அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் வரலாறு
மூலவர் : சாரங்கபாணி, ஆராவமுதன்
தாயார் : கோமளவல்லி
தீர்த்தம் : ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு
புராண பெயர் : திருக்குடந்தை
ஊர் : கும்பகோணம்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
ஒருசமயம் வைகுண்டம் சென்ற பிருகு முனிவருக்கு, திருமாலின் சாந்த குணத்தை சோதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே திருமாலின் மார்பை உதைக்கச் சென்றார். இச்செயலை திருமால் தடுக்காத நிலையில் திருமகள் கோபம் கொண்டார். திருமாலின் மார்பில் தான் இருப்பதை அறிந்தும், பிருகு முனிவரின் செயலை, திருமால் கண்டிக்காததால், அவரைப் பிரிய முடிவு செய்து திருமகள் பிரிந்துவிட்டார்.
உடனே பிருகு மகரிஷி திருமகளை நோக்கி, “தாயே! கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, யார் அமைதியானவர் என்பதை அறியும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது. அதற்காகவே நான் திருமாலை உதைக்க வந்தது போல் நடித்தேன். உலகத்துக்கே தாயான உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். எனக்கு நீ மகளாகப் பிறக்க வேண்டும்” என்று கூறுகிறார். மனம் குளிர்ந்த திருமகள், கூறியபடி தான் திருமாலைப் பிரிந்து, பூலோகத்தில் பிருகு முனிவரின் மகளாகப் பிறப்பதாகத் தெரிவிக்கிறார். மேலும் தவம் இயற்றும்படி பிருகு முனிவரை அறிவுறுத்துகிறார். அடுத்த பிறவியில் பிருகு முனிவரும் ஹேமரிஷியாக அவதரித்து, குடந்தை வந்திருந்து, தவம் புரிகிறார். குடந்தையில் உள்ள ஹேம புஷ்கரிணியில் தாமரை மலரில் திருமகள் அவதரிக்கிறார். அவருக்கு கோமளவல்லி என்று பெயர் சூட்டி, ஹேமரிஷி வளர்த்து வருகிறார். தக்க பருவத்தில் சார்ங்கம் என்ற வில்லேந்தி வந்த பெருமாளுக்கு, கோமளவல்லியை மணமுடித்துக் கொடுத்தார் ஹேமரிஷி. வில்லேந்தி வந்ததால் பெருமாள் சாரங்கபாணி என்று அழைக்கப்படுகிறார். தாயாரின் அவதாரத் தலமாக கும்பகோணம் போற்றப்படுகிறது.
கோயில் சிறப்புகள்:
- 108 வைணவ திவ்ய தேசங்களில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோமளவல்லி தாயார் சமேத சாரங்கபாணி சுவாமி கோயில் 12-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.
- தாயாரை மணந்து கொள்ள இத்தலத்துக்கு சுவாமி தேரில் வந்ததால், சுவாமியின் சந்நிதி தேர் அமைப்பில் உள்ளது.
- பஞ்சரங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இக்கோயில் கருவறையில் கோமளவல்லி தாயார் மற்றும் மகாலட்சுமியுடன் சாரங்கபாணி பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மதேவர், தலைப் பகுதியில் சூரிய பகவான் உள்ளனர். கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறைக்கு முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார்.
- உற்சவர் நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் (வில்), உடைவாள் ஆகிய ஐந்து ஆயுதங்களுடன், வலது கரம் அபயமளிக்கும் முத்திரையுடன் அருள்பாலிக்கிறார்.
- திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் 11 ஆழ்வார்களாலும், திருப்பதி 10 ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு 7 ஆழ்வார்களால் (பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார்) இத்தலமே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
- திருமால் பலவிதமான சயனங்களில் பள்ளி கொண்ட தலங்கள் உள்ளன. இத்தலத்தில் திருமாள் உத்தான சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். முழுமையாக பள்ளிகொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை ‘உத்தான சயனம்’ என்பர்.
- திருமங்கையாழ்வார் இத்தலத்துக்கு வந்து மங்களாசாசனம் செய்தபோது, பெருமாள் எதற்காக பள்ளி கொண்டிருக்கிறார் என்று வினவி நடந்த கால்கள் வலிக்கிறதா என்று பாடுகிறார். அப்போது எழுந்த திருமாலைக் கண்டு, மகிழ்ந்த ஆழ்வார், அப்படியே அருள்பாலிக்க வேண்டுகிறார். பெருமாளும் அவ்வாறே காட்சி கொடுக்கிறார்.
- நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தொகுப்பதற்கு முன், நாதமுனிகள், சாரங்கபாணி பெருமாளை வழிபட குடந்தை வந்திருந்தார். அப்போது ஓராயிரத்துள் இப்பத்தும் என்று சில பக்தர்கள் பெருமாளைப் போற்றிப் பாடினர். இதைக் கேட்டு வியந்த நாதமுனிகள், ‘இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளனவா?’ என்று கேட்டு, அவற்றையும் பாடுமாறு கூறினார். ஆனால் அவர்களுக்குத் தெரியவில்லை. இரவில் நாதமுனிகளின் கனவில் தோன்றிய திருமால், ஆழ்வார்திருநகரி சென்று நம்மாழ்வாரை வணங்கினால், மீதமுள்ள பாடல்கள் கிடைக்கும் என்று அருளினார். அதன்படி நாதமுனிகளும் அங்கு சென்று நம்மாழ்வாரை வணங்கினார், ஆயிரம் பாடல்கள் கிடைக்கும் என்று வந்த இடத்தில் நாலாயிரம் பாடல்கள் கிடைக்கப் பெற்றார் நாதமுனிகள். அவை அனைத்தையும் நாதமுனிகள் தொகுத்தார். ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால், சாரங்கபாணி பெருமாளுக்கு ‘ஆராவமுதாழ்வார்’ என்ற பெயர் கிட்டியது.
- தாயாரை மணம் புரிய இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடும் பொருட்டு, பாதாளத்தில் ஒளிந்து கொண்டார். கலக்கமடைந்த தாயார் முன்னர் தோன்றிய பெருமாள் அவரை மணந்து கொண்டார். அவர் ஒளிந்து கொண்ட இடம், இன்றும் பாதாள சீனிவாசர் சந்நிதியாக உள்ளது. திருமணத்துக்குப் பிறகு மேடான இடத்தில் மேட்டு சீனிவாசராக தாயார்களுடன் அருள்பாலிக்கிறார்.
- சாரங்கபாணி பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரே இத்தலத்துக்கு வந்ததால், இவரை வணங்கினால் முக்தி கிடைக்கும். அதனால் இத்தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. இத்தலத்தில் உள்ள உத்தராயண, தட்சிணாயண வாசலைக் கடந்து சென்றால் பரமபதம் கிட்டும் என்பது ஐதீகம்.
- இக்கோயில் உற்சவருக்கு, மூலவருக்கான மரியாதைகள் (திருமஞ்சனம், ஆராதனைகள்) செய்யப்படுவதால், இத்தலம் ‘உபய பிரதான திவ்ய தேசம் என்று அழைக்கப்படுகிறது. உற்சவர் மூலவர் பொறுப்பில் இருந்து உபயமாக (அவருக்கு பதிலாக) செயல்படுபவராக உள்ளார்.
- தாயாரின் அவதாரத் தலம் என்பதால் இக்கோயிலில் தாயாரே பிரதானமாக கருதப்படுகிறார். நடை திறக்கப்படும்போது, தாயார் சந்நிதியில் கோமாதா பூஜை செய்யப்பட்ட பிறகே, சுவாமி (குடந்தைக் கிடந்தான்) சந்நிதியில் நடத்தப்படுகிறது.
- லட்சுமி நாராயணசாமி என்ற பக்தர், தனது இறுதிக்காலம் வரை இக்கோயிலுக்கு சேவை புரிந்தார். இக்கோயிலின் கோபுரத்தைக் கட்டியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஒரு தீபாவளி தினத்தில் இவர் பெருமாளின் திருவடியை அடைந்தார். இவருக்கு குழந்தைகள் இல்லாததால், பெருமாளே அவருக்கு மகனாக இருந்து இறுதிச் சடங்குகள் செய்தார். இன்றும் சாரங்கபாணி பெருமாள், பக்தருக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர், “சார்ங்கபாணி’ என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது. கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால், மூலவரை மகாமகத்திற்கு வரும் நதி தேவதைகளும், தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதைக் காணலாம்.
- இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், அவளைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும் என்பது பொதுவான அம்சமானாலும், இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோயிலில் கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோமாதா பூஜை தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.
திருவிழா:
சித்திரைத் தேர்த் திருவிழா, வைகாசி வசந்த உற்சவம், மார்கழி வைகுண்ட ஏகாதசி, தை சங்கரமண உற்சவம், மாசி மக உற்சவம், அட்சய திருதியை (12 கருட சேவை) தினங்களில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.
அட்சய திருதியை தினத்தில் குடந்தை பெரிய தெருவில் 12 கோயில்களில் (சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசுவாமி, ராஜகோபால சுவாமி, வராகப் பெருமாள், வெங்கட்ராயர் அக்ரஹாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப் பெருமாள், நவநீத கிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி) இருந்து உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்தில் எழுந்தருள்வது வழக்கம்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்
கும்பகோணம் – 612 001
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91-435 – 243 0349, 94435 – 24529.
அமைவிடம்:
கும்பகோணம்- தஞ்சாவூர் ரோட்டில் நகரின் மையத்தில் கோயில் இருக்கிறது.