அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : கடைமுடிநாதர்
அம்மன் : அபிராமி
தல விருட்சம் : கிளுவை
தீர்த்தம் : கருணாதீர்த்தம்
புராண பெயர் : திருக்கடைமுடி, கீழூர், கிளுவையூர்
ஊர் : கீழையூர்
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு:
ஆணவம் கொண்டதால் சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மா பூலோகத்தில் பல இடங்களில் சிவபூஜை செய்து வழிபட்டார். அவர் இத்தலத்தில் இறைவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி இறைவனைப் போற்றி வணங்கி வந்தார். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு பிரம்ம தீர்த்தம் எனப் பெயரிட்டு அப்புனித நீரால் இறைவனை வழிபட்டார். இந்த பிரம்ம தீர்த்தம் ஆலயத்தின் நேர் எதிரில் அழகுற விசாலமாக அமைந்துள்ளது. மகிழ்ந்த சிவன் அவருக்கு ஒரு கிளுவை மரத்தின் அடியில் காட்சி தந்தார். பிரம்மா தனக்கு விமோசனம் கேட்டபோது தகுந்த காலத்தில் விமோசனம் கிடைக்கப்பெறும் என்று ஆறுதல் கூறினார். பின் பிரம்மாவின் வேண்டுதல்படியே அவர் இத்தலத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.
கண்வ மகரிஷியும் (சகுந்தலையின் வளர்ப்புத்தந்தை) இத்தல இறைவனை வழிபட்டு தன் புண்ணிய பலன்களைப் பெருக்கிக் கொண்டார் என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். இவர் காவிரியில் நீராடி வழிபட்ட இடம் இன்று கண்வமகான் துறை என்ற காரணப் பெயர் கொண்டு வளங்குகிறது. இத்தல இறைவன் கடைமுடிநாதர் என்றும், வடமொழியில் அந்திசம்ரட்சணேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். கடைமுடிநாதர் என்ற பெயரினால் நாம் நமது ஆயுளின் கடைசி காலத்தில் அவரைப் பற்ற வேண்டும் என்றும், அந்திசம்ரட்சணேசுவரர் என்ற பெயரினால் நமது அந்திமக் காலத்தில் அதாவது இறுதிக் காலத்தில் நம்மைக் காப்பவர் அவரே என்று நமக்குத் தெளிவாக புலப்படுத்துகிறார்.
கோயில் சிறப்புகள்:
- சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 18 வது தேவாரத்தலம் கீழையூர். புராணபெயர் திருக்கடைமுடி, கிளுவையூர், கீழூர். மூலவர் கடைமுடிநாதர் அந்திசம்ரக்ஷணீஸ்வரர். அம்பாள் அபிராமி என்ற பெயருடன் தெற்கு நோக்கி அருள் காட்சி தருகிறாள்.
- தீர்த்தம் கருணாதீர்த்தம், தலமரம் கிளுவை. பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ் கிளுவைநாதர் இருக்கிறார்.
- இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக சற்று உயர்ந்த பாணத்துடன் அருள்பாலிக்கிறார். இவர் பதினாறு பட்டைகளுடன் சோடஷ லிங்க அமைப்பில் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார்.
- சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார்.
- இத்தலவிநாயகர் கடைமுடிவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
- இத்தல கடைமுடிநாதர் பெயர் வடமொழியில் அந்தஸம்ரக்ஷணேஸ்வரர் என்று பெயர். கடைமுடிநாதரை நாம் நமது ஆயுளின் கடைசி காலத்தில் அவரைப் பற்ற வேண்டும் என்றும் அந்தஸம்ரக்ஷணேஸ்வரர் என்ற பெயர் நமது இறுதிக் காலத்தில் நம்மைக் காப்பவர் என்றும் பொருள்.
- உலகம் அழியும் இறுதிக்காலத்திலும் காப்பாற்றுபவராக இங்கு சிவபெருமான் அருளுகிறார். எனவே இவருக்கு கடைமுடிநாதர் என்று பெயர்
- கோவில் ஒரு முகப்பு வாயிலுடன் காட்சி தருகிறது .ராஜகோபுரமில்லை. இறைவனின் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது.
- ஏழு ஊர்கள் சேர்ந்து மிகப் பெரிய ஊராண இவ்வூர் ஏழூர் என்று பெயர் பெற்றிருந்தது. பின் மருவி கீழூர் ஆனது.
- மேற்கு பார்த்து அமைந்த சிவதலம் இது.
- இத்தலத்தில் காவிரி நதி வடக்கு முகமாக வந்து மேற்கு நோக்கி ஓடுகிறது.
- எண்கோண வடிவில் உள்ள ஆவுடையாரில் கிரகங்கள் ஒவ்வொன்றும் நேர்வரிசையில் இல்லாமல் முன்னும் பின்னுமாகவும் அமைந்திருக்கின்றது.
- இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி இடது காதில் வளையம் அணிந்தும் வலது காதில் வளையம் இல்லாமலும் காட்சி தருகிறார். இவரைப்போலவே பைரவரும் வலது காதில் வளையம் இல்லாமல் இருக்கிறார்.
- இங்கு அம்பாள் வரப்பிரசாதியாக இருக்கிறாள். தெற்கு நோக்கியிருக்கும் இவளது சன்னதி எதிரேயும் ஒரு வாசல் இருக்கிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு வித்தியாசமான பிரார்த்தனை செய்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இவளுக்கு தாலி கட்டி வேண்டிக்கொள்கின்றனர். வரன் அமைந்த பிறகு மீண்டும் அம்பாள் கழுத்திலிருக்கும் தாலியை தங்களது கழுத்தில் கட்டி அம்பாளை வணங்கிவிட்டு மீண்டும் அதனை அம்பாளுக்கே கட்டிவிடுகின்றனர்.
- வள்ளல் பெருமான் தாம்பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “மாவின் இடைமுடியின் தீங்கனி என்று எல்லின் முசுத் தாவும் கடைமுடியின் மேவும் கருத்தா” என்று போற்றி உள்ளார்.
- பிரமன், கண்வமகரிஷி ஆகியோர் வழிபட்டுள்ளனர்,
- திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.
திருவிழா:
மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில்
கீழையூர் – 609 304.
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 4364 – 283 261, 283 360, 94427 79580.
அமைவிடம்:
மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மேலப்பாதியைக் கடந்து பூம்புகாருக்கு முன்னால் உள்ள கீழையூரில் இத்தலம் அமைந்துள்ளது. கீழையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கி.மீ. நடந்தால் கோயிலை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
மயிலாடுதுறை – பொறையார் சாலையிலுள்ள மற்றொரு பாடல் பெற்ற திருத்தலமான திருசெம்பொனார்கோவிலில் (காவிரி தென்கரைத் தலம்) இருந்து திருநனிபள்ளி (புஞ்சை) வழியாகவும் இத்தலத்திற்கு செல்லலாம்.