அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர்
அம்மன் : பெரியநாயகி, பிருகன் நாயகி
தல விருட்சம் : எலுமிச்சை
தீர்த்தம் : அக்னி, வருண தீர்த்தம்
புராண பெயர் : திருஅன்னியூர்
ஊர் : பொன்னூர்
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு:
பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்கள் அசுரனிடமிருந்து தங்களை காத்தருளும்படி சிவனை வேண்டச் சென்றனர். அவர் யோகத்தில் இருந்ததால் மன்மதனின் உதவியால் அவரது யோகத்தை களைத்தனர். கோபம் கொண்ட சிவன் மன்மதனை திருக்குறுக்கை திருத்தலத்திலே எரித்து விட்டார். மனம் கலங்கிய ரதிதேவி சிவனிடம் தன் கணவனை மீட்டுத் தரும்படி வேண்டினாள். அவர் தகுந்த காலத்தில் மன்மதன் உயிர்பெற்று அவளுடன் சேர்வான் என்றார். கணவன் விரைவில் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவனை எண்ணி தவமிருந்து வழிபட்டாள். அவளுடைய பிரார்த்தனைக்கு செவி சாய்த்து ஈசன் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனுக்கு மீண்டும் வாழ்வு அளித்தார். மன்மதன் மீண்டும் உயிர்பெற்ற பிறகு இங்கு ரதியுடன் சேர்ந்து வழிபட்டான். இருவருக்கும் காட்சி தந்த சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். கணவனை இழந்து வாடியிருந்த ரதியின் மீது இச்சை கொண்டான் சூரியன். பதிவிரதையான ரதியோ சூரியனின் வலக்கரம் பின்னமாக சாபமிடுகிறாள். மனம் வருந்திய சூரியனோ சாபவிமோசனம் பெற அன்னியூரை அடைந்து வழிபடுகின்றான். ஈசனது பேரருளால் சூரியன் தனது இழந்த கையை மீண்டும் பெற்று விமோசனம் பெற்றான்.
கிழக்கு முகம் கொண்ட சிறிய ஆலயமாக திகழ்கிறது. இவ்வாலயத்திற்கு கோபுரம் இல்லை. கிழக்கு நோக்கிய ஒரு தோரண வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலின் மேல் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. முகப்பு வாயிலுக்கு எதிரில் வருண தீர்த்தம் அக்னி தீர்த்தம் (இரண்டும் ஒன்று) உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் ஒரு சிறிய விமானத்துடன் கூடிய நந்தி மண்டபமும் அதையடுத்து இறைவன் கருவறைக்குச் செல்லும் மற்றொரு நுழைவு வாயிலும் உள்ளன. இந்த இரண்டாவது நுழைவு வாயில் மேற்புரத்திலும் அழகிய சுதை வேலைப்பாடுகள் கொண்ட உருவங்கள் காணப்படுகின்றன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி, சந்நிதிகள் உள்ளன. கருவறை முன் உள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் பிருஹந்நாயகி சந்நிதி உள்ளது. கருவறை அர்த்த மண்டபத்தில் விநாயகர் தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை உள்ளனர். வள்ளி தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர் காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருகிறார். பிரகாரத்தில் சனீஸ்வரர், சூரியன், பைரவர் மூவரும் அருகருகில் இருக்கின்றனர். ஆதிசங்கரருக்கும் சன்னதி உள்ளது. இங்கு அருகருகே இரண்டு தட்சிணாமூர்த்தி சன்னதி இருக்கிறது. இதில் மேதா தட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் இருக்கிறது.
கோயில் சிறப்புகள்:
- சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 22 வது தேவாரத்தலம் பொன்னூர். புராணபெயர் திருஅன்னியூர். இத்தலத்திற்கு லிகுசாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம், பானுக்ஷேத்திரம் என வேறு பெயர்கள் உள்ளது.
- மூலவர் ஆபத்சகாயேசுவரர், லிகுசாரண்யேஸ்வரர், அக்னீசுவரர், பாண்டதவேசுவரர், ரதீசுவரர். இங்கு சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார்.
- ஆண்டுதோறும் பங்குனி மாதம் 25 ஆம் தேதி முதல் 29 தேதி வரை 5 நாட்கள் காலையில் சூரியக் கதிர்கள் சுவாமி மீது விழுகிறது.
- இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் உள்ளார் எனவே இவருக்கு அக்னிபுரீஸ்வரர் என்ற பெயர் வந்தது.
- அம்பாள் பிருகந்நாயகி, பெரியநாயகி. ஒரே மகாமண்டபத்தில் சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியும் அமையப் பெற்றுள்ளது.
- தீர்த்தம் வருணதீர்த்தம், அக்னிதீர்த்தம். பிராகாரத்தில் ஆதிமூல லிங்கம் அக்கினிக்குக் காட்சித் தந்த மூர்த்தி உள்ளார்.
- தட்சன் செய்த யாகத்தில் கலந்து கொண்டதால் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட அக்னிதேவன் தனது சாபம் தீர ஈசனை பல தலங்களில் வழிபட்டான். அதில் திரு அன்னியூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் தன் பெயரில் தீர்த்தம் உண்டாக்கி ஈசனை இங்கு வழிபட்டுள்ளான். இத்தீர்த்தமே அக்னி தீர்த்தம் என்ற் பெயரில் ஆலயத்திற்கு வெளியே நுழைவாயிலுக்கு எதிரே உள்ளது.
- தீரா வெண்குஷ்டத்தால் அவதியுற்ற ஹரிச்சந்திர மகாராஜா இத்தலத்தில் நீராடி இறைவனின் கட்டளைப்படி வைகாசி விசாக நன்னாளில் தயிர் சாதம் நிவேதனம் செய்து ஆபத்சகாயரை வணங்கி வழிபட்டு விமோசனம் பெற்றுள்ளார்.
- சமஸ்கிருதத்தில் லிகுசாரண்ய மகாத்மியம் என்ற பெயரில் தலபுராணம் உள்ளது.
- அரிச்சந்திரன், வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர்கள் வழிபட்டுள்ளனர்.
- திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.
திருவிழா:
மகாசிவராத்திரி, வைகாசிவிசாகம், திருக்கார்த்திகை.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 10 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,
பொன்னூர் – 609 203.
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91 4364 250 758, 250 755
அமைவிடம்:
மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் செல்கிறது. பஸ் ஸ்டாப்பில் இருந்து நடந்தே சென்று விடலாம்.