August 11 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கோடிக்காவல்

  1. அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     கோடீஸ்வரர்(வேத்ரவனேஸ்வரர்), கோடிகாநாதர்

அம்மன்         :     திரிபுர சுந்தரி, வடிவாம்பிகை,

தல விருட்சம்   :     பிரம்பு

தீர்த்தம்         :     சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரிநதி

புராண பெயர்    :     வேத்ரவனம்

ஊர்             :     திருக்கோடிக்காவல்

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

கிர்த யுகத்தில் பன்னீராயிரம் ரிஷிகளும் (வாலகில்ய மற்றும் வைகானஸ் முனிவர்கள்) மூன்று கோடி மந்திர தேவதைகளும் சாயுஜ் முக்தி (ஞானமுக்தி) அடையும் பொருட்டு வேங்கடகிரியில் திருவேங்கடமுடையான் (வெங்கடேசப் பெருமாள்) திருச்சன்னதியில் மந்திரங்களைக் சொல்லிக் கொண்டிருந்தனர். அச்சமயம் அங்குவந்த துர்வாச மகரிஷி இவர்களின் நோக்கத்தை அறிந்து பரிகாசித்தார். பின் அவர்களைப் பார்த்து சாயுஜ்ய முக்தியை தவத்தாலோ அல்லது மந்திர சக்தியாலோ பெற முடியாது. ஞானத்தால் மட்டும் தான் பெறமுடியும் குருவிற்கு பணிவிடை செய்து அவரது ஆசியைப் பெற்ற அத்யாத்ம வித்தையைப் பயின்று பிரம்ம ஞானம் பெற்று பின் பரமேஸ்வரனின் அனுக்கிரஹத்தால் மட்டும் தான் ஞானமுக்தி பெற முடியும் என்று கூறினார். இதைக் கேட்ட மந்திர தேவதைகளுக்கு கடும் கோபம் வந்தது. தங்கள் வலிமையைப் பழித்த துர்வாசரைத் தூற்றினர். முக்தியடைய எங்களுக்கு சக்தியில்லை என்கிறீர்களா? வெங்கடாஜலபதியை குறித்து தவம் செய்து இக்கணமே தாங்கள் முக்தியடையவோம் என்று சூளுரைத்தனர். தம்மையும் பிரம்ம வித்தையையும் அவமதித்த மந்திர தேவதைகளை நீங்கள் பலப்பல ஜென்மங்கள் எடுத்து துன்பப்பட்டு இறுதியில்தான் முக்தி பெறுவீர்கள். அதுவும் இந்த ஷேத்திரத்தில் கிடைக்காது. வெங்கடேசப் பெருமாளும் அதை உங்களுக்கு அளிக்க முடியாது என்று துர்வாசர் சபித்தார்.

துர்வாசருடைய கோபத்தைப் பொருட்படுத்தாத மந்திர தேவதைகள் தாங்கள் சபதம் செய்தது போல் திருமயிலையிலேயே தங்கி புஷ்கரணியில் ஸ்ரீ நாராயணனைத் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினர். ஆனால் பன்னீராயிரம் ரிஷிகள் துர்வாசருடைய அறிவுரையை ஏற்று அவரைப் பின் தொடர்ந்து காசிக்குச் சென்றனர். அங்கு மணிகர்ணிகையில் நீராடி டுண்டிகணபதி விஸ்வேஸ்வரர் விசாலாட்சி பிந்துமாதவர் மற்றும் காலபைரவரை தரிசனம் செய்தனர். மகரிஷிகளுக்கு எதை உபதேசம் செய்வது என்று துர்வாசர் சிந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் திருக்கோடீஸ்வரர் அவரது கனவில் தோன்றி மகரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து அத்யாத்ம வித்தையை கற்றுத் தரும்படியும் ஒரு மாதம் காசியில் தங்கிவிட்டு பின் மகரிஷிகளுடன் வேத்ரவனத்திற்கு (திருக்கோடிக்கா) வரும்படியும் கட்டளையிடுகிறார். அவ்வாறே துர்வாசர் திருக்கோடிக்கா தலத்திற்கு வந்து சேர்ந்தார். பின் திருக்கோடீஸ்வரரின் ஆனைப்படி மகரிஷிகளுக்கு சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து அத்தீர்த்தத்தை சிறிது கையில் எடுத்துக்கொண்டு அவர்களுடன் முக்கோடி மந்திர மந்திர தேவதைகள் கடுந்தவம் புரியும் இடமான திருமயிலைக்கு வந்தார். அப்போது திருக்கோடீஸ்வரர் அம்பாள் திரிபுரசுந்தரி மற்றும் இரு புத்திரர்கள் பரிவாரங்களுடன் வந்து திவ்யதரிசனம் கொடுத்தார். ஸ்வாமியின் முன்னிலையில் துர்வாசர் தன் கையில் கொண்டு வந்திருந்த சிருங்கோத்பவ தீர்த்தத்தை பன்னீராயிரம் ரிஷிகளுக்கும் தலையில் தெளிக்க அப்போது ஓர் ஜோதி தோன்றி முனிவர்கள் யாவரும் அதில் ஐக்கியமானர்கள். அவர்களுக்கு ஞான முக்தி கிட்டிவிட்டது. இதைக் கண்ணுற்ற மந்திர தேவதைகள் துர்வாசரைப் பார்த்து உங்கள் முயற்சியாலோ பரமேஸ்வரனின் அருளாலோ மகரிஷிகளுக்கு ஞானமுக்தி கிடைக்கவில்லை. அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மபலன்களால் தான் அது கிட்டியது. நாங்கள் எப்படியாவது நாராயணனிடமிருந்தே சாயுஜ்ய முக்தியை பெருவோம் பாருங்கள் என்று சூளுரைத்தார்கள். மந்திர தேவதைகளின் கர்வம் இன்னும் அடங்கவில்லை என்பதைக் கண்ணுற்ற துர்வாசர் மிக்க கோபம் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

 

புஷ்கரணியின் கரையில் தவமிருந்த திரிகோடி மந்திர தேவதைகளுக்கு பல இடையூறுகள் ஏற்படவே அவை அங்கிருந்து புறப்பட்டு பத்ரிகாச்சரம் நைமிசாரணியம் துவாரகை கோஷ்டிபுரம் முதலிய வைணவ தலங்களுக்குச் சென்று தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் முன் நாராயணன் தோன்றி நீங்கள் துர்வாசரை விரோதித்துக் கொண்டு அவரது கோபத்திற்கு ஆளானது மிகத் தவறு. என்னால் உங்களுக்கு சாயுஜ்ய முக்தி தர இயலாது. பரமசிவனால் மட்டும்தான் அது சாத்தியம். ஆகவே அவரை வழிபடுங்கள் எனக் கூறுகிறார். மாற்றமடைந்த முக்கோடி மந்திர தேவதைகள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றபோது நாரத முனிவர் தோன்றி பரமேஸ்வர பிரசாதத்தால் மட்டுமே ஞான முக்தி பெறமுடியும் என வலியுறுத்துகிறார். துர்வாசர் போன்றே இவரும் கூறியதைக் கேட்டு கோபமடைந்த மந்திர தேவதைகள் நாரதரையும் இழிவாகப் பேசினர். நாரதர் அவர்களைப் பார்த்து நீங்கள் நூறு ஜென்மங்கள் மீண்டும் பிராம்மணர்களாகப் பிறந்து கடைசி ஜென்மத்தில் நாராயணனின் அனுக்கிரஹத்தால் முக்தி பெறுவீர்கள் என்று கூறி மறைந்து விடுகிறார். இதைக் கேட்டு ஓரளவு சமாதானம் அடைந்த மந்திரதேவதைகள் பிராம்மண வடிவம் ஏற்று நூற்றெட்டு திவ்ய தேசங்களிலும் நாராயணனைக் குறித்து தவமிருந்து விட்டு கடைசியாக சுவேத தீவிற்கு வந்தனர். இவர்களது தீவிர தவத்தைக் கண்டு என்ன செய்வது என்று புரியாத நாராயணன் வீரபத்திரரிடம் செய்தியைக் கூறி ஆலோசனை கேட்கிறார்.

வீரபத்திரர் அவரிடம் திருக்கோடிக்கா தலத்தின் மகிமையை எடுத்துக் கூறுகிறார். இந்த உலகத்தில் பாவக சேத்திரம் ஒன்று உள்ளது அதில் அரசமரம் அதிக உத்தமமாக விளங்குகிறது. அங்கு சர்வேஸ்வரன் திருக்கோடீஸ்வரர் என்ற நாமதேயத்துடன் திரிபுரசுந்தரி தேவியுடன் இருக்கிறார். அங்கே சிருங்கோத்பவ தீர்த்தம் சித்ர குப்த தீர்த்தம் யம தீர்த்தம் வருண தீர்த்தம் குபேரதீர்த்தம் அக்னி தீர்த்தம் துர்கா தீர்த்தம் பூத தீர்த்தம் காளி தீர்த்தம் நிர்நதி தீர்த்தம் என்ற மகா தீர்த்தங்கள் உள்ளன. இங்கு பரமசிவனை ஆராதித்து தர்ம அர்த்த காம மோஷ என்கிற நான்கு புருஷார்த்த தேவதைகள் சித்தி பெற்றன. மேலும் சப்தரிஷிகளும் சனாகதி முனிவர்களும் மற்றும் அநேக மகான்களும் சித்தி பெற்றுள்ளார்கள். தவிர ஜமதக்னி முனிவரின் புதல்வரான பரசுராமர் தன் தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஸத்தி தோஷம் ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் பிரலம்பாசுரனைக் கொன்றதால் பலராமனுக்கு நேர்ந்த பாவம் தட்சயாகத்தில் பல பேரைக் கொன்றதால் எனக்கும் காளிக்கும் ஏற்பட்ட மகா ஹத்யாபாபம் இவற்றிற்கெல்லாம் திருக்கோடிக்கா ஸ்தலத்தில்தான் பாப நிவர்த்தி கிடைத்தது. இந்த சேத்திரத்தின் மகிமையை யாராலும் வர்ணித்துச் சொல்ல இயலாது என்று கூறி திருக்கோடிக்கா சென்று தவமிருக்கும்படி வீரபத்திரர் ஆலோசனை கூறுகிறார். நாராயணனும் அவ்விதமே திருக்கோடிக்கா வந்து இங்குள்ள சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி அரச மரத்தை பிரதட்சணம் செய்து பரமேஸ்வரனைக் குறித்து தவமிருந்து,அசுவமேத யாகங்கள் செய்தார். இதனால் ஈஸ்வரன் மனம் மகிழ்ந்து நாராயணன் முன்தோன்றி அவரது விருப்பம் என்னவென்று கேட்டார். நாராயணன் மூன்று கோடி மந்திரங்களுக்கு எப்படியாவது முக்தி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நீங்கள் தவம் இருந்ததாலும் பெரிய யாகங்கள் செய்ததாலும் உங்களுக்காக திரிகோடி மந்திரங்களுக்கு முக்தி அளிக்கிறேன் என்று பரமேஸ்வரன் வாக்குறுதி அளிக்கிறார்.

 

நாராயணன் திரிகோடி பிராமணர்களிடம் அவர்களை திருக்கோடிக்கா சென்று திருக்கோடீஸ்வரரைக் குறித்து ஒரு வருடம் தவம் இருக்கும்படி கூறுகிறார். மந்திர தேவதைகளும் மகிழ்ச்சி அடைந்து திருக்கோடிக்காவை அடைந்து பரமேஸ்வரனைக் குறித்து தவம் இயற்றத் தொடங்கினர். இத்தருணத்தில் நாரதர் துர்வாசரைத் சந்தித்து இன்னும் இரண்டு மாதங்களில் மந்திர தேவதைகளுக்கு முக்தி கிடைக்கப் போகிறது. அதுமட்டுமன்று அவர்களுக்கு இன்னும் புத்தி வரவில்லை. கர்வமும் அடங்கவில்லை. நாராயணனின் முயற்சியால் அவர் மூலமாகத்தானே தங்களுக்கு முக்தி கிடைக்கப்போகிறது என்று கூறுகிறார்கள். குரு சேவை செய்து குரு பிரசாதமாக ஞான முக்தி அடைந்தால் தானே உங்களுக்கு வெற்றி கிடைத்ததாகும். எனக் கூறி கலகமூட்டி விடுகிறார். அதன் பலனாக துர்வாசரும் கடும் கோபம் கொண்டு கணபதியைத் தொழுகிறார். கணபதி துர்வாசருக்கு காட்சி கொடுத்தார். அவரிடம் முக்கோடி மந்திரங்கள் தம்மை அவமதித் ததையும் தூஷித்ததையும் கூறி அவர்களுக்கு முக்தி கிடைக்கும் முன் பல இடையூறுகளை உண்டு பண்ண வேண்டும் என்று கணபதியை வேண்டுகிறார்.

 

கணபதியும் துர்வாசரின் வேண்டுகோளுக்கினங்க காவிரி நதியை கும்பகோண மத்யார்ஜுன சேத்திர மார்க்கமாக திருக்கோடிக்காவுக்கு கொண்டு வந்து அர்த்த ராத்திரியில் எல்லோரும் நித்திரை செய்து கொண்டு இருக்கும் சமயத்தில் வெள்ளத்தைப் பெருகச் செய்து மந்திர பிராமணர்களை அதில் மூழ்கடித்து திணற அடிக்கிறார். அந்த சமயத்தில் மகா காளியும் வீரபத்திரரும் மகாகணபதியின் கட்டளையின் பேரில் திரிகோடி மந்திர தேவதைகளை மிகவும் துன்புறுத்தினார்கள். வேறு வழி தெரியாத மந்திர தேவதைகள் இறுதியில் துர்வாசரிடம் சரணடைந்து தாங்கள் செய்த தவறுக்காக வருந்துகிறார்கள். மேலும் அவரையும் நாரதரையும் போற்றி தோத்திரம் செய்தனர். பிறகு கணபதியை துதித்து தங்களை வெள்ளத்திலிருந்து கரையேற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். கணபதியும் ஒரு பிரம்மச்சாரியாக வந்து அவர்களைக் காப்பாற்றி கரையேற்றி விட்டு பிரம்ம வித்தையை பழிப்பதோ வேத மார்க்கத்திற்கு விரோதமாக இருப்பதோ மகான்களை தூற்றுவதோ மாபெரும் பாபச் செயலாகும். உங்கள் கர்வத்தை அடக்குவதற்காகத்தான் இந்த தண்டனையைக் கொடுத்தேன். என்று அவர்களிடம் கூறிவிட்டு தமது சுய வடிவத்தைக் காட்டினார். தங்கள் தவறுகளை மன்னித்து முக்திக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர்கள் கணபதியை வேண்ட அவரும் திருக் கோடிக்காவில் எழுந்தருளியிருக்கும் சுவாமியை பூஜை செய்யுங்கள் உங்களுக்கு முக்தி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி மறைகிறார். பின் மந்திர பிராமணர்கள் துர்வாசரை அணுகி முறையாக சிவ ஆராதனை செய்யும் வழியை கூறும்படி வேண்டுகிறார்கள். அகஸ்தியர் வந்து உங்களுக்கு எல்லாம் விளக்குவார் என்று துர்வாசர் கூறிவிட்டு நாரதருடன் சென்று விடுகிறார். நான்கு நாட்கள் கழித்து லோபா முத்திரையுடன் அகத்தியர் திருக்கோடிக்கா வந்து சேருகிறார்.

திரிகோடி மந்திர தேவதைகள் வேண்டுகோளின்படி அவர்களுக்கு அத்யாத்ம வித்தையை உபதேசம் செய்து முத்திரைகளை சொல்லித் தந்து சிவ பூஜை விதிகளையும் எல்லா மந்திர சாஸ்திரங்களையும் கற்றுக் கொடுக்கிறார். அவரோடு சேர்ந்து மந்திர பிராமணர்கள் சாஸ்தா காளி துர்க்கை மற்றும் வீரபத்திரர் ஆகியோரை பூஜை செய்தனர். பின் அகத்தியர் திருக்கோடீஸ்வரருக்கு தென்மேற்கு பகுதியில் மணலால் கணபதியை பிரிதிஷ்டை செய்ய எல்லோரும் சஹஸ்ர நாமத்தால் அக்கணபதியை பூஜை செய்தனர். பின்னர் திருக்கோடீஸ்வரரை சஹஸ்ர நாமத்தால் அர்ச்சனை செய்தனர். இந்த சஹஸ்ர நாமம் அபூர்வமானது. இதற்கு சமம் எதுவும் கிடையாது.

த்ரிகோடிஸ்த:

த்ரி கோட்யங்க:

த்ரிகோடி பரிவேஷ்டித: என்று ஆரம்பமாகும் இந்த சஹஸ்ரநாமத்தை திரிகோடி மந்திர தேவதைகளுக்கு அகஸ்தியர் கற்றுக்கொடுத்தார். அகஸ்தியருக்கு சண்முகராலும் சண்முகருக்கு விநாயகராலும் விநாயகருக்கு சிறுவயதில் ஈஸ்வரியாலும் சொல்லிக் கொடுக்கப்பட்டதாகும்.

சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஒரு சமயம் பரமேஸ்வரனும் பார்வதியும் ஜலக்கிரீடை செய்யும்போது மிக்க சந்தோஷம் அடைந்த சுவாமியிடமிருந்து திரிபுரசுந்தரியானவள் முதன் முதலில் இந்த சஹஸ்ரநாமத்தைக் கற்றுக் கொண்டாள். இத்தருணம் மகாகணபதி முக்கோடி மந்திர தேவதைகள் முன் தோன்றி தமது மூர்த்தி ஒன்றை பிரதிஷ்டை செய்து அவருக்கு துர்வாச கணபதி என்று பெயர் வைக்கும்படி கூறுகிறார். அதன்படி மந்திர தேவதைகள் நந்திக்கு கிழக்கே பார்த்து ஒரு பிள்ளையாரை பிரிதிஷ்டை செய்து பூசித்தனர். மேலும் பைரவருக்கு தெற்கு பாகத்தில் நாதேஸ்வரர் சண்டிபீடேஸ்வரர் கஹோனேஸ்வரர் என்ற மூன்று லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார்கள். இவற்றையெல்லாம் கண்டு திருப்தி அடைந்த துர்வாசர் கைலாசம் சென்று விநாயகரிடம் திரிகோடி மந்திர தேவதைகளின் முக்திக்காக சிபாரிசு செய்ய கணபதியும் பரமஸ்வரனிடம் சென்று நாராயணனுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி முறையிட்டார். அதன்படி கைலாசபதியான பரமேஸ்வரன் திருக்கோடிக்காவில் உள்ள சிவலிங்கத்தில் சாந்நித்யம் ஆகி முக்திக்காக காத்திருக்கும் மூன்று கோடி மந்திர தேவதைகள் முன் தோன்றினர். பிரபோ எங்கள் பாக்கிய வசத்தால் தங்கள் திருப்பாதங்களைக் கண்டோம் என்று அவர்கள் பரவசமானார்கள். சுவாமி சைகையால் சிருங்கோத்பவ தீர்த்தத்தைக் காட்டினார். அது அவர்களுக்குப் புரியவில்லை. இதைக் கண்ணுற்ற அதிகார நந்தி தமது பிரம்பால் திருக்குளத்தைக் சுட்டிக்காட்டிய பின் அப்புனித தீர்த்தத்தில் அனைவரும் இறங்கி நீராடினார். அடுத்த கணம் நீரிலிருந்து ஒரு திவ்ய ஜோதி கிளம்பிற்று அந்த ஒளிப்பிழம்பில் மூன்று கோடி மந்திர தேவதைகளும் ஐக்கியமாகி விட்டனர். அவர்களுக்கு ஞானமுக்தி (சாயுஜ்ய முக்தி) கிட்டி விட்டது. அக்கணம் அங்கு குழுமியிருந்த சப்தரிஷிகள் பிரம்மாதி தேவர்கள் சனகாதி முனிவர்கள் முதலியோர் திருக்கோடீஸ்வரரைத் துதிக்கத் தொடங்கினார்கள்.

பரமேஸ்வரன் கரம் உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்து விட்டு நந்தியின் கொம்பால் உண்டான இந்த சிருங்கோத்பவ தீர்த்தக் கரையில் இருப்பது என்னுடைய சேத்திரம் இது எல்லா சௌபாக்கியங்களையும் கொடுக்கும். எல்லோருக்கும் எல்லா இஷ்ட சித்திகளையும் அளிக்க வல்லது என்று அருளினார். சிறந்த சிவபக்தரான சுதர்சனன் என்ற வைஷ்ணவ சிறுவன் ஹரதத்தராக மாற திருவருள் கிடைத்த தலம். இத்தல அம்பிகை மகானான பாஸ்கரராயரை லலிதா சகஸ்ரநாமத்திற்கு தன் சன்னதியிலேயே உரை எழுத அருள்பாலித்த தலம்.

 

கோயில் சிறப்புகள்:

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 37 வது தேவாரத்தலம் திருக்கோடிகா.

 

  • இத்தலம் 1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட உள்ளது. இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப் பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர் மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக உச்சிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்றன.

 

  • மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை பூசை செய்துள்ளனர். எனவே இத்தல இறைவனின் திருநாமம் கோடீஸ்வரர் என்றும் ஊர் திருக்கோடிக்கா அழைக்கப்பட்டது.

 

  • இவ்வூரை ஒட்டி காவேரி நதி உத்திரவாஹினியாக தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது. இத்தல விநாயகர் கரையேற்று விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

 

  • கா என்றால் சோலை எனப் பொருள்படும். கா என முடியும் ஐந்து சிவத்தலங்களை பஞ்ச காக்கள் என அழைப்பர். அவை திரு ஆனைக்கா (திருவானைக்காவல்). திருக்கோலக்கா (சீர்காழி சட்டநாதர் கோவில் எதிரில்) திருநெல்லிகா (திருத்துறைப் பூண்டி) திருகுறக்குக்கா (நீடுர் அருகில்) மற்றும் இக்கோயில் திரு கோடிக்கா ஆகும். சோலைகளுக்கு இடைய அமைந்துள்ள ஊர் என பொருள் கொள்ளலாம்.

 

  • சிவபுராணத்தில் பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படும் மற்றொரு நிகழ்ச்சி இத்தலத்தின் மகிமைக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. தன் கணவனைக் கொன்றுவிட்டு நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோக காந்தா என்ற பெண்மணி வாழ்க்கையின் இறுதிகாலத்தில் திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும் யமன் அவளைத் தண்டிக்க நரகலோகம் அழைத்துச் செல்லுகிறான். சிவ தூதர்கள் இதை வன்மையாக கண்டிக்கின்றனர். யமதர்மராஜன் சிவபெருமானிடம் வந்து முறையிடுகிறார். தமது தலமான திருக்கோடிக்காவோடு சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும் காலதேச வர்த்தமானங்களால் இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும் அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிடுகிறார். பாவக சேத்திரமான திருக்கோடிக்காவில் ஸ்நான ஜப தப தியானங்கள் செய்கிறவர்களை நான் எதுவுமே செய்ய முடியாது என்று யமதர்மராஜன் யமலோகத்தில் முழக்கமிடுகிறான். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டு விட்டதால் யமனிடமிருந்து விடுபட்டு பின் முக்தி அடைகிறாள்.

 

  • காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இந்த நம்பிக்கையை உறுதி செய்வது போல இவ்வூரில் ருத்ரபூமி (மயானம்) தனியாக இல்லை. இவ்வூரில் மறிப்பவர்களை காவிரி நதியின் மறுகரைக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது.

 

  • ஈசனால் சம்ஹாரம் செய்யப்பட்ட எமனை உயிர் பெறச் செய்வதில் இத்தலத்து விநாயகர் பேருதவி செய்ததால் கரையேற்று விநாயகர் எனப் பெயர் பெற்றிருக்கிறார்.

 

  • ஆழ்வார்கள் வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக திருப்பதி சென்றார்கள். அங்கு இறைவன் அவர்களுக்கு காட்சி தரவில்லை. மாறாக திருக்கோடிக்காவில் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள் அங்கே செல்லுங்கள் என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும் ஆவலுடன் புறப்பட்டு திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கிய போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக் கடந்து வரமுடியாமல் ஆழ்வார்கள் சிரமப்பட்டபோது அகத்திய முனிவர் அவர்கள் முன் தோன்றி ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வார்கள் கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.

 

  • மூன்று கோடி ரிஷிகள் சேக்கிழார் வழிபட்டுள்ளார்கள்.

 

  • திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

 

  • இக்கோவில், திருவிசைப்பாப்பதிகம் பாடிய கண்டராதித்த சோழரது மனைவியாகிய செம்பியன்மாதேவியாரால் கற்றளியாக ஆக்கப் பெற்றது.

 

  • ஆனி 19, 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் சூரியபகவான் தன் பொற்கரங்களால் இவ்விறைவனை வழிபாடு செய்யும் திருத்தலம்.

 

  • இத்தல அம்பிகை, மஹானான ஸ்ரீபாஸ்கரராயரை லலிதா சகஸ்ரநாமத்திற்கு தன் சன்னதியிலேயே உரை எழுத அருள்பாலித்த தலம்.

 

திருவிழா:

நான்கு கால பூஜை. சித்திரை பௌர்ணமியன்று உற்சவம் நடைபெறுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்,

திருக்கோடிக்காவல் –609 802.

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91-0435 – 2450 595, +91-94866 70043,

 

அமைவிடம்:

கும்பகோணத்திலிருந்து (18 கி.மீ) வேப்பத்தூர் – கஞ்சனூர் வழியாக குத்தாலம் வரும் பஸ்சில் திருக்கோடிக்காவல் ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்கு செல்ல வேண்டும். கும்பகோணத் திலிருந்து நேரடி பஸ்வசதி உண்டு.

Share this:

Write a Reply or Comment

seventeen + 19 =