அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில் வரலாறு
மூலவர் : வான்முட்டி பெருமாள்
உற்சவர் : யோகநரசிம்மர்
தாயார் : மகாலட்சுமி
தீர்த்தம் : பிப்பல மகரிஷி தீர்த்தம்
ஊர் : மயிலாடுதுறை
மாவட்டம் : மயிலாடுதுறை
ஸ்தல வரலாறு:
குடகு மலைச் சாரலில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். பல மருத்துவர்கள் முயன்றும் அவனது நோயை குணப்படுத்த முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாத அந்த நோயாளி, மனம் போன போக்கில், நடக்கத் தொடங்கினான். அப்படி சென்று கொண்டிருந்த ஒரு நாளில், அவனது காதுகளில் தெய்வீக வீணை ஓசை கேட்டது. ஓசை வந்த திசையை நோக்கி நடந்தான். அங்கே ஒரு முனிவர் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல, நாரத முனிவர். அவரை வணங்கி நின்றான், அந்த தொழு நோயாளி. “இளம் வயதில் காடுகளில் பதுங்கி இருந்து, வழிப்போக்கர்களை வழி மறித்து, கொலை செய்து கொள்ளையடித்து வாழ்ந்ததின் விளைவு இந்த வியாதி” என்று முனிவரிடம் கூறினான். அந்த நோயாளிக்காக மனம் இரங்கிய நாரதர், அவனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்தார். அந்த மந்திரத்தை தினந்தோறும் ஜெபிக்கும்படி கூறினார். நோயாளியும் அப்படியேச் செய்து வந்தான்.
ஒரு நாள் ஒரு அசரீரி ஒலித்தது. உனக்கு கடுமையான தோஷம் உள்ளது. அது நீங்குவதற்கு காவிரிக் கரையில் காணப்படும் ஆலயத் திருக்குளங்களில் எல்லாம் நீராடி வா. எந்த தீர்த்தத்தில் உன் நோய் குணமாகிறதோ அங்கே நீ பாவ விமோசனம்அடைந்து முக்தி பெறுவாய் என்றது. மனம் மகிழ்ந்த அவன், தன் பயணத்தைத் தொடர்ந்தான். காவிரிக் கரையில் உள்ள ஆலயங்களுக்கு எல்லாம் சென்று, அங்கிருந்த திருக்குளங்களில் நீராடினான். அதன் ஒரு கட்டமாக மூவலூர் திருத்தலம் வந்து சேர்ந்தான். அங்கு அருள்பாலிக்கும் மாணிக்க சகாயேஸ்வரரை மனமுருக வணங்கி நின்றான். அப்போது, பக்தா! உனது துயர் நீங்கும் காலம் வந்துவிட்டது. வடக்கே சற்று தொலைவில் ஒரு திருக்குளம் தென்படும். அதில் நீராடு. உன்னை பற்றியிருக்கும் பிணிகள் யாவும் நீங்கும்” என்று ஒரு அசரீரி ஒலித்தது.
அதன்படியே அந்த நோயாளி சென்று நீராடினான். அவனது பிணி நீங்கி, பொன் நிற மேனி கொண்டவனாக மாறினான். தன்னை அழகுடையவனாக மாற்றி, இறைவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு வடதிசை நோக்கி புறப்பட்டான். ஓரிடத்தில் ஒரு பெரிய அத்தி மரம் தோன்றியது. அந்த மரத்தில் சங்கு, சக்கரம், கதை, அபய ஹஸ்தம் தாங்கி பெருமாள் காட்சி அளித்தார். அவரது மார்பில் இருந்து ஒரு ஒளிப் பிழம்பானது, விண்ணும் மண்ணும் நிரம்ப நின்றது.
பக்தா! பொன்னி நதியில் நீராடி நோயில் இருந்து விடுபட்ட உன்னை இனி பிப்பிலர் என அனைவரும் அழைப்பர். நீ நீராடிய தீர்த்தம் இனி பிப்பில மகரிஷி தீர்த்தம் என அழைக்கப்படும். இந்த காவிரி தீர்த்த கட்டத்தில் நீராடுபவர்களின் பிறவிப் பிணி, மெய்ப் பிணி, பாவப் பிணி அனைத்தும் நீங்கும் என அருளி மறைந்தார். பிப்பில மகரிஷியின் கோடிஹத்தி தோஷங்களையும் இத் தலம் நிவாரணம் செய்ததால் இத்தலம் கோடி ஹத்தி எனவும், பாப விமோசனபுரம் எனவும் அழைக்கப்படலாயிற்று. கோடிஹத்தி என்ற பெயர் நாளடைவில் மருவி, தற்போது இத்தலம் கோழிகுத்தி என்று விளங்குகிறது. இங்கு அருளும் பெருமாள் வானமுட்டி பெருமாள் என்று பெயர் பெற்றுள்ளார்.
கோயில் சிறப்புகள்:
- கோடிஹத்தி எனும் பெயர்தான் மருவி கோழிகுத்தி என்றாகிவிட்டது என்கிறார்கள். சாபவிமோசனபுரம் என்பதுதான் கோடிஹத்தியின் பூர்வ பெயர்.
- பிற்காலத்தில் இந்தத் தலத்தின் மகிமையை அறிந்த அரசர் ஒருவர், தான் போர்மூலம் புரிந்த கொலைப் பாவத்தைப் போக்க 48 நாள்கள் பிப்பல தீர்த்தத்தில் நீராடி தவம் இருந்து வழிபட்டார். அப்போதும் அந்த அரசருக்குக் காட்சிதந்தார் ஸ்ரீ வானமுட்டி பெருமாள். மெய் சிலிர்த்த அரசன் தேர்ந்த சிற்பிகளைக் கொண்டு பகவான் காட்சிதந்த அத்திமரத்தில் பெருமாளின் உருவத்தைச் செய்யச் சொல்லி கோயில் எழுப்பி வழிபட்டான். பெருமாள் காட்சி தந்த இடத்துக்கு முன்னால் உள்ள குளம், ‘விஸ்வரூப புஷ்கரணி’ என்று அழைக்கப்படுகிறது.
- அத்திமரத்தினால் ஆன திருமேனி என்பதால் வரதராஜ பெருமாளுக்கு அத்திவரதர் என்ற திருநாமம் ஏற்பட்டது. அதேபோன்று, கோழிகுத்தி என்னும் இடத்தில் 800 ஆண்டுகள் பழைமையான வேரோடு கூடிய ஓர் அத்திமரத்தினால் ஆன பெருமாள் திருமேனி வழிபாட்டில் இருக்கிறது. மேலும் அந்த மரத்தின் வேர் பல இடங்களிலும் பரவியிருக்கிறது. இத்தகைய சிறப்புகளையுடைய திருத்தலம், கோழிகுத்தி எனும் கிராமத்தில் உள்ள ஸ்ரீவானமுட்டி பெருமாள் ஆவார்
- ஸ்ரீவானமுட்டி பெருமாள் இந்தப் பெருமாள் 14 அடி உயரத்தில் விஸ்வரூப தரிசனம் அருள்கிறார். இவரைத் தரிசனம் செய்தால் திருப்பதி சீனிவாச பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாகத் தரிசித்த பலன் கிடைக்கும்’ என்கிறார்கள் பக்தர்கள்.
- சீனிவாசப் பெருமாள் சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஏந்தி, மார்பில் மகாலட்சுமி யுடன் அருள்பாலிக்கிறார். இவர் மிகப்பிரமாண்டமாக விஸ்வரூபத்தில் அமைந்திருந்ததால் “வான்முட்டி பெருமாள்’ என அழைக்கின்றனர். இவர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால், அபிஷேம் கிடையாது. தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. உற்சவமூர்த்தியாக உள்ள யோக நரசிம்மருக்கே அபிஷேகம்.
- வான்முட்டி பெருமாளின் மார்பில் இருக்கும் மகாலட்சுமி, அவரது அருகில் சிலைவடிவிலும் அருள் செய்கிறாள்.
- இங்கு, பெருமாளுக்கு இடப் பக்கத்தில் பூதேவித் தாயாரின் சிறு விக்கிரகம் உள்ளது. தாயாருக்கெனத் தனி சந்நிதி இல்லை. ஒரே ஒரு பிராகாரம்தான் இருக்கிறது.
- ஸ்ரீபிரகலாதனுக்கு அருள் செய்த ஸ்ரீநரசிம்ம மூர்த்திதான் இங்கே உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீயோக நரசிம்மர் இரண்டு கைகளில் சங்கு – சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார். இந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி எந்தவொரு கொடிய துன்பத்தையும் நொடியில் போக்கி அருள்பவர்.
- கோழிகுத்தி ஸ்ரீவானமுட்டி பெருமாள் அத்திமரத்தால் எழுந்தருளியிருப்பதால் கருவறையில் எந்தவித விளக்குகளும் ஏற்றப்படுவதில்லை. அபிஷேகங்கள் நடைபெறாது.
- இத்திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு ’சப்தஸ்வர ஆஞ்சநேயர்’ என்று பெயர். இந்தத் திருமேனியின் மீது 7 இடங்களில் தட்டினால் ‘சரிகமபதநி’ என்று சப்தஸ்வரங்களும் எழுகின்றன.
- கருடாழ்வார், ராமானுஜர், விஸ்வக்ஷேனர் ஆகியோரும் இங்கு அருள் பாலிக்கிறார்கள். இத்தலத்தின் அருகிலுள்ள மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயிலில் பிப்பலருக்கு சிலை உள்ளது.
- ராஜகோபுரத்தின்கீழ் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயன், பலிபீடம், கொடிமரம், விநாயகர், கருடாழ்வார் உள்மண்டபத்தில் மூலவருக்கு வலப்புறம் சக்கரத்தாழ்வாரும், இடப்புறம் யோகநரசிம்மரும் கிழக்கு நோக்கியவாறும்; நர்த்தன கிருஷ்ணர் தெற்கு நோக்கியவாறும் அருள் புரிகின்றனர்.
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில்,
கோழிகுத்தி, – 609001.
மயிலாடுதுறை மாவட்டம்.
போன்:
+91- 4364223395, 9842423395, 9787213226
அமைவிடம்:
இருப்பிடம்: கும்பகோணம் – மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள மூவலூரிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் கோழிகுத்தி உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து வானாதிராஜபுரத்திற்கு செல்லும் மினிபஸ்களிலும் கோயிலுக்கு செல்லலாம்