January 31 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாங்குநேரி

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்

 மூலவர் பெயர்                  :  ஸ்ரீ வானமாமலை பெருமாள் ( தோதாத்திரி நாதர்) .

உற்சவர் பெயர்                    :  ஸ்ரீ தெய்வ நாயக பெருமாள்.

தாயார்                                       :  ஸ்ரீ வரகுணமங்கை நாச்சியார்,

விமானம்                                  :  நந்தவர்த்த விமானம் எனப்படும் வைகுண்ட விமானம்.

தீர்த்தம்                                     : சேற்றுத் தாமரை புஷ்கரணி, இந்திர தீர்த்தம்.

தல விருட்சம்                        :  மா மரம்.

புராண பெயர்                     :  வானமாமலை, திருவரமங்கை

ஊர்                                              :  நாங்குனேரி

மாவட்டம்                               :  திருநெல்வேலி

 

108 திவ்ய தேசங்களுள் சுயம்பு சேத்திரமாக விளங்குவதும், ஸ்ரீ வர மங்கை புரம், தோதாத்திரி புரம், வானமாமலை, உரோமச சேத்திரம், நாகணை சேரி, வர மங்கள சேத்திரம் என்ற சிறப்பு பெயர்களையும் பெற்றது நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்.

 

ஸ்தல வரலாறு :

முற்காலத்தில் ஆழ்வார்திருநகரியை ஆட்சி செய்த காரி மாற பாண்டியன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான். அந்த மன்னனுக்கு திருமணம் ஆகி நீண்ட காலம் ஆகியும் பிள்ளை பேறு கிட்ட வில்லை. தனக்கு பிள்ளை பேறு கிட்ட வேண்டி மன்னன் பல்வேறு தானங்கள், தர்மங்கள் மற்றும் யாகங்களை செய்து வந்தான். ஒரு நாள் அந்தணர் ஒருவர் காரி மாற பாண்டியனை சந்திக்க, அவரிடம் தன் குறையை மன்னன் கூறினான். அதற்கு அந்த அந்தணர் திருக்குறுங்குடி சென்று நம்பி பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டால் வழி பிறக்கும் என கூறினார்.

அந்தணரின் ஆலோசனை படி மன்னனும், தன் மனைவியை அழைத்துக் கொண்டு திருக்குறுங்குடி தலத்திற்கு சென்று நம்பிராயரை மனமுறுகி வணங்கி தனக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்யும் படி வேண்டி கொள்கிறார். அன்று இரவு காரி மாற பாண்டிய மன்னரின் கனவில் தோன்றிய நம்பிராயர் பெருமாள்,  திருக்குறுங்குடி நகரில் இருந்து கிழக்கே நான்கு ஏரிகள் சூழ்ந்த இடத்தின் மத்தியில் எனது சகோதரனான வானமாமலை பெருமாள் தனது பரிவாரங்கள் சகிதமாக பூமிக்கு அடியில் புதையுண்டு கிடக்கிறார் எனவும் நீ அங்கு சென்று காணும் போது அந்த இடத்தை எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து செல்லும், வானில் அதற்கு நேராக கருடன் வட்டமிட்டு கொண்டிருக்கும் எனவும் கூறி, அந்த இடத்தை தோண்டி அங்கு புதையுண்டு கிடக்கும் சுயம்பு மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து திருக்கோவில் கட்டி வழிபட்டால் உன் விருப்பம் நிறைவேறும் எனவும் கூறி அருளுகிறார்.

 

அதன் படி காரி மாற பாண்டியனும் அந்த இடத்திற்கு சென்று அடையாளம் கண்டு, பூமியை தோண்டிட அங்கிருந்து குருதி பெருக்கிட பதினொரு சுயம்பு திருமேனிகள் கிடைக்கிறது. அந்த சுயம்பு திருமேனிகளை பிரதிஷ்டை செய்து திருக்கோவில் எழுப்பி முறைப்படி கும்பாபிஷேகம் செய்து வைத்திட, அவனுக்கு அவனது விருப்பப்படி நம்மாழ்வாரே ஆண் மகனாக அவதரித்தார் என்று வரலாறு கூறப்படுகிறது.

 

பூமா தேவிக்கு அருள்புரிந்த வரலாறு:

முற்காலத்தில் மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் இருந்தார்கள். இவர்கள் இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல் படைக்கும் கடவுளான பிரம்மனிடம் இருந்த வேதங்களையும் கவர்ந்து சென்றார்கள். வேதங்களை இழந்த பிரம்மன் படைப்பு தொழிலை செய்வதில் சிரமப்பட, தேவர்களும் துன்புறுத்தப்பட இறுதியில் மகா விஷ்ணு அந்த இரண்டு அசுரர்களோடு போர்க்களத்தில் போர் புரிந்து தன் கடாயுதத்தால் இருவரையும் சம்ஹாரம் செய்கிறார். மது, கைடபர் இருவர் உடம்பிலும் இருந்த இரத்தமானது இப் பூமி முழுவதும் பரவி கடும் துர் நாற்றம் வீசியது. இதனால் பூமா தேவி நிலை குலைந்து போனாள். தன் நிலை மாற பூலோகத்தில் மகா விஷ்ணு சுயம்புவாக தோன்றிய தோதாத்திரி தலத்தை அடைந்து தவம் இயற்றுகிறாள். அவளின் தவத்தை மெச்சிய பெருமாள் அவளுக்கு காட்சி கொடுத்து, தனது சக்ர ஆயுதத்தை வானில் உள்ள மேகக் கூட்டங்களுக்கு நடுவே பிரயோகித்து, அமிர்த மழை பொழிய வைக்கிறார். வானில் இருந்து அமிர்த மழை பொழிந்த போது பூமி எங்கும் அந்த அமிர்த நீர் பரவி பூமியை சுத்தப்படுத்திட பூமா தேவி புதுப் பொலிவை பெற்றாள் என கூறப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்த ஊரில் உள்ள ஒரு குளம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளதால், இவ்வூர் நான்கு ஏரி என்றழைக்கப்பட்டது. அந்தப் பெயர் மருவி ‘நாங்குநேரி’ என்று மாறியதாகச் சொல்வார்கள். அல்லது, அந்த நான்கு ஏரிகளின் கூரிய முனைகள்  சந்திக்கும் மையப் பகுதி ஆதலால், நான்கு கூர் ஏரி என்று இவ்வூர் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் ‘நாங்குநேரி’ என்று ஆனதாகவும் சொல்வார்கள்.

 

  • பெரும்பாலும் கோவில்களில் ஒரு சுயம்பு மூர்த்தி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இந்த கோவிலில் 11 சுயம்பு மூர்த்திகள் காட்சி தருகிறார்கள்.

 

  • தோத்தரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வதி, திலோத்தமை, கருடாழ்வார், விஷ்வக்சேனர் என 11 பேர் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர்.

 

  • பெருமாள் சுயம்புமூர்த்தியாக அமைந்த எட்டு தலங்களில் வடஇந்தியாவில் உள்ள பத்ரிநாத்தில் ஆறுமாத காலம் கடும் பனியால் கோயில் மூடியிருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசிக்கலாம்.

 

  • இங்குள்ள தாயாரின் உற்சவர் சிலை முதலில் திருப்பதியில் தான் இருந்ததாம். அங்குள்ளவர்கள் திருவேங்கடப் பெருமாளுக்கு ஸ்ரீவரமங்காதேவியை கல்யாணம் செய்ய இருந்தனர். அப்போது பெரிய ஜீயரின் கனவில் பெருமாள் தோன்றி, “” இவள் நாங்குநேரியிலுள்ள வானமாமலை பெருமாளுக்காக இருப்பவள்,” என கூறியதால் இத்தலத்திற்கு வந்து விட்டாள்.மணவாள மாமுனிகளால் ஸ்தாபிக்கப்பட்ட அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான வானமாமலை ஜீயர் அவர்களின் தலைமையிடம் இங்கு உள்ளது. இங்குள்ள சடாரியில் சடகோபனின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

 

  • இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடக்கும்.

 

  • இந்தக் கோயிலின் கருவறையில், இறைவன் தோத்தாத்ரி நாதர் தனது இடது காலை மடித்த நிலையில் வலது காலை தொங்கவிட்டுத் தரையில் படும்படியாக வீற்றிருக்கிறார். அதனால் இந்தக் கோயில் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது

 

  • இத்திருத்தலத்தை பற்றிய செய்திகள் பிரம்மாண்ட புராணம், கந்தபுராணம் மற்றும் நாரத புராணங்களில் இடம் பெற்றுள்ளன. லட்சுமி தாயார் இத்திருத்தலத்தில் குழந்தையாக பிறந்ததால், இத்திருத்தலம் வரமங்கை என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிசேஷன் இத்திருத்தலத்தில் தவமிருந்து மகாவிஷ்ணுவை சுமக்கும் பாக்கியம் பெற்றான். கருடாழ்வாரும் இங்கு தவம் இயற்றி வைகுண்ட வாசலில் நிற்கும் பேறு பெற்றார்.

 

  • இங்கு தை மாதம் அமாவாசை அன்று ந‌டைபெறும் “ஒரு கோட்டை எண்ணெய் காப்பு” உற்ச‌வ‌ம் பிரசித்தி பெற்ற‌தாகும். அன்று செக்கில் ஆட்டப்பட்ட சுமார் 210 லிட்ட‌ர் தூய ந‌ல்லெண்ணையை வெள்ளி வ‌ட்டிலில் சேக‌ரித்து மூல‌வ‌ர் பெருமாளுக்கு காப்பு செய்வார்கள். தொடர்ந்து விசேஷ சங்காபிஷேகமும், திருமஞ்சனமும் நடைபெற்று மூலவருக்கு சந்தனக் காப்பு சாத்தப்படும்.

 

  • வைணவ கோவில்களில் நம்மாழ்வாருக்கு பிரதானமாக சன்னதி இருக்கும். ஆனால் இங்கு காரி மாறன் வழிபட்ட பின்னரே நம்மாழ்வார் அவதாரம் நிகழ்ந்ததால், இங்கு நம்மாழ்வாருக்கு தனி சன்னதி இல்லை. இங்குள்ள பெருமாளின் சடாரியில் நம்மாழ்வார் எழுந்தருளி நித்ய வாசம் புரிகிறார் என்பது சிறப்பம்சம் ஆகும்.

 

திருவிழா:        

பங்குனி, சித்திரை மாதங்களில் நடக்கும் பிரம்மோற்ஸவம் இத்தலத்தில் மிக முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

 

திறக்கும் நேரம்:          

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:          

அருள்மிகு வானமாமலை பெருமாள் திருக்கோயில்

நாங்குனேரி-627108

திருநெல்வேலி மாவட்டம்

 

போன்:

+91- 4635-250 119

 

கோவில் அமைவிடம் :

திருநெல்வேலி – நாகர்கோவில் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 26 கி. மீ தொலைவில் அமையப் பெற்றுள்ளது நாங்குநேரி கோவில். இங்கு செல்ல திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்துகளில் ஏறியும், தனியார் வாகனங்களிலும் சென்றடையலாம்.

 

 

 

 

Share this:

Write a Reply or Comment

19 + 19 =