அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : கல்யாண சுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர்
அம்மன் : பரிமள சுகந்த நாயகி, கௌதகேஸ்வரர்
தீர்த்தம் : மங்கள தீர்த்தம், கௌதகா பந்தன தீர்த்தம்
புராண பெயர் : திருவேள்விக்குடி
ஊர் : திருவேள்விக்குடி
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு:
ஒருமுறை சிவனிடம் உமாதேவி சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயலை நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்துகொள்வேன் என்று வரமளித்தார். உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திராணி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான், அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார். சுய உருவம் பெற்ற அம்பிகை, ஈசனை நினைத்து 16 திங்கள்கிழமை விரதம் இருந்து மணலால் லிங்கம் செய்து பூஜை செய்து வர, 17-வது திங்கள்கிழமை சிவபெருமான் தோன்றி உமாதேவியை திருமணம் செய்துகொண்டார் என்று தல புராணம் கூறுகிறது. பார்வதி – சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியவை இத்தலத்தில்தான் நடைபெற்றன. பிரம்மா தானே முன் நின்று திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.
அரசகுமாரன் ஒருவனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின் பெண்ணின் பெற்றோர்கள் இறந்துவிட, அவளின் உறவினர்கள் அரசகுமாரனுக்கு பெண் தர மறுத்து இத்திருமணத்தை நிறுத்திவிட்டனர். அரசகுமாரன் எவ்வளவோ வேண்டியும் உறவினர்கள் சம்மதிக்கவில்லை. அரசகுமாரன் இத்தலம் வந்தான். நின்றுபோன தன் திருமணம் நடக்க வேண்டும் என்று இத்தல இறைவனை வேண்டினான். இறைவன் ஒரு பூதத்தை அனுப்பி அப்பெண்ணைக் கொண்டுவரச் செய்து அரசகுமாரனுக்கும் அப்பெண்ணுக்கும் திருமணம் செய்துவைத்தார் என்று தல வரலாறு கூறுகிறது.
கோயில் சிறப்புகள்:
- சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 23 வது தேவாரத்தலம் மூலவர் கௌதகேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர். இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
- மணவாளேஸ்வர சுவாமி திருமணக் கோலத்துடன் திகழ்கிறார்.
- இறைவனின் திருமணத் தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார்.
- சிவபெருமானின் திருமணவேள்வி நடந்த தலமாதலின் இப்பெயர் பெற்றது.
- இறைவிக்கு கங்கணதாரணம் செய்தபடியால் இதற்குக் கௌதுகாபந்தன க்ஷேத்திரம் என்றும் பெயர்.
- கோவில் 3 நிலையுடன் கூடிய கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களும் உடையதாய் திகழ்கிறது. கருவறைக்கு முன்னே அர்த்த மண்டம், மகாமண்டபம் உள்ளது. இறைவன் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், சந்திரசேகரர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலாஉருவில் அம்பாளுக்கு வலதுபுறமும் இறைவனுக்கு இடதுபுறமும் உள்ளார். அர்த்த மண்டபத்தில் நடராஜர் மற்றும் விநாயகர் இருக்கின்றார்கள். அகத்தியருக்கும் இத்தலத்தில் அர்த்த மண்டபத்தில் தனி சந்நிதி இருக்கிறது.
- அகத்தியர் வாதாபியைக் கொன்றதால் அவருக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் தான் நீங்கியது.
- செம்பியன் மாதேவி, ராஜராஜ சோழன், பராக்கிரம சோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவன் மணவாளநம்பி, மங்கலநக்கர், திருவேள்விக்குடி உடையார் என்னும் பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளார்.
- திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்
- இத்தல பதிகங்கள் இரண்டும், திருத்தருத்தி தலத்தோடு இணைந்து பாடப்பெற்றுள்ளன. இத்தல இறைவன் திருத்துருத்தியில் பகல் காலத்திலும், திருவேள்விக்குடியில் இரவிலும் வீற்றிருந்து அருள்பவர் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.
- சிவனின் தோழரான சுந்தரர் இங்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு, தனது குஷ்டத்தை போக்கிகொண்டார்.
- சிவன் தன்னில் ஒரு பகுதி பாகத்தை சக்திக்கு அளித்த தலம் இதுதான்.
- இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருமணஞ்சேரி என்ற தலத்தில்தான் சிவபெருமான் – உமாதேவி திருமணம் நடைபெற்றது.
- வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “மன்னர் சுக வாழ்வு இக் குடிகள் அடிமண் பூசலால் என்னும் வேழ்விக்குடி அமர்ந்த வித்தகனே” என்று போற்றி உள்ளார்.
திருவிழா:
மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
திருவேள்விக்குடி – 609 801,
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 4364-235 462.
அமைவிடம்:
மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்திலிருந்து ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளது திருவேள்விக்குடி. கும்பகோணத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் குத்தாலம் வந்து அங்கிருந்து ஆட்டோ, மினிபஸ் மூலம் செல்லலாம்.