August 10 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாட்டரசன்கோட்டை

196. அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     கண்ணுடைய நாயகி அம்மன்

ஊர்       :     நாட்டரசன்கோட்டை

மாவட்டம்  :     சிவகங்கை

 

ஸ்தல வரலாறு:

நாட்டரசன் கோட்டையின் தென்புறம் 2 கி.மீ., தொலைவில் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டு பகுதியில் அமைந்த கிராமங்களான பிரண்டகுளம், அல்லூர், பனங்காடியிலிருந்து தினமும் பால், மோர், தயிர் விற்க பலர் நாட்டரசன்கோட்டை வருவர். பிரண்டகுளம் கிராம எல்லையில் வரும் போது விற்பனைக்கு கொண்டு வரும் பால், மோர் குறிப்பிட்ட இடத்தில் தட்டி, தொடர்ந்து கொட்டிக்  கொண்டே இருந்தது. அவற்றை விற்க முடியாமல் அனைவரும் கிராமத்திற்கு வேதனையுடன் திரும்புவது வாடிக்கையாக நிகழ்ந்தது. இதற்கு காரணம் என்ன என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். நீண்ட நாட்கள் கிராமங்களில் நடத்தப்பட்ட விவாதத்திற்கு பின்னர் சிவகங்கை மன்னரிடம் பிரச்னையை கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

மன்னரிடம் பேச மக்கள் திரண்டு செல்வதற்கு முதல் நாளில் அம்பாள் மன்னரின் கனவில் தோன்றி, “”நான் பூமிக்கடியில் பிரண்டகுளம் கிராமத்தில் பலாமரம் பக்கத்தில் இருக்கிறேன்” என கோடிட்டு காண்பித்தாள். மறுநாள் திரண்டு வந்த மக்களிடம் விஷயத்தை கூறிய மன்னரும் மக்களுடன் சென்று குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்த மக்களிடம் தரையை தோண்டி பார்க்க சென்னார். தோண்டிய பள்ளத்தில் அம்பாள் சிலை வடிவத்தில் காட்சியளித்தாள்.

 

 

அப்போது தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவரின் கடப்பாரையின் நுனி கண்ணில் பட்டு ரத்தம் கொட்டியது. அடுத்தவர் அந்த பணியை தொடர முற்பட்டார். அதை மறுத்த முதலாமவர் பணியை தொடர்ந்து செய்து அம்பாள் சிலையை மேலே கொண்டு வந்தார். அம்பாள் சிலை மேலே வந்த நிமிடத்திலேயே பாதிக்கப்பட்டவரின் கண் பார்வை சரியானது. அவருக்கு கண் கொடுத்த காரணத்தால், கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள் என போற்றப்பட்டார்.

 

கோயில் சிறப்புகள்:

  • இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • ஆணவ வடிவமான சண்டாசுரனை அழிக்க, வடிவெடுத்த மஹா சக்தி, தேவர்கள் காணும் வகையில், அவர்களுக்கு ஞானக் கண் தந்து, தன் திருவுருக் காட்டியதால் கண்ணுடையாள் என்ற திருநாமம் கொண்டாள்.

 

  • பூணுமெழிற் காளி எதிர் பொருந்தவர் மெய் கண்ணில் காணவர முற்றமையால் கண்ணுடையாள்’ என்கிறது காளையார்கோயில் புராணம்.

 

  • கண்ணுடையாள், கண்ணானந்தி, கண்ணம்மா, கண்ணுடைய நாயகி என்று தமிழிலும், நேத்ராம்பிகா என்று வடமொழியிலும் திருநாமங்கள் அம்மனுக்கு இருந்தாலும், பக்தர்களால், கண்ணாத்தாள் என்றே பரவலாக அம்மன் அழைக்கப்படுகின்றாள்.

 

  • அன்னையின் பீடம், விஜயா பீடம்.. அன்னையின் திருவடிவம், மகாகாளியின் திருவடிவங்களில் ஒன்றான‌ ‘நிசும்ப மர்த்தினி’ வடிவம். எட்டுத் திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள் அம்பிகை…பின் ஆறு திருக்கரங்களில் முறையே, கிளி, பாசம், வாள், உடுக்கை, கேடயம், மணி முதலியவற்றை ஏந்தி, உயர்த்திய வலது மேற்கரத்தில் சூலம் தாங்கி, இடது கீழ்க்கரத்தில் பான பாத்திரமும் தாங்கிய திருக்கோலம்.. சூலம், சண்டனின் மார்பு நோக்கி அமைந்திருக்கிறது..கரங்களில் வளையல்களும், திருமார்பில் முத்தாரமும், திருத்தாலியும் அணிந்து, ‘ஜ்வாலா கேசம்’ என்னும் கதிர் மகுட தாரிணியாக, அருள் பொங்கும் திருவிழிகளுடன், சற்றே அழகுற தலைசாய்த்து, அருட்காட்சி அளிக்கிறாள் அம்பிகை…

 

  • சண்டாசுர வதம் செய்த திருக்கோலம் என்றாலும், அம்பிகை, ஞானம் அருளும் சகல கலா வல்லி.. அம்மனின் திருக்கரங்களுள் ஒன்றில் இருக்கும் கிளி, ஞானத்தையும், மற்றொன்றில் இருக்கும் வாள், கூர்ந்த, உண்மைப் பொருளை உணர்ந்த புத்தியையும் குறிப்பதாக ஐதீகம்..

 

  • சித்தர்களில் ஒருவரான அழுகுணிச் சித்தர், ஞான ஸ்வரூபிணியாகிய அம்பிகையால் அருளப் பெற்று, இத்திருத்தலத்தில் சித்தியடைந்திருக்கிறார்.

 

  • கோயில் துவக்கத்தில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவைகள் மன்னர் பரம்பரையினரால் கட்டப்பட்டிருந்தன.அதையடுத்து நாட்டரசன் கோட்டை நகரத்தார் அம்மனுக்கு அலங்கார மண்டபம், அபூர்வ சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய வெகு உயரமான ராஜகோபுரத்தை அடுத்து சொக்காட்டாஞ்சாரி என்ற கர்ணக்கால் மண்டபம் அபூர்வ வேலைபாடுகளுடன் பொறியியல் நுணுக்கத்துடன் நகரத்தார்களால் எழுப்பப்பட்டது.

 

  • கோயிலுக்கு எதிரே அழகிய தெப்பக்குளம் அமைந்துள்ளது.

 

  • அம்பாள் சிலை விரகண்டான் உரணி தென்புறத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் தெற்குப் புறமாக வைக்கப்பட்டது. மறுநாள் கோயிலில் சென்று பார்த்தபோது அம்பாள் வடக்கு புறமாக திரும்பி இருந்தாள். அதன்படியே அம்பாளை தூக்கி வந்தனர். தற்போது கருவறை இருக்கும் இடத்தில் அம்பாளை வைத்து பூஜிக்குமாறு அசரீரி ஒலித்தது. அதன்படி அம்பாள் ஸ்தாபிதம் செய்யப்பட்டு வளையர் குல மக்கள் மூலம் பூஜைகள் செய்யப்பட்டது.

 

  • சில நாட்கள் கழித்து வளையர்களின் கனவில் அம்பாள் தோன்றி எனக்கு பூஜை செய்ய உகந்தவன், உவச்சர் இனத்தை சேர்ந்தவர்கள் பொன்னமராவதியில் இருப்பதாக கூறி அவர்களை அழைத்து வந்து பூஜை செய்யுமாறு உத்தரவிட்டாள். அன்று முதல் இன்று வரை அவர்களே அம்பாளுக்கு பூஜை செய்து வருகின்றனர்.

 

  • காளியாட்டம் எனும் கவின்மிகு திருவிழா கண்ணுடைய நாயகி அம்மனுக்கு மிகவும் பிடித்தமான விழாவாகும். இக்களியாட்டம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கும்பகோணம் மகாமக திருவிழா போன்று இத்திருவிழாவும் நடத்து வருகிறது.

 

திருவிழா:

சித்திரை மாத முதல் செவ்வாய் அன்று அம்மனுக்கு கண் திறப்பு விழா நடைபெறும். 22 நாட்கள் திருவிழா இது.

வைகாசி பிரமோற்சவம் 10 நாட்கள் நடைபெறும்.

ஆடி மாதத்தில் முளைகொட்டு திருவிழா, 10 நாட்கள் நடத்தப்படும்.

புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியும் 10 நாட்கள் கொண்டாடப்படும்.

ஐப்பசியில் 10 நாட்கள் நடைபெறும் கோலாட்ட திருவிழாவும் விசேஷமானது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 1 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:

அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில்

நாட்டரசன்கோட்டை

சிவகங்கை மாவட்டம்.

 

போன்:    

+91 4575 234220

 

அமைவிடம்:

சிவகங்கையிலிருந்து ஆறு கிலோ  மீட்டரில் அமைந்திருக்கிறது..காரைக்குடி, திருப்பத்தூர், காளையார் கோயில், சிவகங்கையிலிருந்து இங்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் ஏராளமாக உள்ளன.

Share this:

Write a Reply or Comment

seven − 4 =