August 03 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பரிக்கல்

  1. அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் வரலாறு

 

தாயார் மடியில் உட்கார்ந்துள்ளார். இங்கு பெருமாளை தாயார் ஆலிங்கனம் செய்துள்ளபடி இருப்பதால் இங்கு பெருமாள் மிகவும் சாந்தசொரூபமாக உள்ளார்.

 

மூலவர்        :     லட்சுமி நரசிம்மர்

தாயார்          :     கனகவல்லி

தீர்த்தம்         :     நாககூபம்

புராண பெயர்    :     பரகலா

ஊர்             :     பரிக்கல்

மாவட்டம்       :     விழுப்புரம்

 

ஸ்தல வரலாறு:

தங்கம் வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அமைத்து மூன்று புறங்களிலும் ஆண்டு வந்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுமன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் மக்களைத் துன்புறுத்தி வாழ்ந்து வந்தனர். மூன்று அசுரர்களையும் அவர்கள் முப்புரக் கோட்டைகளையும் சிவபெருமான் எரித்துச் சாம்பலாக்கினார். இந்தத் திரிபுர தகனத்திற்கு திருமால் அம்பாக இருந்து உதவினார் என்கிறது திருவதிகைப்புராணம். இந்த மூன்று அசுரர்களுக்கும் தளபதியாக இருந்த பரிகலாசூரன் மனித உடலும் குதிரை முகத்தையும் கொண்டவன். திரிபுர தகன நிகழ்வின் போது தப்பித்துச் சென்ற இந்த பரிகலாசூரன், கிருஷ்ணாரண்யங்களில் ஓன்றான திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலம் பகுதிக்குள் மறைந்து கொண்டான் என்கிறது ஸ்தல புராணம்.

இந்தப் பகுதியை வசந்தராஜன் என்ற மன்னன் நரசிம்மரின் மீது மிகுந்த பக்தி கொண்டவன். இவன் நரசிம்மருக்கு கோயில் கட்ட எண்ணி, தன் குருவான வாமதேவ ரிஷியை கொண்டு மூன்று இரவுகள் தொடர்ந்து யாகங்கள் செய்ய ஏற்பாடு செய்தான். இதற்காக தன் சிற்றரசர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பினான். வசந்தராஜனின் அழைப்பின் பேரில் குறிப்பிட்ட இடத்திற்கு சிற்றரசர்கள் வந்தனர். யாகம் தொடங்கும் நேரத்தில் பரிகலாசூரன் என்ற அசுரன், யாகத்தை தடுக்க தன் படையுடன் புறப்பட்டான். அசுரன் வருவதை அறிந்த குரு, வசந்த ராஜன் கையில் கங்கணம் கட்டி, “அராக்ஷ்ர அமிர்தாக்ஷ்ர’ என்று தொடங்கும் மந்திரத்தை உபதேசத்து, அருகில் உள்ள புதறில் மறைந்து கொள்ள செய்தார். இருந்தாலும் அசுரன், வசந்தராஜனை கோடாரியால் தாக்கினான். இதனால் கோபமடைந்த நரசிம்மர், தன் பக்தனை காப்பாற்ற உக்கிர நரசிம்மராக தோன்றி பரிகலாசூரனை அழித்து வசந்தராஜனுக்கு காட்சி கொடுத்தார். பரிகலாசூரன் என்ற அசுரனை அழித்ததால், இத்தலம் பரிக்கல் எனப்படுகிறது.

தனக்கு தரிசனம் கொடுத்த உக்கிர நரசிம்மரிடம், பரந்தாமா! தாங்கள் எப்போதும் இங்கிருந்து உன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை தீர்க்க சாந்த நரசிம்மராக அருள வேண்டும்,”என வேண்டினான். அதன்படி வசந்தராஜன் கட்டிய கோயிலுக்கு தேவசிற்பியான விஸ்வகர்மா லட்சுமி நரசிம்மர் சிலை செய்து கொடுத்தார். அதை குரு வாமதேவ ரிஷி பிரதிஷ்டை செய்தார். நரசிம்மரும் லட்சுமி தாயாருடன் இணைந்து சாந்த நரசிம்மராக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். சிலகாலம் இந்த விக்கிரகத்திற்கு சிறப்பான பூஜை செய்யப்பட்டது. காலப்போக்கில் இது சரிவர பராமரிக்கப்படாமல், புற்று மறைத்து விட்டது.

இவ்வூருக்கு அருகில் அக்ரஹாரத்தில் வாழ்ந்த வாய் பேசமுடியாத ஒருவன் கனவில் தோன்றிய பெருமாள், நரசிம்மர் சிலை புற்றில் மறைந்திருப்பதாகவும், அதை மீண்டும் பிரதிஷ்டை செய்யும்படியும் கூறி மறைந்தார். இதை அவன் ஊர்மக்களிடம் தெரிவித்தான். அதன்படி ஊர்மக்களும் லட்சுமி நரசிம்மரை எடுத்து புதிதாக கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்கள். மூலஸ்தானத்தில் லட்சுமி நரசிம்மரும், தனி சன்னதியில் கனகவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் வாயு மூலையில் வாயுமைந்தனான அனுமன், வீர ஆஞ்சநேயராகவும், பக்த ஆஞ்சநேயராகவும் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் வடக்கே வரதராஜப்பெருமாள், தென்கிழக்கே விநாயகர், கோயில் எதிரே கருடன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். ஊரின் வடமேற்கில் சக்கர தீர்த்தம் உள்ளது.

 

கோயில் சிறப்புகள்:

  • பொதுவாக நரசிம்மர் கோயிலில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார்.ஆனால் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி மூர்த்தி உண்டு.

 

  • வீர ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் ஒரு சேர உள்ளது இத்தலத்தின் முக்கிய சிறப்பாகும்.

 

  • நரசிங்கப் பெருமான் மீது, பிரகலாதனைப் போன்றே அளவற்ற பக்தியும் அடங்காத அன்பும் கொண்டிருந்த அரசன் வசந்தராஜன். பரிகலாசுரன் என்னும் அசுரனை வதைத்து வசந்த ராஜனுக்கு நரசிம்மர் அருள் புரிந்த அரிய தலம் பரிக்கல்.

 

  • பெருமாள் கிழக்கு பார்த்து உட்கார்ந்துள்ளார். அவரது இடப்பக்கம் தாயார் மடியில் உட்கார்ந்துள்ளார். இங்கு பெருமாளை தாயார் ஆலிங்கனம் செய்துள்ளபடி இருப்பதால் இங்கு பெருமாள் மிகவும் சாந்தசொரூபமாக உள்ளார்.

 

  • முஸ்லிம், கிறிஸ்தவர் என்று எல்லா மதத்தினரும் மதவேறுபாடு இல்லாமல் வந்து வழிபடும் சிறப்பு வாய்ந்த தலம்.

 

  • பெருமாள் பக்கத்திலேயே ஆஞ்சநேயர் இருப்பது மற்றொரு தனிச் சிறப்பு.

 

  • ஸ்ரீரங்கம் பெருமாள் மாதிரி இங்கும் வரதராஜ பெருமாள் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.

 

  • இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்ட கோணம் எனப்படும்

 

  • பரிக்கல் நரசிம்மர், சக்தியும் சாந்நித்தியமும் வாய்ந்தவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் எதிர்ப்பையெல்லாம் நீக்கி அருளுகிறார். மனோபயங்களையும் மனக்கிலேசங்களையும் போக்கி அருளுகிறார். தடைப்பட்ட காரியங்களையும் நடத்தி அருளுகிறார். இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சத்துடன் திகழச் செய்து, சகல ஐஸ்வரியங்களையும் தந்து அருள்பாலிப்பார் லக்ஷ்மி நரசிம்மர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

 

  • பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் இரண்டு நதிகளுக்கு இடையில் (தென்பெண்ணை, கடிலம் ஆறுகளுக்கு) அமைந்துள்ளது.

 

  • நடு நாட்டு வைணவத் தலங்களில் பரிக்கல் தலம் தனித்துவம் கொண்டது. பரிக்கல் ஆலய கருவறைக்குள் ஸ்ரீவியாசாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார். உலகிலேயே இரட்டை ஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில் உள்ளது.

 

திருவிழா: 

வைகுண்ட ஏகாதசி

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 1 மணி வரை,

மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்,

பரிக்கல் – 607 204

விழுப்புரம் மாவட்டம்.

 

போன்:    

+91- 99438 76272

 

அமைவிடம்:

விழுப்புரம் – உளுந்தூர்பேட்டை சாலையில் (திருச்சி-சென்னை) இருந்து பிரிந்து 3 கி.மீ. தொலைவில் பரிக்கல் உள்ளது. உளுந்தூர் பேட்டை,விழுப்புரம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி பரிக்கல்லுக்கு இருக்கிறது.

 

 

Share this:

Write a Reply or Comment

16 + 13 =