July 05 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கோவிலடி

  1. அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     அப்பக்குடத்தான்

உற்சவர்        :     அப்பால ரங்கநாதர்

தாயார்          :     இந்திரா தேவி, கமல வல்லி

தல விருட்சம்   :     புரஷ மரம்

புராண பெயர்    :     திருப்பேர்

ஊர்             :     கோவிலடி

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

ஒரு சமயம் உபமன்யு என்ற மன்னன் துர்வாச முனிவரின் கோபத்துக்கு ஆளாகிறான். முனிவர் அவனை சபித்ததால் தனது பலம் அனைத்தையும் இழந்துவிடுகிறான். தன்னை மன்னித்தருளுமாறும் தனக்கு சாப விமோசனம் தருமாறும் முனிவரிடம் மன்றாடினான் மன்னன். சற்றே இறங்கி வந்த முனிவர், பலச வனம் (புரச மரங்கள் நிறைந்த வனம்) என்று அழைக்கப்படும் இத்தலத்தில் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய். இந்த தானத்தின் மூலம் உனது சாபம் தீரும் என்றார். கோயில் அருகிலேயே ஓர் அரண்மனையைக் கட்டினான் மன்னன். முனிவரின் கூற்றுபடி அன்னதானம் செய்து வந்தான். வருவோருக்கெல்லாம் வயிறார அன்னமளித்தான் மன்னன். இவ்வாறு நீண்ட நாள் நடைபெற்றது அன்னதானம்.

ஒரு நாள் திருமால், வயது முதிர்ந்த அந்தணாராக வேடமிட்டு மன்னனிடம் வந்து அன்னம் கேட்டார். அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. மன்னனை சோதிக்க விரும்பிய திருமால், அன்றைய பொழுது தயாரிக்கப்பட்ட அனைத்து உணவு வகைகளையும் உண்டு தீர்த்தார். இதைக் கண்டு மன்னன் ஆச்சரியப்பட்டாலும், மேலும் என்ன வேண்டும் என்று அந்தணரிடம் கேட்டார். அதற்கு அவர் மீண்டும் உணவு கேட்டார்.

மன்னனும் உடனே தயார் செய்து கொடுப்பதாகக் கூறினான். இனி உணவு தயாரிக்க நேரமாகும் என்றும் தன்னால் அவ்வளவு நேரம் பசி பொறுக்க முடியாது என்றார் முதியவர். வேறு என்ன செய்வது மன்னர் யோசனை செய்யும்போதே முதியவர் தனக்கு ஒரு குடம் அப்பம் வேண்டும் என்று கேட்டார். அதன்படி அப்பம் அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த அப்பக் குடத்தை திருமால் வாங்கிய வேளையில், மன்னனின் சாபம் தீர்ந்தது. இதனால் மன்னன் மனம் மகிழ்ந்தான். மன்னனிடம் இருந்து அப்பக்குடத்தை, திருமால் பெற்றதால் இவருக்கு ‘அப்பக்குடத்தான்’ என்ற பெயர் வழங்கலாயிற்று

 

கோயில் சிறப்புகள்:

  • இறைவன் கருவறையில் புஜங்க சயனத்தில் உள்ளார். தாயார் கமலவல்லி அமர்ந்த கோலத்தில் காட்சி. உற்சவர் செப்புத் திருமேனிகள் உள்ளன.

 

  • நம்மாழ்வாரால் பாசுரஞ் சூட்டப்பட்ட இத்தலம் திருப்பேர் நகர் என்றால் யாருக்கும் தெரியாது. கோவிலடி என்று சொன்னாலே எல்லோருக்கும் தெரியும்.

 

  • பஞ்ச ரங்கம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்கங்களில் இதுவும் ஒன்று:

ஆதிரங்கம் – ஸ்ரீரெங்கப்பட்டினம் (மைசூர்)

அப்பால ரெங்கம் – திருப்பேர் நகர்

மத்தியரங்கம் – ஸ்ரீரெங்கம்

சதுர்த்தரங்கம் – கும்பகோணம்

பஞ்சரங்கம் – இந்தளூர் (மாயவரம்)

 

  • நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்களால் 33 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். நம்மாழ்வார் இப்பெருமானைப் பாடிவிட்டுத்தான் மோட்சத்திற்குச் சென்றார். நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது தான்.

 

  • திருமங்கையாழ்வார் இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துவிட்டு திருவெள்ளறை பெருமாளை தரிசிக்கச் செல்கிறார். அவரைத் தொடர்ந்து செல்கிறார் அப்பக்குடத்தான் பெருமாள். இதனால் திருவெள்ளறையில் வைத்து அப்பக்குடத்தான் பெருமாளை மீண்டும் மங்களாசாசனம் செய்கிறார் திருமங்கையாழ்வார்.

 

  • அப்பம் அமுது செய்து தினந்தோறும் படைக்கப்படும் திவ்ய தேசம் இது ஒன்றுதான்.

 

  • ஸ்ரீரங்கத்துக்கும் முன்னதாகவே இத்தலம் ஏற்பட்டது என்றும் அதனால்தான் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஆதியாக அடியெடுத்து வைத்த தலம் என்பதால் ‘கோவிலடி’ என்று அழைக்கப்பட்டது என்றும் கூறுவர்.

 

  • இத்தலத்துக்கு வந்து வணங்கி இந்திரன் தனது கர்வம் நீங்கப் பெற்றான். மார்கண்டேயருக்கு எம பயம் போக்கி, உபரிசிரவசு மன்னனுக்கு சாபம், பாவம் போக்கி அருளிய தலம்.

 

  • இத்தல மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் இந்திர விமானம் என்று அழைக்கப்படும். மேற்கு நோக்கிய வண்ணம் புஜங்க சயன கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். தாயார் கிழக்கு பார்த்து அருள்பாலிப்பதால் தம்பதி சமேத பெருமாளாக இத்தலத்தில் அப்பக்குடத்தான் அருளுகிறார்.

 

  • பராசரரும் இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்துள்ளார். இத்தல விநாயகர் இந்திரனுக்கு சாப விமோசனம் பெற வழிகாட்டியதால், வழிகாட்டி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

 

  • கொள்ளிடத்தின் தென்கரையில் அமைந்துள்ள திருப்பேர் நகர் என்னும் அப்பக்குடத்தான் திருக்கோவில் ஆற்றங்கரைக் கோவிலாகவும் மாடக்கோவிலாகவும் காட்சியளிக்கின்றது. இக்கோவில் சோழர்கள் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டுள்ளது.

 

திருவிழா:

புரட்டாசி மாதம் கிருஷ்ணனுக்கு உரியடி உற்சவம்,

நவராத்திரி, மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி உற்சவம்,

பங்குனி உத்திர உற்சவத்தில் திருத்தேர் விழா, தீர்த்தவாரி

 

திறக்கும் நேரம்:

காலை 8.30 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில்,

கோயிலடி (திருப்பேர் நகர்) – 613105

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 4362 – 281 488, 281 460, 281 304,99524 68956

 

அமைவிடம்:

திருச்சியிலிருந்து (25 கி.மீ.) கல்லணை வந்து, அங்கிருந்து கோவிலடி வழியாக திருக்காட்டுப் பள்ளி செல்லும் பஸ்சில் வரவேண்டும்.

 

Share this:

Write a Reply or Comment

8 + 20 =