May 11 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   பாடகச்சேரி

  1. அருள்மிகு கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்

தாயார்     :     ஸ்ரீதேவி, பூதேவி

ஊர்       :     பாடகச்சேரி

மாவட்டம்  :     திருவாரூர்

 

ஸ்தல வரலாறு:

இந்தத் திருநாமத்துக்கு ராமாயணக் கதையில் இருந்து பெயர்க் காரணம் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள். சீதாதேவியை வஞ்சகமான திட்டத்தின் மூலம் ராவணன் கவர்ந்து சென்றது அனைவருக்கும் தெரியும். தன் கணவர் குடிலில் இல்லாதபோது இப்படி இவர் இவன் கடத்திச் செல்ல முற்படுகிறானே என்று சீதாதேவி ராவணனிடம் கதறினாள். தன்னை விடுவிக்குமாறு வேண்டினாள். ஆனால், அவளது பேச்சை லட்சியம் செய்யாமல், புஷ்பக விமானத்தில் அவளுடன் இலங்கையை நோக்கிப் பறந்தான் ராவணன், அப்போதுதான் சீதாதேவிக்கு ஓர் எண்ணம் உதித்தது. அதாவது, ராவணன் தன்னை எங்கே கடத்திச் சென்று வைத்திருக்கிறான் என்பதை தன்னைத் தேடி வரும் ஸ்ரீராமபிரான் அறிந்து கொள்வதற்கு வசதியாக, கழுத்திலும் கைகளிலும் கால்களிலும் தான் அணிந்திருக்கும் ஆபரணங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி பூமியில் போட்டுக் கொண்டே போனாளாம். அப்படி அவள் அணிந்திருந்த பாடகம் எனப்படும் காலில் அணியக் கூடிய கொலுசை ஓரிடத்தில் கழற்றிப் போட்டாள். இறுதியில் இலங்கையில் சிறை வைக்கப்பட்டாள். சிறையில் இருந்து தன்னை மீட்கச் செல்ல ஸ்ரீராமபிரான் வர மாட்டாரா என்று ஏங்கித் தவிக்க ஆரம்பித்தாள்.

குடிலில் சீதாதேவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியாகி, அவளைத் தேடிப் புறப்பட்டனர் ராமனும் லட்சுமணனும். சீதாதேவி அணியும் ஆபரணங்களை ஆங்காங்கே தரையில் கண்டார் ஸ்ரீராமபிரான். அந்த ஆபரணங்கள் கிடைத்த வழியைத் தொடர்ந்தே தன் தேடுதல் யாத்திரையை நடத்தினார். ஒரு கிராமத்தில் சீதாதேவியின் பாடகம் எனப்படும் அணிகலன் தரையில் கிடப்பதைப் பார்த்த ஸ்ரீராமபிரான், தம்பி லட்சுமணா… இந்த அணிகலனைப் பார். இது யாருடையது? என்று கேட்டபோது, லட்சுமணன் முகம் மலர்ந்து, இது என் அண்ணியாருடையது. அவர் தன் திருப்பாதங்களில் இந்த பாடகங்களை அணிந்திருப்பார். இந்தக் காட்சியை நான் தரிசித்திருக்கிறேன் என்று உளம் மகிழ்ந்து சொன்னானாம். அதுவரை தரையில் விழுந்து கிடந்த மற்ற ஆபரணங்களை ஸ்ரீராமபிரான் காட்டிக் கேட்டபோது, இது அண்ணியாருடையதா என்று எனக்குத் தெரியாது என்றே சொல்லி வந்த லட்சுமணன், காலில் அணியும் பாடகத்தைக் கண்டு, இது நிச்சயம் அண்ணியார் அணியும் அணிகலன்தான் என்று உறுதிபடச் சொன்னது, ராமனுக்குப் பெருத்த மகிழ்வைத் தந்ததாம். அண்ணியாரை – ஒரு தெய்வமாக எந்த அளவுக்கு லட்சுமணன் தொழுது வந்திருக்கிறான் என்கிற பக்தி உணர்வு அப்போது வெளிப்பட்டது. பாடகத்தைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார் ராமபிரான். இதனால் இந்த ஊருக்கு பாடகப்பதி என்றும் (பின்னாளில் பாடகச்சேரி), இங்கு அருள் பாலிக்கும் பெருமாளுக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்கிற திருநாமமும் வந்ததாகச் சொல்கிறார்கள்

 

கோயில் சிறப்புகள்:

  • ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

 

  • ஸ்ரீ தேவி, பூதேவி உடனாய தாயார்களுடன் நெகிழ்வான மகிழ்வான திவ்யமான தரிசனம் தருகிறார் கண்டுளம் மகிழ்ந்த பெருமாள். மூலவர்களான இந்தக் கல் திருமேனிகள் தவிர கருடாழ்வார், தும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீராமானுஜர் ஆகியோரின் திருமேனிகளும் இங்கு உள்ளன. பெருமாளுக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற புதுமையான திருநாமம்.

 

  • மூலமூர்த்திகள் கருவறையிலிருந்து அகற்றப்பட்டு ஓலைவேய்ந்த சிறுகுடிசைகுள் சுமார் 250 வருடமாக வைக்கப்பட்டுள்ளது. மூன்றரையடி உயரமுள்ள திருமேனியழகு வார்த்தைகளுக்கு அடங்காத வனப்புடன் திகழ்கிறது. ஸ்ரீதேவி, பூதேவியும் மிகவும் அழகாக இருக்கிறார்கள்.

 

  • இந்த ஆலயம் சோழர்களால் கட்டப்பட்டிருக்கிறது. இத்தல பெருமாளை தரிசித்தால், மனதால் நினைத்தால் அவர்களின் மகிழ்ச்சி இருமடங்காகும் என்பது ஐதீகம்.

 

  • பெருமாள் கண்திறந்து பக்தர்களை பார்க்கும் கோலத்தில் இருக்கிறார். இதைக் காணும் பக்தர்கள் உள்ளம் மகிழ்வதால் இவருக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. என்றும் கூறுகிறார்கள்.

 

 

திருவிழா: 

ஆடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில்,

பாடகச்சேரி -612 804,

வலங்கைமான்

திருவாரூர் மாவட்டம்

 

போன்:    

+91 97517 34868

 

அமைவிடம்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் இருந்து சுமார் கிலோமீட்டர் தொலைவிலும், குரு ஸ்தலமான 3 ஆலங்குடியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் – மன்னார்குடி செல்லும் வழித்தடத்தில் இங்கு வர பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன. மேலும் நீடாமங்கலத்தில் இருந்து ஆட்டோ வசதியும் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

two × two =