May 16 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பழைய சீவரம்

  1. அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     லட்சுமி நரசிம்மர்

தாயார்     :     அகோபிலவல்லி தாயார்

ஊர்       :     பழைய சீவரம்

மாவட்டம்  :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு:

இமயமலையிலுள்ள நைமிசாரண்யத்தில் வசித்த மரீசிமுனிவர், மற்ற முனிவர்களிடம் பூலோகத்தில் உள்ள சத்திய விரத ÷க்ஷத்திரமான காஞ்சிபுரத்தில் தவம் செய்தால் இறையருள் உண்டாகும் என தெரிவித்தார். இந்த சமயத்தில், விகனஸருடைய சீடரான அத்ரிமகரிஷி, விஷ்ணுவை லட்சுமிநரசிம்மர் கோலத்தில் தரிசிக்க விருப்பம் கொண்டிருந்தார். அப்போது அசரீரி ஒலித்தது. வெங்கடாஜலபதி வீற்றிருக்கும் திருமலைக்கு தெற்கிலும், பாடலாத்ரிக்கு மேற்கிலும் இருக்கும் பத்மகிரி என்னும் மலைக்குச் செல். அந்த மலை யட்சர், கின்னரர், கந்தர்வர்களால் வழிபாடு செய்யப்பட்ட பெருமை மிக்கது. அங்கு வழிபட்டால் லட்சுமி நரசிம்மரின் தரிசனம் கிடைக்கும், என்றது. அத்ரி பத்மகிரியை அடைந்தார். அங்கு கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து கொண்டு வந்த தாமரை மலர் பூத்த குளத்தைக் கண்டார். அதன் கரையில், இருந்த அரசமரத்தடியில் தவத்தில் ஆழ்ந்தார். அவரின் பக்திக்கு மகிழ்ந்த, விஷ்ணு, லட்சுமிதாயாரை மடியில் அமர்த்திய கோலத்தில் சாந்த நரசிம்மராக காட்சியளித்தார். அதே கோலத்தில் இன்றும் கோயில் கொண்டிருக்கிறார். விஷ்ணு லட்சுமியோடு வாசம் செய்யும் தலம் என்பதால் ஸ்ரீபுரம் எனப்பட்ட இத்தலம் சீவரம் என மாறியது. பழமையான ஊர் என்பதால் பழைய சீவரம என பிற்காலத்தில் மருவியது. ஸ்ரீ என்றால் லட்சுமி. பிரம்மாண்ட புராணத்தில் இக்கோயில் வரலாறு உள்ளது.

 

கோயில் சிறப்புகள்:

  • ஸ்ரீபுரி, ஸ்ரீபுரம், சீயபுரம், சீவரம், ஜீயர்புரம், விண்ணபுரம், பழைய சீவரம் மற்றும் திரிபுவன வீர சதுர்வேதி மங்கலம் என்று பலவாறு அழைக்கப்பட்ட திருத்தலம் பழைய சீவரம். ஊர் பெயரிலேயே பழைய என்ற சொல் உள்ளது. பல்லவர் காலம் தொட்டு பழைமை மிக்க ஊராக பழைய சீவரம் திகழ்ந்துள்ளது.

 

  • பழைய சீவரம் மலைக்கோயில் போன்று திகழ்கிறது.

 

  • புராணங்களின்படி, “ஸ்ரீபுரம்’ எனப்பட்டது. “ஸ்ரீ’ ஆகிய இலக்குமியுடன் பெருமாள் அமர்ந்திருக்கும் ஊர் ஆதலால் ஸ்ரீபுரம் என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் சீவரம் ஆனது. மிகவும் பழைமையான ஊர் என்பதால் பழைய சீவரம் என்றானது.

 

  • மூலஸ்தானத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மேற்கு திருமுகமாக வீற்றருள்கிறார். இக்கோயில் மூலஸ்தானம், விமானம், அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், கொடிமரம், பலிபீடம், திருச்சுற்று பிராகாரம், கருடாழ்வார் சந்நதி, யாகசாலை, கண்ணாடி அறை, மடப்பள்ளி, ராஜகோபுரம், நான்குகால் மண்டபம், வாகன மண்டபம், ஆகிய பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது.

 

  • இக்கோயில் மூலஸ்தானம் செவ்வக வடிவுடையது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் லட்சுமி நரசிம்மர் இடக்காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டு பத்மபீடத்தில் ஊன்றிய நிலையில் சதுர்புஜங்களுடன் ஸ்ரீலட்சுமி தேவியை இடது தொடையின் மீது அமர்த்தி ஆலிங்கனம் செய்த வண்ணம் மேற்கு திசையை நோக்கி அருட்பாலிக்கிறார்.

 

  • நரசிம்மரின் மேல் வலக்கரம் கத்தரி முத்திரையில் சக்கராயுதத்தைப் பற்றியுள்ளது. அவ்வாறு மேல் இடக்கரம் கத்தரி முத்திரையில் சங்கினை ஏந்தியுள்ளது. கீழ் வலக்கரம் அபயஹஸ்தம் காட்டுகிறது. கீழ் இடக்கரம் இடது தொடையில் வீற்றிருக்கும் திருமகளை ஆலிங்கனம் செய்த வண்ணம் அமைந்துள்ளது.

 

  • அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரஹரி இவர். நரசிம்மரின் திருமுக மண்டலம் சிம்ம முகமாக அமைந்துள்ளது. சிங்கபிரானின் தலையை கிரீடமகுடம் அலங்கரிக்கிறது. திருமார்பில் மகரகண்டிகையும், கௌஸ்துபமும் அலங்கரிக்கிறது. புஜங்களில் கேயூரமும், பாஜிபந்தமும், முன்கரங்களில் வளைகளும், நாபியின் மேல் உதரபந்தமும், இடையிலிருந்து முழங்கால் வரை வஸ்திர அலங்காரமும் பாதங்களில் பாதசரமும் அணிந்து வனப்போடு காட்சியளிக்கிறார்.

 

  • ஸ்ரீலட்சுமியாகிய திருமகள் சிங்கபிரானின் இடது தொடைமீது இரு கரங்களுடன் அமர்ந்துள்ளாள். அவளது இடக்கரம் கடக ஹஸ்தத்தில் தாமரை மலரைப் பற்றியுள்ளது. வலக்கரம் அழகிய சிங்கபிரானை அணைத்து ஆலிங்கனம் செய்த வண்ணம் காட்சியளிக்கிறது. திருமகளின் தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்கிறது. காதிலும், கழுத்திலும், மார்பிலும், இடையிலும், திரு பாதத்திலுமாக குண்டலங்கள், கண்டாபரணம், முத்துவடம், மணிவடம், ஒட்டியாணம், மேகலை, வஸ்திர கட்டு, கொலுசு, சதங்கையாவும் அணி செய்ய எழிலுருவாய் காட்சியளிக்கிறாள்.

 

  • ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் சுமார் 6 அடி உயரத்தில் ஸ்ரீ மஹாலட்சுமியைத் தன் மடியிலே இருத்திக்கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பொங்க காட்சி அளிக்கிறார். தனிக்கோயில் நாச்சியார், அஹோபிலவல்லி தாயாருக்குத் தனி சந்நியும் உண்டு.

 

  • அத்ரி முனிவர் இங்கு கார்த்திகை மாதம் வந்து தங்கி தவம் செய்தார். தவக்கோலத்தில் பெருமாளை முழுவதும் தரிசனம் செய்யாமல் திருமுக மண்டல தரிசனம் மட்டும் செய்தார். ஆதலால் இத்தலத்தில் அத்திரி முனிவர் தரிசனம் செய்த அதே கோலத்தில் கார்த்திகை மாதத்தில் தரிசனம் செய்யலாம். இதனை, “அர்த்த ரூப சேவை’ என்பர்.

 

  • இந்த பழைய சீவரம் தலத்திற்கு மற்றுமோர் சிறப்பும் உண்டு. பேரருளாளன் என போற்றப்படும் காஞ்சி வரதராஜ பெருமாள் ஆதியில் அத்தி மரத்தால் ஆன மூலவராக இருந்து அருள்பாலித்து வந்தார். பின்பு கால ஓட்டத்தில் அந்த அத்தி வரதர் உருவத்தில் சிறு பின்னம் ஏற்பட்டதால், வேறு சிலை நிறுவ எண்ணிய பெரியோர்கள் இந்த பத்மகிரியில் இருந்துதான் தற்போதுள்ள வரதராஜர் சிலையை செய்து காஞ்சிக்கு எடுத்து சென்று பிரதிஷ்டை செய்தார்கள் என சொல்லப்படுகிறது. பழைய சீவரத்தில் இருந்து வந்த வரலாற்றை நினைவு படுத்தும் வகையிலே காஞ்சிவரதர் ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வோர் வருடமும் மாட்டு பொங்கல் தினத்தன்று பார்வேட்டை அல்லது பரிவேட்டைக்கு இந்த ஊரில் வந்து தங்குகிறார்.

 

  • ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் கொண்ட இக்கோயிலில் லட்சுமி நரசிம்மசுவாமி, அகோபிலவல்லி தாயார், ஆண்டாள், மகாதேசிகன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், விஷ்ணுசித்தர் போன்றோருக்கு என உபசந்நிதிகளும் உள்ளன.

 

 

திருவிழா: 

நரசிம்ம ஜெயந்தி, ஆடிப்பூரம், கிருஷ்ணஜெயந்தி, ஸ்ரீராமநவமி, வைகுண்டஏகாதசி.

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்

பழைய சீவரம்,

காஞ்சிபுரம்.

 

போன்:    

+91 44- 2729 0550.

 

அமைவிடம்:

செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் சாலையில் பழையசீவரம் 10 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ.

Share this:

Write a Reply or Comment

two × four =