அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : மதுவனேஸ்வரர், பிரஹதீஸ்வரர்
அம்மன் : மதுவன நாயகி, பிரஹதீஸ்வரி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், சூல தீர்த்தம், கோங்கு, வேங்கை
புராண பெயர் : மதுவனம், திருநன்னிலத்துப் பெருங்கோயில்
ஊர் : நன்னிலம்
மாவட்டம் : திருவாரூர்
ஸ்தல வரலாறு:
துவாபர யுகத்தில் விருத்திராசூரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அசுரனின் கொடுமைகளுக்கு பயந்த தேவர்கள் சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். அசுரர்களை ஏமாற்ற இத்தல இறைவன் தேவர்களை தேனீக்களாக மாற்றிவிட்டார். அத்துடன் இங்குள்ள கர்ப்பகிரகத்தில் தேனீக்களை கூடுகட்டி வசிக்கச் செய்து லிங்க வழிபாடு செய்யும்படி கூறினார். தேவர்கள் தேனீக்கள் வடிவம் கொண்டு வழிபட்டதால் இறைவன் “மதுவனேஸ்வரர்” என்றும் அம்மன் “மதுவன நாயகி”‘ என்றும் பெயர் பெற்றனர். தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் மதுவனம் என்று பெயர் பெற்றது. இப்போதும் சுவாமியின் கர்ப்பகிரகத்திலும், கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள மறைவிடங்களிலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் தேனீக்கள் வசித்து வருகின்றன.
ஒருசமயம் தேவர்களின் சபையில் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். வாயுபகவானால் மகா மேருவை அசைக்க முடியவில்லை. இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். வாயு பகவான் மகா மேருவின் ஒரே ஒரு சிகரத்தை பெயர்த்து தெற்கில் உள்ள கடலில் போட எடுத்துச் செல்லும் போது அந்த சிகரத்தின் சிறிய துளி இந்த தலத்தில் விழுந்ததாக தல புராணம் கூறுகிறது. சமவெளியாக இருந்த இப்பகுதியில், சிகரத்தின் துளி விழுந்த பகுதி சிறிய மலையாக மாறி அதன் மீது கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது
கோயில் சிறப்புகள்:
- கோச்செங்கட் சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரனமாக, யானை ஏறமுடியாத மாடக் கோவில்கள் 70 கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோவிலும் அத்தகைய ஒரு மாடக் கோவில்.
- முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோவில், 270 அடி நீளமும், 135 அடி அகலமும் கொண்டது. கோவிலின் ராஜகோபுரம் 2 நிலைகளைக் கொண்டது.
- மூலவர் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. படிகளேறி மேலே செல்ல வேண்டும். கட்டுமலை மீதுள்ள பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி அழகாக உள்ளது. மூலவர் மதுவனேஸ்வரர், சதுர ஆவுடையார் மீது சற்றுயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. விசேஷ காலங்களில் குவளை, நாகாபரணம் சார்த்தப்படுகிறது.
- தனி சந்நதியில் அம்பாள் அருளும், அழகும் ஒருங்கிணைந்த திருக்கோலம் காட்டுகிறாள். மதுவனநாயகி அம்மை. வலக்கரத்தில் மணிமாலையும், இடக்கரத்தில் தாமரையும், வரத-அபய ஹஸ்தங்களோடு காட்சி தருகிறாள்.
- கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
- நன்னிலத்து துர்க்கை அம்மன் சக்தி வாய்ந்தவளாகப் போற்றப்படுகிறாள்.
- தெற்கில் எமனும், மேற்கில் வருணனும், கிழக்கில் இந்திரனும், வடக்கில் குபேரனும் லிங்கம் அமைத்து பூஜை செய்துள்ளார்கள். இந்திரன் முதலான தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.
- பிருஹத்ராஜனின் கோரிக்கைக்கு இணங்கி, சிவபெருமான் ஆலயத்தின் வடக்கே தனது சூலாயுதத்தால் ஒரு குளத்தை உருவாக்கி, தன் தலையில் உள்ள கங்கையை அதில் நிரப்பினாராம். இது சூலதீர்த்தம், பிருஹத் தீர்த்தம், மது தீர்த்தம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஜலந்திரன் என்ற அசுரனை எம்பெருமான் வதம் செய்தபோது வீசிய சக்கரம், இத்தலத்தினருகில் விழுந்ததாம். அங்கு உருவான தீர்த்தம் சக்கரக்குளம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. இது ஆலயத்தின் கிழக்கே சற்று தொலைவில் உள்ளது.
- சுந்தரர் தனது பதிகத்தில் இக்கோவிலை பெருங்கோயில் என்று அடைமொழி கொடுத்து சிறப்பித்துப் பாடியுள்ளார். தனது பதிகத்தின் கடைசி பாடலில் இக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது எனபதையும் குறிப்பிட்டுள்ளார்.
- வெளிப் பிரகாரத்தின் நேர் எதிரில் பிரமன் வழிபட்ட பிரம்ம்புரீஸ்வரர் சந்நிதியும், பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. இந்த பிரகாரம் வலம் வரும்போது சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், தனி சன்னதிகள் உள்ளன.
- வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “ஆஞ்சி இலாது, இந்நிலத்தும், வான் ஆதி எந்நிலத்தும் ஓங்கு பெரு நன்னிலத்து வாழ் ஞானநாடகனே” என்று போற்றி உள்ளார்.
திருவிழா:
திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், திருவாதிரை இம்மூன்று திருவிழாவிற்கும் சுவாமி புறப்பாடு உண்டு. ஆடி சுவாதியில் சுந்தரருக்கு குருபூஜை. பிரதோஷம், மாத சிவராத்திரி உள்பட சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் ஸ்ரீ மதுவனேஸ்வரர் சுவாமி வார வழிபாட்டு கழகம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மதுவனேஸ்வரர் கோயில்,
நன்னிலம்- 610 105.
திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91- 94426 82346, +91- 99432 09771.
அமைவிடம்:
கும்பகோணம் – நாகூர் சாலை மார்க்கத்தில் நன்னிலம் ஊர் இருக்கிறது. மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் இருந்தும் நன்னிலம் வரலாம். நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் போகும் பாதையில் அரசு மருத்துவமனை எதிரில் செல்லும் வழியில் சென்றால் கோயிலை அடையலாம்.