July 20 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கள்வனூர்

  1. திருக்கள்வனூர் கள்வப் பெருமாள் கோயில் வரலாறு

 

மூலவர்        :     கள்வப்பெருமாள் (ஆதிவராகர்)

தாயார்          :     சவுந்தர்யலட்சுமி

தீர்த்தம்         :     நித்யபுஷ்கரிணி

புராண பெயர்    :     திருக்கள்வனூர்

ஊர்             :     திருக்கள்வனூர்

மாவட்டம்       :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு:

வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் உலக மக்கள் செய்யும் பாவ, புண்ணியங்கள் பற்றியும், அவர்கள் மாயையில் சிக்கி உழல்வது குறித்தும் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அவர்களது பேச்சு அழகு பக்கம் திரும்பியது. அப்போது மகாலட்சுமி தான் மிகவும் அழகாக இருப்பதாகவும், தன்னைக் கண்டாலே மக்கள் செழிப்புற்று வாழ்வர் என்றும் பெருமையாக பேசினாள். அதோடு விடாமல் மகாவிஷ்ணு, கருமை நிறக் கண்ணனாக இருப்பதையும் சுட்டிக்காட்டினாள். அவரோ அகத்தில் இருப்பதுதான் உண்மையான அழகு, புறத்தில் இருப்பது மாயையில் சுழல வைப்பது என்று அமைதியாக சொல்லிப் பார்த்தும் அவள் கேட்பதாக இல்லை. அழகு மீது கர்வம் கொண்டிருந்த மகாலட்சுமிக்கு பாடம் கற்பிக்க எண்ணினார் விஷ்ணு. “பெண்ணுக்கு அழகு இருக்கலாம், ஆனால் அந்த அழகு மீது கர்வம் இருக்கக் கூடாது. எந்த அழகு மீது அளவு கடந்த பற்று வைத்துவிட்டாயோ அந்த அழகு இருக்கும் உருவமே இல்லாமல் அரூபமாக போவாயாக!’ என சாபம் கொடுத்து விட்டார். கலங்கிய மகாலட்சுமி தவறை உணர்ந்து தன்னை மன்னித்து சாப விமோசனம் தரும்படி கேட்டாள். பூமியில் எங்கு ஒரு முறை செய்யும் தவத்திற்கு ஒரு கோடி முறை தவம் செய்த பலன் கிடைக்குமோ, அங்கு சென்று தவம் செய்தால் உமது பாவத்திற்கு விமோசனம் கிடைக்கும் என்றார் விஷ்ணு.

சிவனின் கண்களை மூடியதால் சாபம் பெற்ற பார்வதிதேவி, தன் சாபம் நீங்க காஞ்சியில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரை வணங்கி விமோசனம் பெற்றாள். அவளது பாவத்தை போக்கிய இத்தலத்திற்கு வந்த மகாலட்சுமி அரூபமாக தங்கி விஷ்ணுவை வணங்கி வந்தாள். கொஞ்சம், கொஞ்சமாக அரூப வடிவம் மாறி உருவம் பெற்றாள். தவத்தின் பயனால் முன்னைவிட அழகு மிகுந்தவளாக இருந்த மகாலட்சுமியை பார்க்க வேண்டுமென விஷ்ணுவுக்கு ஆசை எழுந்தது. எனவே, அவளை கள்ளத்தனமாக எட்டிப்பார்த்தார். இதனால் இவருக்கு கள்ளப்பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள பஞ்சதீர்த்தக் கரையில் லட்சுமியும், பார்வதியும் பேசிக்கொண்டிருந்ததை இவர் ஒளிந்திருந்து கேட்டதால் பார்வதி இவரை, கள்வன் என்று அழைத்ததால் இப்பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாறு உண்டு.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் திருக்கள்வனூர் கள்வப் பெருமாள் கோயில் 54-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

 

  • காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் குளக்கரையில் வடகிழக்குப் பகுதியில் மூன்று அடுக்குகளில் நின்றான், இருந்தான், கிடந்தான் என்ற நிலையில் உள்ள திவ்ய தேசம்.

 

  • பெருமாள் காமாட்சியம்மன் சந்நிதியில் நேராக தோன்றாது மறைந்து நின்றமையால் இப்பெயர் உண்டாயிற்று.

 

  • மூலவர் ஆதி வராஹப் பெருமாள். நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். காமக்கோட்டத்தின் பஞ்ச தீர்த்தத்தின் கரையில் லட்சுமி பார்வதியுடன் அந்தரங்கமாகப் பேசிக் கொண்டிருந்ததை பெருமாள் ஒளிந்திருந்து கேட்டதால் பெருமாளுக்கு பார்வதிதேவி ‘கள்வன்’ என்று பெயர் சூட்டினார்.

 

  • “எங்கிருந்தால் என்ன, எப்படி தரிசித்தால்தான் என்ன, பிம்பமாய் கண்டால்தான் என்ன, என் பார்வை உலகளாவிச் செல்கிறது. எல்லா திக்குகளிலும் பாய்கிறது. முன் – பின், அக்கம் – பக்கம், மேல் – கீழ் என்று திசைகளைக் கடந்து செல்கிறது. அந்தப் பார்வைக்குள் என்னை விரும்பி தரிசிப்பவர்கள், இயலாமையால், பூடகமாக தரிசிப்பவர்கள், தரிசிக்கவே விரும்பாதவர்கள் என்று எல்லோரையுமே நான் பார்க்கிறேன். அவர்களை உய்விக்கிறேன். துயர் தீர்க்கிறேன். மன நிம்மதி தருகிறேன்” என்று தன் கள்ளச் சிரிப்பால் பகவான் விளக்குகிறார்.

 

  • சோரபுரம் என்ற திருக்கள்வனூர் என்ற இந்த திவ்ய தேசத்தில் அருளும் ஆதிவராகப் பெருமாளே… நமஸ்காரம். அஞ்சிலை நாச்சியாருடன் வாமன விமான நிழலில், நித்ய புஷ்கரணிக் கரையில் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தரும் பெருமாளே… நமஸ்காரம். அசுவத்த நாராயண முனிவருக்கு நேரில் காட்சி கொடுத்தருளிய அதே கோலத்தில் எங்களுக்கும் சேவை சாதிக்கும் பெருமாளே… நமஸ்காரம் என்று ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம் கூறுகிறது.

 

  • காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கருவறைக்கு முன்பாக இந்த தலம் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் மிக சிறிய வடிவில் காட்சி தருகிறார்.

 

  • காமாட்சி அம்மன் கருவறைக்கு முன் உள்ள காயத்ரி மண்டபத்தில் பெருமாள், கள்வப் பெருமாள் என்ற திருநாமத்துடன் நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

 

  • சைவக் கோவிலுக்குள் அமைந்துள்ள வைணவ கோவில்களில் இந்த தலமும் உண்டு. 108 திவ்ய தேசக் கோவில்களில் இங்கு மட்டுமே பெருமாள் மிகச் சிறிய வடிவில் காட்சி தருகிறார். அவருக்கு முன்பாக பெருமாளை வணங்கிய நிலையில் மகாலட்சுமி காட்சி தருகிறாள். இது தவிர காமாட்சி கருவறை சுவரிலும் ஒரு மகாலட்சுமி அரூபமாக காட்சி தருகிறார்.

 

  • திருகள்வனூர் கள்வப் பெருமாளையும், காமாட்சி அம்மனையும் வேண்டிக் கொண்டால் அண்ணன் – தங்கை ஒற்றுமை சிறப்பாக அமையும் என்பத ஐதீகம்.

 

  • இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

  • இங்கு காமாட்சி அம்பாளே பிரதானம் என்பதால் அவளுக்கு படைக்கப்படும் நைவேத்யங்களே கள்வப்பெருமாளுக்கும் படைக்கப்பட்டு, அதே பூஜைகளே இவருக்கும் நடக்கிறது. சாம்பிராணி தைலத்தால் மட்டும் அபிஷேகம் செய்கிறார்கள்.

 

  • தசரதர் புத்திர பாக்கியம் வேண்டி யாகம் நடத்தும் முன்பே இங்கு வந்து காமாட்சியையும், இப்பெருமாளையும் வணங்கிச் சென்றுள்ளார். தனது ராம அவதாரத்திற்கு தன்னிடமே வந்து தசரதரை வேண்டச் செய்த பெருமாள் இவர். சிவபக்தரான துர்வாசர் இவரை வணங்கிச் சென்றுள்ளார்.

 

திருவிழா: 

வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:

அருள்மிகு கள்வப்பெருமாள் சுவாமி திருக்கோயில்,

திருக்கள்வனூர்- 631 502 (

காஞ்சி காமாட்சி அம்மன்கோயிலின் உள்ளே)

காஞ்சிபுரம் மாவட்டம்

 

போன்:    

+91 44-3723 1988, 93643 10545

 

அமைவிடம்:

காஞ்சிபுரம் நகரின் மத்தியில் காமாட்சியம்மன் கோயில் இருக்கிறது

 

 

 

Share this:

Write a Reply or Comment

five × 4 =