங்களிடம் தான் இருக்கின்றது என்பதையும் சற்று ஞாபகத்திற்கு கொண்டு வந்து கொள்ளுங்கள்.

தோற்பவர் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். ஆனால் வெற்றி நம்முடையதாக இருக்க வேண்டும்.

சற்று மனதை திறந்து வையுங்கள் – அதற்கு காற்று கிடைத்தால் அது பின் உங்களுக்கு நிறைய நல்லவைகளை கற்றும் கொடுக்கும் / வழியும் நடத்தும்.

அதற்கு உங்களுக்குள் இருக்க வேண்டிய ஒரே விஷயம் – அன்பு

ஆகையால் அன்பு செய்வீர்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

1 × 4 =