August 01 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மடப்புரம்

189. அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்         :  பத்ரகாளி

தல விருட்சம்   :  வேம்பு

தீர்த்தம்         :  பிரம்மகுண்டம், மணிகர்ணி தீர்த்தம்

ஊர்             :  மடப்புரம்

மாவட்டம்       :  சிவகங்கை

 

ஸ்தல வரலாறு:

ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதிகேசனை எடுத்து மதுரையை வளைத்தார். மேற்கே திருவேடகமும் தெற்கே திருப்பரங்குன்றமும் வடக்கே திருமாலிருஞ் சோலையும் வைத்து எல்லையை வகுத்த இறைவன் கிழக்கில் தற்போது உள்ள மடப்புரத்தில் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டினார். இதனால் ஆதிகேசன் வாயில் உள்ள விஷத்தை அம்மன் உண்டு இங்கு காளியாக எழுந்தருளினாள். அங்குள்ள அய்யனார் காவல் தெய்வம் அம்மனுக்கு தன் வாகனமாகிய குதிரையை தந்து அம்மனுக்கு நிழல் தந்து அடைக்கலம் தந்தார்.இதனால் அடைக்கலம் காத்த அய்யனார் என்று அவர் பெயர் பெற்றார்.

சம்கார தேவதையாக காட்சி தருகிறாள் பத்ரகாளியம்மன். கீழ்த்தியை நோக்கி திரிசூலம் கீழ்நோக்கிப் பற்றி கலியுகத்தில் அநீதிகளை அழிக்கும் சம்கார தேவதையாக தனது தலையில் சுடர்விடும் அக்கினியையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள். வலக்கையில் பற்றிய கீழ்நோக்கி திரிசூலம் அநீதியை அழிக்கவும், தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை மீண்டும் எழவிடாது சாம்பலாக்கவும் நின்ற நிலை தன்னை நாடி வரும் தன் மக்களை என்றும் எப்போதும் காத்து வரும் ஆயத்தநிலையை உணர்த்துகிறது. காளி நிற்கும் பீடம் நீளம் அகலம் உடையது. அதன் மேல் போருக்கு ஆயத்தமான நிலையில் தன் முன்னங்கால்களை தூக்கி பின்னங்கால்களை ஊன்றி அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி வடிவமான குதிரை நிற்கிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • அக்கினியையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள்.

 

  • அடைக்கலம் காத்த அய்யனார் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார். வலது கை நீண்ட சுதையின் மீது அமைந்து நின்ற கோலத்தில் விளங்கும் இத்திருவுருவாகும். இவரே இக்கோயிலின் காவல் தெய்வம். இத்தலத்தின் ஆட்சி தெய்வம் இவர் என்பதால் மிகவும் சக்தி தெய்வமென பக்தர்கள் பயபக்தியோடு கூறுகிறார்கள்.

 

  • அம்பாளுக்கு நிழல் தரும் விதமாக பிரம்மாண்டமாக குதிரை வாகனம் இருக்கிறது. மற்ற கோயில்களில் குதிரை மீது இருக்கும் அய்யனார் இங்கு தனியாக சன்னதியில் அமர்ந்திருப்பது தனி சிறப்பு.

 

  • ஆயிரம் ஆண்டுகள் முந்திய பழமையான கோயில்.

 

  • தேவாரம் பாடிய திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ள இத்தலம் இயற்கை எழில் கொஞ்சும் சோலைகளுக்கு நடுவே இருப்பது சிறப்பு.

 

  • மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்டர்களும் நடுங்குவர் என்பது வழக்கம். இதனால் இவ்வட்டாரத்தில் இக்காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

 

  • தன்னை நாடிவரும் பக்தர்களைத் தாமதமின்றிக் காப்பாற்ற ஆயத்த நிலையில் காளியின் வலதுகையில் திரிசூலம். அநீதியை அழிக்கத் திரிசூலம் ஏந்திநிற்கும் காளி, அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் எரித்துச் சாம்பலாக்குவதற்காகத் தலையில் அக்னி கிரீடத்தைச் சுமந்து நிற்கிறாள்.

 

திருவிழா:

வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூடுகிறது. பௌர்ணமி பூஜை பாலாபிஷேகம். தமிழ் மாத முதல் செவ்வாய் தோறும் 1008 திருவிளக்கு பூஜை.

 

திறக்கும் நேரம்:                     

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:

அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில்

மடப்புரம்.

சிவகங்கை மாவட்டம்.

 

போன்:                               

+91 – 4575 272411

 

அமைவிடம்:

மதுரை,சிவகங்கை, ஆகிய ஊர்களிலிருந்து மடப்புரத்துக்கு பஸ் வசதி உள்ளது.. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : மதுரையிலிருந்து 19 கி.மீ. சிவகங்கையிலிருந்து 30 கி.மீ.

 

 

Share this:

Write a Reply or Comment

five + 5 =