July 30 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநாரையூர்

  1. அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

இத்தலத்திலுள்ள ஆலயம் சிவாலயமாக இருந்தாலும், இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் பொள்ளாப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். ‘பொள்ளா என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம். அதாவது, இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர்.

 

மூலவர்        :     சவுந்தர்யேஸ்வரர்

அம்மன்         :     திரிபுரசுந்தரி

தல விருட்சம்   :     புன்னை

தீர்த்தம்         :     செங்கழுநீர், காருண்ய தீர்த்தம்

புராண பெயர்    :     திருநாரையூர்

ஊர்             :     திருநாரையூர்

மாவட்டம்       :     கடலூர்

 

ஸ்தல வரலாறு:

கோபக்காரரான துர்வாச முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது கந்தர்வன் ஒருவன் ஆகாய வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் சாப்பிட்ட ஒரு பழத்தின் கொட்டையை கீழே போட்டான். அது அங்கு தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவர் மீது விழுந்தது. தவம் கலைந்த மகரிஷி தனது தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வனை நாரையாகும்படி சாபமிட்டார். கந்தர்வன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். முனிவர் மறுத்து விட்டார். எனவே இத்தல சிவனிடம் முறையிட்டு கதறினான். சிவன் அவனிடம் தினமும் காசியிலிருந்து இத்தலத்துக்கு தீர்த்தம் கொண்டு வந்து தன்னை வழிபட்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். நாரை வடிவிலிருந்த கந்தர்வனும் தன் சக்தியால் அதிவேகத்தில் பறந்து சென்று தீர்த்தத்தை அலகில் சுமந்து வந்து அபிஷேகம் செய்தான். சாபம் அடைந்த நாரை ஒருநாள் சுவாமியை வழிபட வந்தபோது இறைவனின் சோதனையால் புயலுடன் கடும்மழை பிடித்துக் கொண்டது. காற்றை எதிர்த்து பறந்ததில் அதன் சிறகுகள் ஒவ்வொன்றாக விழுந்தன. அப்போது வாயில் இருந்த தீர்த்தத்திலிருந்து சில துளிகள் பூமியில் விழுந்தன. இது ஒரு குளமாக மாறியது. இதற்கு காருண்ய தீர்த்தம் என்று பெயர். இத்தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் உள்ளது. நாரையின் சிறகு முறிந்து விழுந்த இடம் சிறகிழந்தநல்லூர் என்று பெயர் பெற்றது. இந்த சிறகிழந்தநல்லூர் என்ற ஊர் இங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு தேவார வைப்புத்தலமான ஞானபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இதன்பிறகு சிவன் நாரைக்கு முக்தி கொடுத்தார்.

 

ஸ்ரீநம்பியாண்டார் நம்பி:

நம்பியாண்டார் நம்பியின் தந்தை அனந்தேசர் இங்குள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். அவருடன் தினமும் வரும் நம்பியாண்டார் நம்பி இதைப் பார்ப்பார் அப்பா வைக்கும் நைவேத்தியத்தை பிள்ளையார் சாப்பிடுவாரா என அவருக்கு திடீரென சந்தேகம் வந்தது. தன் தந்தைக்கு பின் நம்பி கோயிலுக்கு பூஜை செய்யும் காலம் வந்தது. அப்போது தன் தந்தையைப்போல் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து பிள்ளையாரை சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் சாப்பிட்டார்.

ஸ்ரீநம்பியாண்டார் நம்பியின் சிறப்புகள் ராஜ ராஜ சோழனின் காதுகளுக்கு எட்டியது. சைவ திருமுறைகளின் இருப்பிடம் தேடி அவற்றைத் தொகுக்கும் மாபெரும் பணியை முடித்துவிட வேண்டும் என்ற அவனது நெடுநாளைய ஆசைக்கு ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையாரின் ஆசி வேண்டி வந்தான். ராஜ ராஜ சோழனின் காணிக்கைகளையும் நைவேத்தியங்களையும் நம்பியின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து ஏற்றார் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார். திருமுறை இருக்கும் இடம் காட்டி அருள வேண்டும் என்று ராஜ ராஜனும் நம்பியும் வேண்ட தில்லை ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் தென்மேற்கு மண்டபத்தில் சுவடிகள் கிடைக்கும் என தெய்வவாக்கு ஒலித்தது. ராஜ ராஜன் தில்லைவாழ் அந்தணர்களிடம் சென்று திருமுறை தொகுக்க அனுமதி கேட்டான். அவர்கள் சொல்படி சைவ மூவர் சிலைகளை வடித்து வைத்து பூஜித்து அவற்றின் முன்னிலையில் திருமுறைச் சுவடிகள் இருந்த அறையை திறக்கச் செய்தான். திறந்தவுடன் ஏடுகள் புற்றால் மூடியிருக்கக் கண்டு திடுக்கிட்டு உள்ளம் நொந்தனர். இக்காலத்துக்குத் தேவையானவற்றை மட்டும் வைத்துப் பிறவற்றைச் செல்லரிக்கச் செய்தோம் என்ற திருவள்ளுவர் தெய்வவாக்கு ஒலித்தது. வாக்கால் ஒருவாறு அமைதிப்பெற்றனர்.

திருநாரையூர் நம்பியைக் கொண்டு அவற்றை பதினோரு திருமுறைகளாய்த் தொகுக்கச் செய்தான் ராஜ ராஜ சோழன். தொகுத்த தேவாரப் பதிகங்களுக்கு பண்முறை அமைக்க விரும்பிய நம்பியும் அரசனும் திருஎருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேண்டினார்கள். (திருஎருக்கத்தம்புலியூர் என்னும் ஸ்தலம் தற்போது ராஜேந்திரப்பட்டினம் என வழங்கப்படுகிறது, இத்தலம் விருத்தாசலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. நம்பி மற்றும் அரசனின் வேண்டுகொளுக்கு இணங்க திருநீலகண்ட பெரும்பாணன் மரபில் பிறந்த ஒரு பெண்ணுக்கு (பாடினி) பண்களை அருளினோம். இத்தலத்திலுள்ள அப்பெண்ணை அழைத்துச் சென்று பதிகங்களுக்குப் பண்முறை அமைக்கச் செய்வீர் என்று தெய்வவாக்கு கிடைத்தது. (இப்பிறவியிலேயே வாய் பேச முடியாதவள். இப்பெண்ணிற்கு இறைவன் அருள் புரிந்து பதிகங்களுக்கு பண்முறை அமைக்கச் செய்து அப்பண்னோடு திருமுறை பாட அருள் புரிந்தார்) மனம் மகிழ்ந்த மன்னனும் நம்பியும் அத்தலத்திலுள்ள அந்த பெண்ணைக் கண்டறிந்து தில்லை கனகசபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லோரது முன்னிலையிலும் அப்பெண்ணைக் கொண்டு தேவாரப் பதிகங்களுக்கு பண்முறைகளை முறையாக அமைக்கச் செய்தனர். இன்று தேவாரப் பதிகங்கள் தக்கப்பண்களுடன் நமக்கு கிடைக்க ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி ராஜ ராஜ சோழன் இவர்கள் இருவர் மூலமாக அருளியவர் திருநரையூர் ஸ்ரீ பொள்ளப் பிள்ளையார்.

ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் விநாயகர் மீது திரு இரட்டை மணிமாலை தவிர சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மீது கோயில் திருப்பண்ணியர் விருத்தம் திருத்தொண்ட தொகை, திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் மீது திருவந்தாதி, திருச்சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை. மற்றும் திருநாவுக்கரசு சுவாமிகள் மீது திருவேகாதசமாலையும் பாடியருளினார். தாம் அருளிச்செய்த இந்த பத்து நூல்களையும் சோழ மகாராஜா வேண்டுகோளின்படி பதினோராந் திருமுறையிலேயே சேர்ந்தருளினார்

 

கோயில் சிறப்புகள்:

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 32 வது தேவாரத்தலம் திருநாரையூர்.

 

  • இறைவன் சந்நிதி விமானம் அர்த்த சந்திர வடிவில் இரண்டு கலசங்களுடன் உள்ளது. சிவன் அம்பிகையை தனக்குள் ஐக்கியப்படுத்தி இருக்கிறார் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அவளுக்கும் சேர்த்து இரண்டு கலசங்கள் உள்ளது.

 

  • நடராஜருக்கும் இத்தலத்தில் தனிச்சன்னதி இருக்கிறது.

 

  • சிவன் கோயில்களில் ஒரு சண்டிகேஸ்வரர் இருப்பார். இங்கு ஒரே சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். மூலவர் சவுந்தரேஸ்வரருக்கு ஒருவர் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கும் திருமூலநாதருக்கு ஒருவர் என இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர் இருக்கின்றனர்.

 

  • பிரகாரத்தில் ஒரே இடத்தில் மூன்று பைரவர்கள் காட்சிஅளிக்கின்றனர்.

 

  • முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். திருவண்ணாமலை, விருத்தாச்சலம், திருக்கடையூர், மதுரை, காசி ஆகியவை பிற தலங்களாகும். இத்தலத்திலுள்ள ஆலயம் சிவாலயமாக இருந்தாலும் இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் பொள்ளாப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். பொள்ளா என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம். இந்தப் பிள்ளையார் உளியார் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றி அருள்பாலிக்கிறார்.

 

  • திருமுறைகளை கண்டெடுத்த காரணத்தால் சோழ மன்னனும் திருமுறை கண்ட சோழன் என சிறப்பு பெயர் பெற்றார். இந்தப் பிள்ளையார் சந்நிதிக்கு எதிரில் ராஜராஜ சோழ மன்னனுக்கும் நம்பியாண்டார் நம்பிக்கும் சிலை உள்ளது.

 

  • கோவிலுக்கு வெளியே சற்று தூரத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி அவதரித்து வசித்து வந்த பவித்ரமான இடத்தில் தற்போது சிறிய மண்டபத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி சிற்ப வடிவில் நமக்கு அருள்பாலிக்கின்றார்.

 

  • திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இத்தல இறைவனை வழிபடுவதால் வாக்கு, மனம், காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும். உடலால் செய்யப்பெறும் குற்றம் அவ்வுடலைப்பற்றிய பிணி நோய்களும் கெடும். தீவினையால் உலகில் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும். உடல் நீங்கும் காலத்தில் உயிர் எடுக்க வரும் எமன் மிகவும் அஞ்சுவான். ஆகையால் நீர் நறுமணமுள்ள மலர்களைத் தூவி திருநாரையூர் இறைவனை கை கூப்பித் தொழுது வழிபாடு செய்வீர்களாக என்று பாடியிருக்கின்றார்.

 

  • நம்பியாண்டார் நம்பி நாரை வழிபட்டுள்ளனர்.

 

  • கி.பி.11 ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட கல்வெட்டுகள் நான்கு உள்ளன.

 

  • திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளார்.

 

  • தேவாரத் திருமுறைகள் தில்லை கனகசபையின் ஒரு அறையில் இருந்ததை நம்பியாண்டார் நம்பி மூலமாக வெளிப்படுத்திய பொல்லாப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் தலம்.

 

  • நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த தலம்.

 

  • சைவர்களின் தமிழ்வேதமான தேவாரத்தைத் தொகுத்தருளிய நம்பியாண்டார் நம்பி அவதரித்த திருநாரையூருக்கு அருகில்தான் (சுமார் 8 கி.மீ. தொலைவில்) வைணவர்களின் தமிழ்வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைக் கண்டெடுத்துத் தொகுத்தருளிய நாதமுனிகள் அவதரித்த காட்டுமன்னார்கோயிலும் (வீர நாராயணபுரம்) அமைந்துள்ளது சிறப்பான ஒன்றாகும்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “மேல் நாட்டும் தேரை ஊர் செங்கதிர் போல் செம்மணிகள் நின்று இலங்கும்நாரையூர் மேவு நடுநிலையே” என்று போற்றி உள்ளார்.

 

திருவிழா: 

வைகாசி திருவாதிரை, ராஜராஜனுக்கு 13 நாள் திருவிழா,

விநாயகர் சதுர்த்தி,

ஒவ்வொரு வருடமும் வைகாசித் திங்கள் புணர்பூச நட்சத்திரத்தில் (ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி முக்தி அடைந்தநாள்)நம்பி குருபூஜை விழா சிறந்த திருமுறைவிழாவாகக்கொண்டாடப்படுகின்றது

 

திறக்கும் நேரம்:

காலை மணி முதல் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் கோயில்,

திருநாரையூர்-608 303,

கடலூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 94425 71039, 94439 06219

 

அமைவிடம்:

சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில், திருநாரையூர் உள்ளது. பஸ் உண்டு.

 

Share this:

Write a Reply or Comment

ten + 9 =