அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில் வரலாறு
மூலவர் : சதாசிவமூர்த்தி
உற்சவர் : சதாசிவம்
அம்மன் : சிவகாமி
தல விருட்சம் : புளியமரம்
தீர்த்தம் : சடாமகுடம்
ஊர் : புளியரை
மாவட்டம் : தென்காசி
ஸ்தல வரலாறு:
சமண மதம் மேலோங்கியிருந்த காலத்தில், சிதம்பரம் நடராஜர் கோயில் அவர்களின் ஆளுகைக்குட்பட்டு இருந்தது. இதனால் சிவபக்தர்கள் நடராஜர் சிலையை எடுத்துக் கொண்டு தெற்கே வந்தனர். திரிகூடாசல மலை எனப்படும் குற்றாலத்தைக் கடந்து, புளியமரங்கள் நிறைந்த வனத்தை அடைந்தனர். பொதிகைமலையைக் கடந்து சேரநாட்டு எல்லைக் காட்டுக்கு வந்தனர். அந்த காடு மூங்கில் மரங்களும் புளியமரங்களும் நிறைந்ததாக இருந்தது. பகலிலும் இருள் சூழ்ந்த அந்தக் காட்டில் நடராஜரின் படிமத்தை மறைத்து வைக்க விரும்பினர். அப்போது வானத்தில் ஒரு கருடன் வட்டமிட்டது, அதை அடையாளமாக வைத்து ஒரு புளியமரத்தை தேர்வு செய்தனர். அந்த புளியமரத்தில் இருந்த பொந்தில் தில்லை மூலவர் படிமத்தை மறைத்து வைத்துவிட்டு தங்கள் ஊரான தில்லைக்கு திரும்பி சென்றனர். அந்த மரம் இருந்த பகுதி தனியார் ஒருவருக்கு சொந்தமானது. அவர் புளிய மரத்திலிருந்த படிமத்தைக் கண்டு மகிழ்ந்து அப்படியே வைத்து வழிபட்டார். ஆண்டுகள் பல உருண்டோடிச் சென்றன. தில்லையில் சமயப் பகை நீங்கியது. தீட்சிதர்கள் மூலவரைத் தேடி தென்திசை வந்தனர். மூலவரை வைத்த இடம் அவர்களுக்கு மறந்து விட்டது, வைத்த இடம் தெரியவில்லை. அந்த தீட்சிதர்கள் மனம் வருந்தி கண்ணீர் மல்க தில்லை நோக்கி கைகூப்பி நடராஜரை தொழுதனர்.
அந்த சமயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. சாரை சாரையாய் எறும்பு செல்லும் வழி செல்லுங்கள் என கேட்டது. தீட்சிதர்களும் அவ்வாறே சென்றனர். தங்களின் நாயகன் மரப் பொந்தில் வழிபடுகோலமாய் இருப்பதைக் கண்டனர். கண்ணீர் மல்க அந்த மூர்த்தியை எடுத்துச் சென்றனர். சுவாமியை பூஜிக்க வந்த மரத்தின் உரிமையாளர் சிலை காணாமல் போனது கண்டு வருந்தினார். சுவாமியை வேண்டினார். அந்த இடத்தில் மீண்டும் எழுந்தருள வேண்டினார். சுவாமி லிங்க வடிவில் அங்கே சுயம்புவாக (தானாக) தோன்றினார். இவரை சதாசிவம் என அழைத்தார். இதையறிந்த அப்பகுதி மன்னர் அவ்விடத்தில் கோயில் கட்டினார்.
கோயில் சிறப்புகள்:
- இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- தல புராணத்தில் கண்டவாறு இன்னொரு வரலாறும் வழங்கப்படுகிறது. கேரளம் கொட்டாரக்கரை அரசனுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. அரசர் சிவனை வேண்டினார். சிவபெருமான் கனவில் தோன்றி புளியறை காட்டில் தான் சுயம்புவாக தட்சிணாமூர்த்தியாக இருப்பதைக் கூறி கோயில் கட்டுவதற்கு கட்டளையிட்டார். அரசரும் ஆண்டவரின் கட்டளைக்கிணங்க அப்படியே செய்தார். புளியமரத்தின் அடியில் தோன்றியதால் புளியறை ஆனது
- சிவனுக்கும் அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவன் வடக்குபுறமும் அம்பாள் தெற்குபுறமும் நின்று அருள் பாலிக்கின்றனர்..
- சிவன் சன்னதிக்கு முன்புறம் தட்சிணாமூர்த்தி சன்னதி அமைந்துள்ளது. சிவனையும் தட்சிணாமூர்த்தியையும் ஒன்றாக தரிசிக்கலாம்.
- இறைவன் திருநாமம் சதாசிவ மூர்த்தி. இறைவியின் திருநாமம் சிவகாமி. புளிய மரத்தடியில் சிவபெருமான் காட்சி அளித்ததால், இத்தலம் புளியரை என அழைக்கப்பட்டது. இந்த ஊர் சின்ன சிருங்கேரி என்ற சிறப்பையும் பெற்றது.
- பொதுவாக சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்தி, தெற்கு திசை பார்த்து அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு மூலவர் சதாசிவ மூர்த்தி லிங்கத்திற்கும், வாசலில் உள்ள நந்திக்கும் இடையே தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கின்றார். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் இடையே
- தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருப்பது வேறெந்த தலத்திலும் இல்லாத விசேஷ அம்சமாகும். நேர்க்கோட்டில் அமர்ந்து அருள்பாலிக்கும் மூவரையும் ஏக காலத்தில் ஒரே இடத்தில் இருந்தபடி தரிசிக்கலாம் என்பது மேலும் ஒரு சிறப்பாகும்.
- கோயிலுக்குள் நுழைய 27 படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை 27 நட்சத்திரங்களாக கருதப் படுகின்றன.
திருவிழா:
தை மாதம் 10 நாட்கள் பிரதானத்திருவிழா, மகாசிவராத்திரி, நவராத்திரி, ஆடிப்பூரம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஸ்ரீசதாசிவமூர்த்தி திருக்கோயில்,
புளியரை – 627 813,
திருநெல்வேலி மாவட்டம்.
போன்:
+91- 4633 – 285518, 285490
அமைவிடம்:
தென்காசியில் இருந்து புளியரை செல்ல பல பஸ்கள் உள்ளன. ஸ்டாப்பில் இறங்கி ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள கோயிலை அடையலாம். தென்காசியில் இருந்து தெற்குமேடு செல்லும் பஸ்களில் சென்றால் கோயிலில் இறங்கலாம். திருநெல்வேலியில் இருந்து 78 கி.மீ., குற்றாலத்தில் இருந்து 18 கி.மீ., செங்கோட்டையில் இருந்து 8 கி.மீ.,