July 14 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மேலத்திருமணஞ்சேரி

  1. அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

மூலவர்        :     ஐராவதேஸ்வரர்

அம்மன்         :     சுகந்த குந்தளாம்பிகை

தல விருட்சம்   :     கொடிமரம்

தீர்த்தம்         :     ஐராவத தீர்த்தம்

புராண பெயர்    :     எதிர்கொள்பாடி, மேலைத்திருமணஞ்சேரி

ஊர்             :     மேலத்திருமணஞ்சேரி

மாவட்டம்       :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு:

இந்த ஆலயத்தின் புராண வரலாறு, இத்தலத்தைச் சுற்றியுள்ள தலங்களையொட்டி அமைந்துள்ளது. சிவபெருமானின் சாபத்தால் பசுவாக மாறிய அன்னை பார்வதி, தேரழுந்தூரில் ஈசனை வழிபட்டாள். பிறகு திருக்கோழம்பத்திற்கு வந்து வழிபாடு செய்தாள். அப்போது பசுவின் குளம்படி சிவலிங்கத் திருமேனியில் பட்டு வடு ஏற்பட்டது. தொடர்ந்து திருவாடுதுறையில் அன்னையின் சாபம் நீங்கியது.

இதையடுத்து அத்தலத்திலேயே பரத்வாஜ முனிவர் நடத்திய யாகத்தில் குழந்தையாக தோன்றி அன்னை வளர்ந்து வந்தாள். அன்னையானவள் பருவம் அடைந்ததும், திருமணஞ் சேரியில் திருமணம் புரிய வந்த மாப்பிள்ளை சிவபெருமானை, மாமனாரான பரத்வாஜ மகரிஷி எதிர்கொண்டு வரவேற்ற தலம், எதிர்கொள்பாடி என்று பெயர்பெற்றது. திருமண வேள்வி நிகழ்ந்த தலம் திருவேள்விக்குடி. திருமணம் நடந்த தலம் திருமணஞ்சேரி என புராணம் கூறுகிறது.

திருவேள்விக்குடியில் பரத முனிவர் சிவபார்வதி திருமணத்தை நடத்தி வைத்தார். மணம் முடிந்ததும் தான் குடியிருக்கும் மேல திருமணஞ்சேரிக்கு வர இறைவனுக்கு அழைப்பு விடுத்தார். இறைவனும் ஒப்புக் கொண்டார். இறைவனும் இறைவியையும் வரவேற்க பிரமாதமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டார். மணக்கோலத்தில் வந்த தெய்வத்தம்பதியினரை பரதமுனிவர் எதிர்கொண்டு அழைத்தார். இதனால் இத்தலம் எதிர்கொள்பாடி என அழைக்கப்பட்டது. தற்போது மேலக்கோயில் என்று அழைக்கிறார்கள்.

பரத்வாஜ மகரிஷி தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் அடைந்த போது சிவனிடம் அவளை மணந்து கொள்ளும்படி வேண்டினார் மகரிஷி. சிவனும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வெளியே வந்து வரவேற்பது நம் கலாசாரம் பரத்வாஜரும் மாப்பிள்ளையாக வந்த சிவனை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதையை ஏற்ற சிவன் அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் சுவாமிக்கு திருஎதிர் கொள்பாடி உடையார் என்றும் பெயர் உண்டானது. ஐராவதம் என்னும் இந்திரனின் யானை வழிபட்டதால் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பிற்காலத்தில் உண்டானது.

சிவனுக்கு அணிவிக்கப்பட்ட தாமரை மலரை சிவனை பூஜித்து துர்வாச முனிவர் பிராதமாக பெற்று கைகளில் ஏந்தியபடி தேவலோகத்தில் துர்வாச முனிவர் வந்தார். அசுரர்களை வென்ற இந்திரனுக்கு பரிசாக அளித்தார். இந்திரன் அம்மலரை தன் வாகனமான ஐராவதத்தின் தலை மீது வைக்க அது அம்மலரை கீழே போட்டு தன் காலால் மிதித்து அம்மலரை அவமரியாதை செய்தது. இதனால் கோபம் கொண்ட முனிவர் பாண்டிய மன்னன் எறியும் கைவளையால் இந்திரனின் முடி சிதறுமாறு சாபமிட்டார். யானையும் பூமியில் பிறக்குமாறு சாபமிட்டார். பதறிப்போன இந்திரன் மன்னிப்பு கேட்க இந்திரனின் தலைக்கு வருவது தலைமுடியோடு போகும் என்று சாபவிமோசனம் தந்தார். துர்வாசரால் சபிக்கப்பட்ட யானை பூமிக்கு வந்து பல இடங்களில் சுற்றி திரிந்தது. பல தலங்களில் பூஜையும் செய்தது. கடைசியாக இத்தலத்திற்கு வந்து இறைவனை பூஜித்து துயரம் நீங்கியது. எனவே இங்குள்ள இறைவன் ஐராவதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 24 வது தேவாரத்தலம் மேலைத்திருமணச்சேரி. புராணபெயர் எதிர்கொள்பாடி.

 

  • மூலவர் ஐராவதேஸ்வரர், மதயானேஸ்வரர். அம்பாள் சுகந்த குந்தளாம்பிகை, மலர்க்குழல் நாயகி, மலர்குழல்மாது. மிகச்சிறிய திருமேனி சுகாசனத்தில் அம்பாள் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

  • இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோவில் 3 நிலை கோபுரத்துடன் கிழக்கு நோக்கியுள்ளது.

 

  • இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் உள்ள திருமணத்தலமான திருமணஞ்சேரியில் கல்யாண சுந்தரருக்கு சித்திரை மாதம் திருக்கல்யாணம் நடக்கும். மாப்பிள்ளை கோலத்தில் இக்கோவிலில் எழுந்தருள்வார். அவரை கோயில் அர்ச்சகர் தன்னை அம்பாளின் தந்தையாகப் பாவித்து பூர்ணகும்ப மரியாதை கொடுத்து வரவேற்பார். மருமகனுக்குரிய நியாயமான சீரும் தருவார். இந்த உபசரிப்பை ஏற்றபின்பு சுவாமி திருமணஞ்சேரிக்கு மீண்டும் சென்று அம்பிகையை மணந்து கொள்வார்.

 

  • சுந்தரர் தனது பதிகத்தில் எதிர்கொள்பாடி இறைவனை வணங்கி தனது திருபதிகத்தின் 10 பாடல்களையும் பாடி வழிபடுபவர்கள் இறைவனின் திருவடியை அடைந்து வணங்கியிருப்பர் என்று சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

 

  • ஐராவதம் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “சூழ்வுற்றோர் விண் எதிர் கொண்டு இந்திரன் போல் மேவி நெடுநாள் வாழப் பண் எதிர்கொள் பாடிப் பரம் பொருளே” என்று போற்றி உள்ளார்.

 

திருவிழா: 

சித்திரையில் இந்திர விழா, கார்த்திகை சோமவாரங்கள், மார்கழி திருவாதிரை, மாசியில் மகா சிவராத்திரி, திருக்கல்யாணம் மற்றும் அனைத்து பிரதோஷங்களும் இந்த ஆலயத்தில் வெகு சிறப்பாக நடத்தப்படுகின்றன.

 

திறக்கும் நேரம்:

காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையும்

மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும்

 

முகவரி:  

அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்,

மேலைத்திருமணஞ்சேரி-609 813.

எதிர்கொள்பாடி,

நாகப்பட்டினம் மாவட்டம்.

 

போன்:    

+91- 4364-235 487.

 

அமைவிடம்:

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் வட்டத்தில், மயிலாடுதுறை குத்தாலம் வழித் தடத்தில், குத்தாலத்தில் இருந்து அஞ்சலாறு வழியே மேலைத் திருமணஞ்சேரி செல்லலாம். புகழ்பெற்ற திருமணஞ்சேரி கோவிலுக்கு மேற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது எதிர்கொள்பாடி எனும் மேலைத் திருமணஞ்சேரி.

Share this:

Write a Reply or Comment

2 × four =