July 31 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இளையனார்வேலூர்

  1. அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு

 

வேறு எந்த முருகன் கோயிலிலும் வேலுக்கென்று தனிச் சந்நிதி கிடையாது.

ஆனால் இக்கோயிலில் கருங்கல்லில் வேலானது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 

மூலவர்        :     பாலசுப்பிரமணிய சுவாமி

உற்சவர்        :     வளளி, தெய்வானையுடன் பாலசுப்பிரமணியர்

அம்மன்         :     கெஜவள்ளி

தல விருட்சம்   :     வில்வமரம்

தீர்த்தம்         :     சரவண தீரத்தம்

ஊர்             :     இளையனார்வேலூர்

மாவட்டம்       :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு:

காசிப முனிவர், சேயாற்றங்கரையில் தங்கி உலக நலன் கருதி வேள்வி செய்யத் தொடங்கினார். அவ்வேள்வியை மலையன், மாகறன் என்ற இரு அசுரர்கள் தடுத்து இடையூறு விளைவித்தனர். இவ்விரு அசுரர்களும் மாகறல் ஈஸ்வரனிடம் அழியாத வரம் பெற்றவர்களாவர்.

காசிப முனிவர் கடம்பரநாதரையும் அம்பிகை ஆவுடை நாயகியையும் வணங்கி, வேள்விக்கு மலையன், மாகறன் என்ற இரு அசுரர்கள் தொல்லை கொடுப்பதைச் சொல்லி முறையிட்டார். இறைவனும் இறைவியும் காட்சியளித்து முருகக் கடவுளை அழைத்து வேலாயுதம் தந்து வேள்விக்கு ஏற்பட்டுள்ள இடையூறை நீக்கிடக் கட்டளையிட்டனர். முருகப்பெருமானும் அந்த மலையன், மாகறனை வதம் செய்து வேள்வியை நல்ல முறையில் நடத்த உதவினார். அந்த வேலை முருகப்பெருமான் இளையனார் வேலூரில் நாட்டினார்.

இத்திருக்கோயிலில் சுவாமிநாத சித்தர் என்ற சித்தரின் தனி சந்நிதி உள்ளது. இச்சித்தர் திருவாவடுதுறை ஆதின முனிபங்கர் ஈசான தேசிகர் ஆவார். இவர் திருநெல்வேலி ஆதின மடாலயத்தில் கட்டளைத் தம்பிரானாக இருந்தவர். இவரது இயற்பெயர் சுவாமி நாததேசிகர் என்பதாகும். வடமொழியையும், தமிழ் மொழியையும் முறையாகப் பயின்றவர். இளையனார் வேலூர் தல வரலாறு இவரால் பாடப்பட்டுள்ளது.

 

கோயில் சிறப்புகள்:

  • சுவாமிநாத சித்தரால் இக் கோவில் உருவாக்க்ப்பட்டது. மலையன், மாகறன் இந்த அசுரர்களை அஸ்ர பிரயோகம் செய்தபோது அவரது வேல் நின்ற ஊர்.

 

  • இளையனார் வேலூரில் முருகப் பெருமான் தனிச் சந்நிதி கொண்டு தேவியர்கள் இன்றி தனி முருகப்பெருமானாக (பிரம்ம சாஸ்தா கோலத்தில்) அருள்கின்றார்.

 

  • வேறு எந்த முருகன் கோயிலிலும் வேலுக்கென்று தனிச் சந்நிதி கிடையாது. ஆனால் இக்கோயிலில் கருங்கல்லில் வேலானது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த வேல் சந்நிதிக்கும் இரண்டு கால பூஜைகள் சிறப்புற நடைபெறுகின்றன.

 

  • இக்கோயில் திருக்குளம் சரவணப் பொய்கை என்று அழைக்கப்படுகிறது.

 

  • கஜவள்ளி சந்நிதி தனியாக உள்ளது. பாதி வள்ளியும், பாதி தெய்வானையும் ஒருங்கே அமைந்ததுதான் கஜவள்ளி.

 

  • திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீபெருந்தண்ட உடையார் சிவன் சந்நிதி உள்ளது. அடுத்து ஏகாம்பரநாதர் மற்றும் அண்ணாமலையார் சந்நிதிகளும் உள்ளன.

 

  • இளையனார் வேலூர் திருக்கோயிலின் வடகிழக்கு மூலையில் ஒரு சிவலிங்க மூர்த்தியாக கடம்பரநாதர் எழுந்தருளியிருக்கிறார். முருகப்பெருமான் நாள்தோறும் கடம்பரநாதரை வழிபட்டுக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது கடம்பரநாதர் புராணம்.

 

  • முருகன் சன்னிதி எதிரில் (யானை) ஐரவதம் முருகனுக்கு உதவிய முதல் திருத்தலம் இதுவே ஆகும்.

 

  • அருணகிரிநாதர் திருப்புகழில் இரு பாடல்களைப் பெற்ற தலம். அதில் அவர் வேலூர் என்றே குறிப்பிட்டுள்ளார். இரண்டு பாடல்களும் கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

 

திருவிழா: 

இத்திருக்கோயிலில் கிருத்திகை, தேய்பிறை, வளர்பிறை, சஷ்டி, விசாகம், சித்திரை மாத பிரம்மோற்சவம், வைகாசி வசந்தோற்சவம், வைகாசி விசாகத்தில் 1008 சங்காபிஷேகம், ஆடிக் கிருத்திகை, ஆவணி பவித்ரோற்சவம், புரட்டாசியில் கஜவல்லிக்கு நவராத்திரி பூஜை, ஐப்பசியில் கந்த சஷ்டி 6 நாட்கள் நடைபெறும். சூர சம்ஹாரம் கிடையாது. மலையன்-மாகறன் சம்ஹாரம், வளர்பிறை பிரதோஷம் மக நட்சத்திரத்தில் நடைபெறும்.

 

திறக்கும் நேரம்:

காலை 7மணி முதல் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

இளையனார்வேலூர் – 631601.

காஞ்சிபுரம் மாவட்டம்

 

போன்:    

+91 9789635869

 

அமைவிடம்:

காஞ்சிபுரம் – செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

fourteen − two =