May 16 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீ வாஞ்சியம்

  1. அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     வாஞ்சிநாதேஸ்வரர்

அம்மன்         :     மங்களநாயகி, வாழவந்தநாயகி

தல விருட்சம்   :     சந்தன மரம்.

தீர்த்தம்         :     குப்தகங்கை, எமதீர்த்தம்.

புராண பெயர்    :     திருவாஞ்சியம்

ஊர்             :     ஸ்ரீ வாஞ்சியம்

மாவட்டம்       :     திருவாரூர்

 

ஸ்தல வரலாறு:

பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென் திசைக்கு வந்தனர். அப்போதுதான் காவிரிக் கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்கவடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டுவிட்டனர். இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன.

 

“எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார்’ என எமதர்மராஜா மிகவும் வருந்தினார்.  திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, “”வேண்டும் வரம் கேள்,”என்றார். அதற்கு எமனும், “”இறைவா! அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர். பல கொலைகளால் தீராத பிரம்மஹத்தி தோஷம் பிடித்து என்னை வாட்டுகிறது. பாவம் தொடர்கிறது.  பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டும் எமன் இத்தலம் வந்து தனக்கு ஏற்படும் பாவம் தீர சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இறைவனும் உயிர்களை எடுக்கும் பாவமும் பழியும் எமனை வந்தடையாது என்று வரம் அளித்தார். மேலும் இத்தலத்தில் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும், அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்றும் அருளினார். அவ்வாறே இத்தலத்தில் க்ஷேத்திர பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற வரமும் அளித்தார். அதன்படி நாள்தோறும் எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும். மரணபயம், மனக்கிலேசம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு அடுத்தப்படி நிகரற்ற தலம் திருவாஞ்சியம் ஆகும்.

 

கோயில் சிறப்புகள்:

  • காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவாஞ்சியம் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருசாய்க்காடு மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும். இவற்றில் திருவாஞ்சியம் காசியை விட 1/16 பங்கு மேலானதாக கருதப்படுகிறது.

 

  • இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சியளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதாகும்.

 

  • தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி (வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இதுவாதலால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப்படுகிறது. சுமார் 558 அடி நீளமும், 320 அடி அகலமும் உடைய இவ்வாலயம் 3 கோபுரங்களுடனும், 3 பிரகாரங்களும் உடையது. பிரதான இராஜ கோபுரம் 5 நிலைகளுடன் கம்பீரமாக காட்சி தருகிறது.

 

  • இத்தலத்தில் யமதர்மனுக்கு தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சம். கோவிலின் அக்னி மூலையில் எமனுக்கும், சித்ரகுப்தனுக்கும் தெற்கு நோக்கிய தனி சந்நிதி உள்ளது.

 

  • மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்கள் பாவங்கள் தீர்ப்பதால் தன்னிடம் சேர்ந்துவிட்ட பாவங்களைக் போக்கிக் கொள்ள கங்கை இறைவனை வேண்டினாள். இறைவனும் எமனுக்கே பாவவிமோசனம் தந்த இத்தலத்தில் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்யும்படி கூறினார். கங்கையும் தனது கலைகளில் ஒன்றைத் தவிர மற்ற 999 கலைகளுடன் இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் ஜக்கியமாகி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டாள். இத்தலத்து தீர்த்தமும் குப்த கங்கை எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும், தேவியும் பிரகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியருள்கின்றனர்.

 

  • உட்பிரகாரத்தில் பைரவர் சந்நிதி உள்ளது. பைரவர் இங்கு யோகநிலையில் காணப்படுகிறார்.

 

  • இறைவனே எல்லாமுமாக இருப்பதால் நவக்கிரக சன்னதி இல்லை.

 

  • தலவிநாயகர் அபயங்கர விநாயகர் என்ற பெயருடன் இங்கு விளங்குகிறார். இக்கோவிலின் சண்டிகேஸ்வரர் யம சண்டிகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் தலவிருட்சம் சந்தன மரம். கருவறை சுற்றில் உள்ள தெற்குப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் உருவச்சிலைகள் உள்ளன. மஹாலக்ஷ்மி மற்றும் மகிஷாசுரமர்தினியின் சந்நிதிகளும் இங்குள்ளன.

 

  • இத்தலத்திலுள்ள லக்ஷ்மி தீர்த்தம், நாக தீர்த்தம் மற்றும் சக்கர தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றன. இவை மூன்றும் முறையே லக்ஷ்மி, ஆதிசேஷன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

  • மூலவர் ‘வாஞ்சிநாதர்’ என்னும் திருநாமத்துடன், சற்று உயர்ந்த பாணத்துடன், பெரிய அளவிலான லிங்க வடிவில் காட்சியளிக்கின்றார். அம்பாள் ‘மங்கள நாயகி என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

 

  • பிரம்மா, சூரியன், பராசர முனிவர், அத்திரி மகரிஷி, எமதர்மன் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.

 

  • இத்தலம் மூவர்த் தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரி தென்கரைத் திருத்தலமாகும். மாணிவாசகப் பெருமானும் கீர்த்தித் திருவகவலிலும், திருக்கோவையாரில் 268-வது பாடலிலும் இத் திருத்தலத்தைக் குறித்துள்ளார். இது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்பிலும் சிறந்து விளங்குகிறது. இத்தலம் ஸ்கந்தபுராணம், பிரும்மாண்டபுராணம், ஆக்நேயபுராணம் ஆகிய வடமொழி நூல்களில் மிகவும் சிறப்புடன் போற்றப்பட்டுள்ளன.

 

  • இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

 

  • திருஞானசம்பந்தர் 2 பதிகங்களும், திருநாவுக்கரசர் 2 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். திருவாசகத்திலும் இடம் பெற்றுள்ள தலம்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “ஆம் ககனம் தாம் சியத்தை வேங்கைத் தலையால் தடுக்கின்ற வாஞ்சியத்தின் மேவு மறையோனே” என்று போற்றி உள்ளார்.

 

திருவிழா: 

எல்லாக் கோயில்களிலும் பிரம்மோற்ஸவம் முடிந்த பிறகே தீர்த்தவாரி நடத்தப்படும். அன்று சுவாமியை கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர். இத்தலத்தில், தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம் பிரம்மோற்ஸவத்தின் இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர். இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி. அன்றைய தினம் வாஞ்சிநாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள் முருகனுக்கு உற்சவம் நடைபெறும். கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை வேளையிலும் தீர்த்தவாரி நடப்பதுண்டு. ஆடிப்பூரத்தை ஒட்டியும் 10 நாள் திருவிழா உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில்,

ஸ்ரீ வாஞ்சியம் – 610 110

திருவாரூர் மாவட்டம்.

 

போன்:    

+91-4366 291 305, 94424 03926, 93606 02973.

 

அமைவிடம்:

கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக நன்னிலம் செல்லும் சாலை வழியில் உள்ள அச்சுதமங்கலம் என்ற ஊரிலிருந்து தெற்கே 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருவாரூர், நன்னிலம் ஆகிய ஊர்களில் இருந்தும் திருவாஞ்சியம் அடைய முடியும். அருகிலுள்ள பெரிய ஊர் நன்னிலம். நன்னிலத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும், திருவாரூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் திருவாஞ்சியம் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

2 × three =